அனுமன் ஜெயந்தியன்று தங்க கவசத்தில் அருள்பாலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.;

Update:2025-12-18 14:42 IST

மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுள்களுக்கும், தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம் மார்கழி ஆகும். இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவர் ஆஞ்சநேயர். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். அனுமன் ஜெயந்தியை கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.

நாமக்கல் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு நாளை (19-12-2025) வெள்ளிக்கிழமை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வடைமாலை அபிஷேக ஆராதனையுடன் அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை சுவாமிக்கு வடைமாலை அலங்காரம், காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. மதியம் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்படும்.

அனுமன் ஜெயந்தி மட்டுமின்றி தினமும் இங்கு சிறப்பு பூஜை நடைபெறும். தினமும் காலை 9 மணிக்கு 1008 வடை மாலை சார்த்தப்பட்டு பூஜை செய்யப்படும். பின்னர் பல்வேறு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பபடும். சுவாமிக்கு ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்