உணவை தானம் செய்வீர்! வீண் விரயம் செய்யாதீர்!!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16–ந் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2017-03-09 23:30 GMT
வ்வொரு ஆண்டும் அக்டோபர் 16–ந் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை கொண்டாடுவதின் நோக்கம்: ‘உலகில் வாழும் அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும். உணவு இல்லாமல் யாரும் மரணம் அடையக்கூடாது. மேலும் வறுமையையும், பசிக்கொடுமையையும் முற்றாக ஒழித்திட வேண்டும்’.

ஆண்டுதோறும் உணவு தினத்தை உலக நாடுகள் கொண்டாடி வருவது ஒருபுறம் இருந்தாலும், ஒவ்வொரு வருடமும் உணவு கிடைக்காமல் பலகோடி பேர் திண்டாடிக் கொண்டு இருப்பதும் நடக்கத்தான் செய்கிறது.

உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியில் பரிதவித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கையில் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளது.

சத்தான உணவு கிடைக்காமல் சோமாலியாவில் பிறக்கும் ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்துவிடுகிறது. இந்த நிலைமை ஆப்பிரிக்கா முழுவதும் நீடிக்கிறது.

பசி என்றால் என்னவென்று தெரியாதவர்களால் எப்படி பிறரின் பசியை தீர்க்கமுடியும்? சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், குளிரூட்டப்பட்ட அறையில் கூடி ‘பசியை தீர்ப்பது எப்படி?’ என்று விவாதிப்பது எந்தவித பலனையும் தராது.

உலகமயம், தாராளமயம் எனும் கோ‌ஷமும், செயல் வடிவமும் உலகளாவிய அளவிற்கு கோலோச்சும் இந்த தருணத்தில் உணவை ஏன் உலக மயமாக ஆக்கவில்லை? அதை ஏன் தாராளமயமாக ஆக்கவில்லை? உணவு பண்டங்கள் ஒருவரிடம் மட்டும் குவிந்து விடாமல், அதை அனைவருக்கும் பரவலாக்க வேண்டும் எனும் திட்டம் ஏன் செயல்படுத்தப்படவில்லை? இதற்கான விடை: இவர்கள் பசிக்கொடுமையை ஒரு போதும் பார்த்திராதவர்கள்.

மக்களுடன் மழையிலும், வெயிலிலும் கலந்துறவாடி அவர்களின் பசிக்கொடுமையை கண்ணால் கண்டு, அதை தானும் அனுபவித்து, பசிக்கொடுமையை நன்றாக உணர்ந்து, வறுமையில் வாடி வதைந்து போன ஒருவரால் மட்டுமே பசியை போக்க முடியும். பசியின் கொடுமைக்கு ஒரு விடியலை கொண்டு வர முடியும். இப்படிப்பட்ட ஒரு மனிதரை உலகில் காணமுடியுமா? ஆம், இப்படிப்பட்ட ஒரு மனிதரை உலகம் கண்டுள்ளது. அவர்தாம் மாமனிதர் நபிகளார் முகம்மது (ஸல்) அவர்கள்.

‘‘நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்கள் இறக்கும் வரை, அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாட்கள் வயிறு நிரம்ப          உண்டதில்லை’’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி:5374).

‘‘இரண்டு மாதங்கள் நபி (ஸல்) அவர்களின் வீடுகளில் அடுப்பு மூட்டப்படவில்லை! என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தபோது அவர்களின் சகோதரியின் மகன் உர்வா (ரலி) அவர்கள் ‘‘உங்களின் வாழ்க்கை எவ்வாறு கழிந்தது?’’ என சிற்றன்னையை நோக்கி கேட்டார். ‘‘இரண்டு கருப்பு வண்ணங்களால் (அதாவது பேரீத்தம்பழம், நீர்) வாழ்க்கை கழிந்தது’’ என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். (புகாரி)

உணவை பரவலாக்க நடவடிக்கை

சில நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வருகை புரிந்து ‘‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உண்ணுகிறோம் என்றாலும் வயிறு நிரம்        பாதவர்களாக இருக்கின்றோம்’’ என்று முறையிட்டார்கள்.  

இதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘‘நீங்கள் பிரிந்தவாறு சாப்பிட்டீர்களா?’’ எனக்கேட்டார்கள்.

அதற்கு நபித்தோழர்கள் ‘‘ஆம்’’ என பதில் கூறினார்கள்.  

இதற்கான தீர்வை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்கள்:

‘நீங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள்; பிரிந்து விடாதீர்கள். ஏனெனில், நிச்சயமாக ஒருவரின் உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு மூவருக்குப் போதுமானதாகும். மேலும், நால்வருக்குக்கூட போதுமானது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். பிரிந்து விடாதீர்கள். அபிவிருத்தி என்பது ஒரு கூட்டமைப்பில்தான் உள்ளது’.

‘‘இருவரின் உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்’’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி:5392).

‘ஒருவரின் உணவு இருவருக்குப் போதுமானது. இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானது. நால்வரின் உணவு எட்டு நபருக்குப் போதுமானது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்).

உலகம் முழுவதும் 100 கோடி மக்கள் உணவின்றி பட்டினியால் வாடுகிறார்கள். இவர்களின் பசியைப் போக்க மாநபியின் மகத்தான திட்டம் நிச்சயம் கை கொடுக்கும்.

ஒருவரின் உணவை மற்றவருக்கும் பகிர்ந்து அளித்து சாப்பிட்டால் இந்த கொடுமையான நிலைமை ஏற்பட்டிருக்காது. உலக மக்கள் தொகை 600 கோடியையும் தாண்டி வளர்ச்சி அடைந்து வருகிறது.

100 கோடி மக்களின் உணவு 200 கோடி மக்களுக்குப் போதுமானதாகும். இவ்வாறு அனைத்து மக்களும் தங்களுக்குள் உணவை பகிர்ந்து அளித்து சாப்பிடும் முறையை கடைப்  பிடித்து வாழ்ந்தால் பட்டினியால் பரிதவிக்கும் மக்களின் பசிப்பிணியை போக்கலாம்.

100 கோடி மக்கள் தங்களின் உணவு முறையில் மாற்றம் கொண்டு வந்தால் நிச்சயம் பசியில்லாத உலகை கட்டி அமைக்கலாம். தங்களின் தேவைக்கு உணவை உண்ண வேண்டும். வாங்கிச் சாப்பிட வேண்டும். தங்களிடம் மித மிஞ்சிய பணம் கையில் இருக்கிறது என்பதற்காக கண்டபடி உணவு பண்டங்களை வாங்கி சமைத்து சாப்பிட்டு, மீதமுள்ளதை குப்பையில் கொட்டும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

நீங்கள் குப்பையில் கொட்டும் உணவு பண்டங்கள் பிறரின் உணவு என்பதை மறந்து விடக்கூடாது. பிறரின் உணவையும், நீங்கள் ஆக்கிரமித்து, வீண் விரயம் செய்து பாழாக்கி விட்டீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாழாக்கும் உணவை பிறருக்கும் கிடைத்திட பரவலாக்கினால் 100 கோடி மக்களின் பசியை நீக்கலாம்.

‘‘உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் வீண் விரயம் செய்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை’’ என்பது திருக்குர்ஆன் (7:31) வசனமாகும்.

உணவு தானம் உன்னதமானது. உணவை தானம் செய்வீர், வீண் விரயம் செய்வதை தவிர்ப்பீர்.

மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி,
பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

மேலும் செய்திகள்