அரனின் சாபம் போக்கிய அரி

திருமாலின் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, அங்கே கோவில் கொண்டுள்ள பெருமாளை வழிபட வேண்டும். எங்கே நீராடும் போது, பிரம்ம கபாலம் அசைத்து கொடுக்கிறதோ அந்தத் தலம் தான் அரனின் சாபம் போக்கும் திருத்தலமாகும் என்றார்.

Update: 2017-07-25 10:08 GMT
மிழ்தினும் இனிய தமிழில் ஆழ்வார் பெருமக்களால் பாடல் பெற்ற திரு மாலின் திருக்கோவில்கள், மங்களா சாசனம் செய்யப்பெற்ற திவ்யதேசங்கள் என்ற புகழுக்குரியவை.

அவற்றுள் பதினைந்தாவது திவ்ய தேசமாக திகழ்வது திருக்கண்டியூர். இது மும்மூர்த்தித் தலம் எனப் பாராட்டப்படுகிறது. ஏனெனில் ஒரே இடத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, சிவ பிரான் மூவருக்கும் தனிக் கோவில்கள் புராண காலத்திலிருந்தே இருக்கின்றன.

இங்கே, திருமாலின் திருக்கோவிலுக்கு அழகிய சுதைச் சிற்பங்கள் மிளிரும் மூன்று அடுக்கு ராஜகோபுரம் சாலை ஓரத்திலேயே எழுந்து விளங்குகிறது. கொடிமரமும், உள்ளே மகாமண்டபத்தில் கருடாழ்வாரும், அருகே ஆஞ்சநேயரும் இருக்கிறார்கள்.

கீழ்த்திசை நோக்கி, நின்ற திருக்கோலத்தில் இருகரங்களில் சங்கு சக்கரம் ஏந்திய படி, வரதகிஸ்தமும், அபய கிஸ்தமுமாக ஸ்ரீதேவி, பூதேவி துணையிருக்கக் காட்சி தருகிறார் பெருமாள். இவரது திருநாமம் ‘அரசாப விமோசனப் பெருமாள்’ என்பதாகும். இப்பெயர் பெற ஒரு புராணக் கதை உள்ளது.

பெயர்க் காரணம்

முக்கட் பரமனுக்கு இருப்பதனைப் போல, படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும் முன்பு ஐந்து முகங்கள் இருந்தன. அதனால் சிவனும், தானும் ஒன்று என கர்வமடைந்திருந்தார் பிரம்மன். பராசக்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிவபெருமான், பிரம்மதேவனின் ஒரு தலையைக் கண்டம் செய்து விட்டார். அதனால் பிரம்ம கபாலம் சிவனுடைய கையில் ஒட்டிக் கொள்ள அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. ஒரு முகத்தை இழந்து நான்முகனாகி விட்ட பிரம்மனின் சாபத்தால், சிவபெருமான் செய்வதறியாது திகைத்தார். அப்போது பிரம்மனே அந்த சாப நிவர்த்திக்கு வழியும் சொன்னார்.

திருமாலின் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, அங்கே கோவில் கொண்டுள்ள பெருமாளை வழிபட வேண்டும். எங்கே நீராடும் போது, பிரம்ம கபாலம் அசைத்து கொடுக்கிறதோ அந்தத் தலம் தான் அரனின் சாபம் போக்கும் திருத்தலமாகும் என்றார்.

ஈஸ்வரனும் பிரம்ம கபாலம் ஏந்திய கையுடன், திருமால் அருள்பாலிக்கும் ஆலய திருக்குளங்களில் மூழ்கி எழுந்தும், எட்டெழுத்து மந்திரம் சொல்லியும் வழிபட்டு வந்தார். இறுதியில் காவிரிக்குத் தெற்கே, குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ள திருக்கண்டியூர் என்னும் இத்தலம் வந்து, கோவிலின் மேற்கே உள்ள தீர்த்தத்தில் மூழ்கும்போது கபாலம் நீர் நிரம்பப் பெற்று, அது கையைவிட்டு நழுவி விழுந்துவிட்டது.

பிறகு திருக்கோவிலுக்கு எதிரே கிழக்கில் உள்ள தாமரைப் பொய்கையில் நீராடினார் சிவபெருமான். அப்போது அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. முன்னது கபாலம் விழுந்ததால் கபால தீர்த்தம் எனவும், பின்னது தாமரை மலர்கள் நிறைந்திருந்ததால் பத்ம தீர்த்தம் எனவும் பெயர் பெற்றன. பிறகு சிவபெருமான் இத்தல பெருமாளை வணங்கி பழைய நிலையை அடைந்தார். எனவேதான் இத்தல இறைவனுக்கு, அரசாப விமோசனப் பொருமாள் என்ற பெயர் ஏற்பட்டது.

பிருகு சாப நிவர்த்தி

வடமொழியில் உள்ள பிரமாண்ட புராணம் இக்கதையைச் சொன்னாலும், தீந்தமிழ்ப் பாசுரத்தால் திருமங்கை ஆழ்வார் இதனை மெய்ப்பிக்கின்றார்.

‘பிண்டியார் மண்டை ஏந்தி பிறன்மனை திரிதந்துண்ஹம் ஞ
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஓர் உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்ய லல்லால் மற்றையர்க் குய்ய லாமே’
தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த சிவபிரான், பிட்சாடனராக வலம் வந்த போது, திருமகள் பிச்சையிட கபாலம் கையை விட்டு மறைந்தது என்ற கதையும் உண்டு.

பிருகு மகரிஷி என்பவர் இத் தலம் வந்ததும் ‘மகா விஷ்ணு அபசார தோஷம்’ நீங்கப் பெற்றார் என்பதால் பெருமாளுக்கு ‘பிருகு நாதன்’ என்ற திருநாமமும் உண்டு.

ஒருமுறை மாகபலிச் சக்கரவர்த்தி நாராயணருடைய ரத்ன கிரீடத்தை கவர்ந்து சென்றான். அதனால் அவனுக்கு பாவம் ஏற்பட்டு, சித்தபிரமை உண்டானது. இதனால் பல ஊர்களில் பித்தனாக அலைந்து திரிந்தவன், இத்தலப் பெருமாளை சேவித்து பாபதோஷ நிவர்த்தி பெற்றான். அதனால் சுவாமிக்கு பலிநாதன் என்ற பெயரும் விளங்குகிறது.

தேவ குருவான வியாழனின் மனைவி மீது சந்திரன் மோகம் கொண்டான். பிறன் மனை நோக்கிய குற்றத்துக்காக சந்திரனுக்கு குஷ்டநோய் பிடித்தது. இத்தலத்தில் நீராடி மாலவனைப் பூஜித்ததால் நோய் விலகியதாக ஒரு செய்தியும் இருக்கிறது.

இத் தலம் வந்து, திருமகள் நேசனை நினைத்து சித்ரா பவுர்ணமி தினத்தில் கபால தீர்த்தத்தில் நீராடினால், பாபங்கள் போகும் என்று பிரம்மன் அருளியதாக ஒரு புராணக் கதையும் உள்ளது.

சுதர்சனர்

அரசாப விமோசனப் பெருமாளின் சன்னிதியில் தெற்கு நோக்கியபடி, பதினாறு கரங்களில், பதினாறுவகை ஆயுதங்கள் ஏந்தியபடி சுதர்சனப் பெருமாள் காட்சி தருகிறார்.

கமல விமானத்தின் கீழ் எழுந்தருளியுள்ள பெருமாள் கருவறையில் இருந்து வலச்சுற்றில் தனிச் சன்னிதியில் எழுந்தருளியிருக்கும் தாயார் ‘கமல வல்லி நாச்சியார்’ என்று அழைக்கப்படுகிறார்.

இத்திருக்கோவிலில் பொய்கை ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாள முனிவர் ஆகியோரின் மூர்த்தங்களும், வடமேற்கில் ஆன்டாள் நாச்சியாரின் சிறு கோவிலும் உள்ளன. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்துகாக திறந் திருக்கும்.

திருக்கண்டியூர் வந்து சரஸ்வதி உடனாய பிரம்மதேவர், கமலவல்லி உடனருள் பெருமாள், மங்களநாயகி சமேத பிரம்ம சிர கன்டீசர் ஆகிய மும்மூர்த்திகளையும் வணங்கி நல்லருள் பெறலாமே.

தஞ்சையில் இருந்து வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், திருவையாறில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் குடமுருட்டி ஆற்றின் தென் கரையில் விளங்கும் ஷேத்திரம் தான் திருக்கண்டியூர். தஞ்சையில் இருந்து நிறையபேருந்து வசதிகள் உள்ளது.

-டாக்டர் டி.தமிழரசன், தஞ்சாவூர்.

மேலும் செய்திகள்