பாகிஸ்தான்: மின் தடை குறித்து மதவழிபாட்டு தலத்தில் வாக்குவாதம்; துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி

பாகிஸ்தானில் மின் தடை குறித்து மதவழிபாட்டு தலத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

Update: 2022-07-01 17:25 GMT

லாகூர்,

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான மின் தடை நிலவி வருகிறது. இதனிடையே, அந்நாட்டின் பெஷாவர் மகாணம் லாகி மார்வட் மாவட்டம் இசக் ஹெல் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது.

இந்த வழிபாட்டு தளத்தில் இன்று வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் பங்கேற்றனர்.

வழிபாட்டை முடித்துவிட்டு அங்கு அனைவரும் பேசிக்கொண்டிருந்தபோது தங்கள் பகுதியில் நிலவி வரும் தொடர் மின் தடை குறித்து சிலர் பேசினர். அப்போது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் ஒருவரை ஒருவர் சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சியடைந்தவர்கள் மத வழிபாட்டு தலத்தில் இருந்து அலறியடித்து ஓடினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் 6 வயது குழந்தையும் அடக்கம்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்