மிரட்டும் சீனா; அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் தைவான் செல்வாரா? - உச்சபட்ச பரபரப்பு

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

Update: 2022-08-02 06:59 GMT

Image Courtesy: APF

வாஷிங்டன்,

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி. இவர் அரசு முறை பயணமாக மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மலேசியா வந்தடைந்த நான்சிக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து சிங்கப்பூர் சென்ற நான்சி சிங்கப்பூர் அதிபர், பிரதமரை சந்தித்தார்.

இந்நிலையில், ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக நான்சி பொலேசி இன்று இரவு தைவான் நாட்டிற்கு பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தைவான் செல்லும் நான்சி அந்நாட்டு அதிபர் டிசைங்க் வென்னை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் இருந்து பிரிந்த தைவான் சுதந்திர நாடா அறிவித்துள்ள நிலையில் அதை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. தைவான் தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்றும் தேவை ஏற்படும் பட்சத்தில் தைவான் மீது படையெடுத்து நாட்டுடன் இணைத்துக்கொள்வோம் என்றும் சீனா தொடர்ந்து மிரட்டி வருகிறது.

சீனாவின் போர் விமானங்கள் அவ்வப்போது தைவான் வான் எல்லைக்குள் நுழையும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதேவேளை, தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இதன் காரணமாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி தனது ஆசிய பயணத்தின்போது இன்று தைவான் பயணம் மேற்கொள்வார் என்று வெளியான தகவல் ஆசியாவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

நான்சி பொலேசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டால் அதை எங்கள் ராணுவம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, நான்சி பொலேசி தைவானுக்கு செல்ல உரிமை உள்ளதாவும், இது குறித்து இறுதி முடிவை நான்சி தான் எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நான்சி பொலோசி தைவானுக்கு செல்லும்பட்சத்தில் அது சீனாவுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி தைவான் மீது ராணுவ ரீதியில் தாக்குதலை நடத்தவும் வாய்ப்பு உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த பயணம் சீனா - அமெரிக்கா இடையே போரை ஏற்படுத்தவும் வழிவகுக்கலாம் என்பதால் உலக நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்