பிலிப்பைன்சில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி கர்ப்பிணி உள்பட 4 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கர்ப்பிணி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-10-26 22:22 GMT

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் கியூசான் மாகாணம் பரங்கி உமிரேயில் உள்ள சிட்டியோ ஏஞ்சலோவில் பருவநிலை மாற்றம் காரணமாக தொடர் மழை கொட்டி தீர்த்து வருகிறது. பேய்மழை காரணமாக நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மலைபாங்கான பகுதியான அங்கு சிறு சிறு சுரங்கங்கள் தோண்டப்பட்டு உள்ளூர் மக்கள் தங்கத்தை வெட்டி எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கனமழை காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள சுரங்கங்கள் திடீரென இடிந்து விழுந்து பெரும் சேதத்தை சந்தித்தன. மேலும் நிலச்சரிவு காரணமாக மலை அடிவாரத்தில் இருந்த நூற்றுக்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதைந்தன.

இந்த திடீர் பேரழிவு காரணமாக நிலச்சரிவில் சிக்கி பலர் மண்ணிற்குள் புதைந்தனர். தகவல் அறிந்த ராணுவத்தினர் பேரிடர் மீட்புத்துறையினருடன் களத்தில் இறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கி உயிருடன் புதைந்த கர்ப்பிணி பெண் உள்பட 4 பேரின் உடல்களை தோண்டி எடுத்தனர். மேலும் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்