ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் மாடவீதிகளில் கோதாதேவி உலா
மார்கழி மாதம் கோவிலில் தினமும் அதிகாலை திருவெம்பாவை பாராயணம் செய்யப்படும்.;
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மார்கழி மாதத்தின் 2-வது நாளான நேற்று காலை முதல் மாலை வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் உற்சவர் கோதாதேவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டலத்தில் உற்சவர் கோதாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கோதாதேவி, கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மார்கழி மாதம் முழுவதும் கோவிலில் தினமும் அதிகாலை திருவெம்பாவை பாராயணம் செய்யப்படும்.
நிகழ்ச்சியில் கோவில் துணை செயல் அலுவலர் வித்யாசாகர், கண்காணிப்பாளர் நாகபூஷனம், கோவில் ஆய்வாளர் வெங்கடசுவாமி மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.