மீண்டும் கைது ஆகிறாரா இம்ரான் கான்? குவிக்கப்பட்ட போலீஸ்- பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த நாட்டில் மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-05-18 09:24 GMT

லாகூர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த 9-ந்தேதி இஸ்லாமா பாத் கோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை துணை ராணுவம் கைது செய்தது. அவர் அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் வன்முறை ஏற்பட்டது. இம்ரான்கான் கைது சட்ட விரோதம் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான்கான் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் லாகூரில் உள்ள இம்ரான்கான் வீட்டை பஞ்சாப் மாகாண போலீசார் சுற்றி வளைத்து உள்ளனர்.

இதுதொடர்பாக இம்ரான்கான் வெளியிட்ட வீடியோயில் கூறும்போது, 'எனது அடுத்த கைது நடவடிக்கைக்கு முன் நான் வெளியிடும் கடைசி டுவிட் பதிவாக இது இருக்கக்கூடும். எனது வீட்டை போலீசார் சுற்றி வளைத்து உள்ளனர். நான் நாட்டை விட்டு வெளியேறும் கேள்விக்கே இடமில்லை. எனது கடைசி மூச்சு வரை பாகிஸ்தானிலேயே இருப்பேன்' என்றார். லாகூரில் உள்ள இம்ரான் கான் வீட்டில் 30 முதல் 40 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பஞ்சாப் மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பஞ்சாப் மாகாண மந்திரி அமீர் மிர் கூறும்போது, 'மே 9-ந்தேதி ராணுவ நிலைகள் மற்றும் ராணுவ தளபதிகள் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்திய சுமார் 30 முதல் 40 பயங்கரவாதிகள் இம்ரான் கானின் ஜமானிபார்க் இல்லத்தில் பதுங்கி இருப்பதாக எங்களுக்கு உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளது.

அவர்களை போலீசாரிடம் ஒப்படைக்க 24 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த காலக்கெடு இன்று மதியம் 2 மணிவரை உள்ளது. அதுவரை இம்ரான்கான் மற்றும் ஆதரவாளர்களை கைது செய்யும் திட்டம் மாகாண அரசாங்கத்திடம் இல்லை. காலக்கெடுவுக்குள் அவர்களை ஒப்படைக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இம்ரான்கான் வீட்டுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளது. அவரது வீட்டை போலீசார் அதிகாலையில் சுற்றி வளைத்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு தேடிய பொறுப்புடன் பணியகம் சம்மன் அனுப்பி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்