ஓட்டலில் அத்துமீறிய இளைஞரை தட்டிக்கேட்ட பெண்கள் மீது சரமாரி தாக்குதல் - சீனாவில் பரபரப்பு சம்பவம்

சீனாவில் ஓட்டலில் அத்துமீறிய இளைஞரை தட்டிக்கேட்ட பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-13 00:08 GMT

கோப்புப்படம்

பீஜிங்,

சீனாவின் ஹூபெய் மாகாணம் டாங்ஷான் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அந்த இளம்பெண்ணை தகாத முறையில் தொட்டு அத்துமீறினார். இதனால் அந்த பெண் இளைஞரை தள்ளிவிட்டார். மேலும் இதுகுறித்து அவர் தட்டிக்கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் அந்த பெண்ணை தாக்க தொடங்கினார். அதை தொடர்ந்து ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த இளைஞரின் நண்பர்களும் ஓட்டலுக்குள் வந்து அந்த பெண்ணை தாக்கினர். இதை தடுக்க முயன்ற இளம் பெண்ணின் தோழிகளையும் அவர்கள் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் அந்த இளம்பெண்ணை தரையில் தள்ளி தலைமுடியை பிடித்து தரதரவென ஓட்டலுக்கு வெளியே இழுத்து சென்று அடித்தும், உதைத்தும் துன்புறுத்தினர்.

அப்போது ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த மற்றொரு பெண் அதை தடுக்க முயன்றபோது அவரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதனிடையே ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவின.

அதைத்தொடர்ந்து நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் இந்த விவகாரம் சீனாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்