காசா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்: 28 பேர் பலி
தெற்கு காசாவின் அகதிகள் முகாமில் நேற்று முன்தினம் இரவில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.;
Image Courtacy: AFP
ரபா,
இஸ்ரேல்-ஹமாஸ் போர் 100 நாட்களை கடந்து நீண்டு வருகிறது. தெற்கு காசாவை முற்றுகையிட்டு தரை மற்றும் வான்வழியாக சரமாரியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன்படி மருத்துவமனைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் வீடுகளை குறிவைத்து இஸ்ரேல் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேல் மீது போர் நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நேற்று முன்தினம் இரவில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் பல குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதில் இடிபாடுகளில் சிக்கி பெண்கள், சிறுவர்கள் உள்பட 28 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இதனிடையே கான் யூனிஸ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் அடுத்தடுத்து வான்தாக்குதல் நடத்தியது. இதில் பலர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.