அரபிக்கடலோரம் அமைந்த அழகு!

கர்நாடக மாநிலம் வட கன்னட மாவட்டத்தில் உள்ள பாத்கல் என்ற இடம் உள்ளது. இந்த நகரம் அரபிக் கடலோரத்தில் அமைந்திருக்கிறது.

Update: 2017-03-21 10:21 GMT
ர்நாடக மாநிலம் வட கன்னட மாவட்டத்தில் உள்ள பாத்கல் என்ற இடம் உள்ளது. இந்த நகரம் அரபிக் கடலோரத்தில் அமைந்திருக்கிறது. அந்த அரபிக் கடலை ஒட்டியே அமைந்திருக்கிறது முருதீசுவரர் திருக்கோவில். இந்த ஆலயம் பிரசித்தி பெற்ற ஆலயமாக திகழ்கிறது. இது ராமாயண காலத்து ஆலயம் என்று கூறப்படுகிறது. ராவணன் ஒருமுறை கயிலாயத்தில் இருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு இலங்கை நோக்கிச் சென்றான்.

வழியில் அவன் நீராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்போது அவன் கொண்டு சென்ற சிவலிங்கத்தை கீழே வைக்க விரும்பாமல், அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் கீழே வைக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கூறிச் சென்றான். அப்போது அந்தச் சிறுவன், ‘நான் மூன்று முறை உங்களை அழைப்பேன். அதற்குள் வரவில்லை என்றால், கீழே வைத்துவிடுவேன்’ என்று நிபந்தனை விதித்தான். அதை ஏற்றுக்கொண்ட ராவணன் நீராடச் சென்றான்.

அந்தச் சிறுவன் வேண்டுமென்றே வேகமாக மூன்று முறை ராவணனை அழைத்து விட்டு, சிவலிங்கத்தை கீழே வைத்துவிட்டான். சத்தம் கேட்டு ஓடோடி வந்த ராவணன், சிவலிங்கம் கீழே இருப்பதைக் கண்டான். அதை தூக்க முயன்றபோது அவனால் இயலவில்லை. அவன் பலம் அனைத்தையும் திரட்டியும் சிவலிங்கத்தை அங்கிருந்து தூக்க முடியவில்லை. இதனால் வெகுண்ட ராவணன், அந்தச் சிறுவனை தண்டிக்க முயல, சிறுவன் முருகப்பெருமானாக மாறி காட்சியளித்து மறைந்தார். முருகப்பெருமானால் கீழே வைக்கப்பட்ட சிவலிங்கம் உள்ள தலமே இது என்று கூறப்படுகிறது.

இந்தக் கோவில் கன்டுக்க மலையின் மீது, மூன்று புறமும் அரபிக்கடலின் நீர் சூழ அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் 237.5 அடி உயரம் கொண்டதாகும். சுமார் 20 மாடிகளை உடையது. கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல மின்தூக்கி உள்ளது. இது மிக உயரமான கோபுரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  கோவிலின் வெளியே 123 அடி உயரம் கொண்ட சிவபெருமானின் சிலை அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிவன் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய சிலை இது என்று கூறப்படுகிறது. சிவனுக்கு எதிரில் நந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும், இந்தச் சிலை தெரிவது குறிப்பிடத்தக்கது. மலையின் அடிவாரத்தில் ராமேஸ்வரர் லிங்கம் இருக்கிறது. இதற்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபடலாம். சிவன் சிலைக்கு அருகில் சனீசுவரன் கோவில் உள்ளது.

மங்களூர்– கொங்கன் ரெயில் பாதையில், முருதீசுவரர் என்ற பெயரில் ரெயில்   நிலையம் இருக்கிறது. இதில் இறங்கினால் முருதீசுவரர் கோவிலை அடையலாம்.

மேலும் செய்திகள்