குழந்தைப்பேறு வழங்கும் திருவோண விரதம்

திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலய அர்த்தஜாம பூஜை முடித்து, நடை சாத்தப்பட்டிருந்தது.

Update: 2017-08-29 00:30 GMT
4–9–2017

ஓணம் பண்டிகை

திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலய அர்த்தஜாம பூஜை முடித்து, நடை சாத்தப்பட்டிருந்தது. அப்போது கருவறையில் எரிந்த விளக்கு அணையும் தருவாயில் இருந்தது. விளக்கின் நெய்யைக் குடிக்க வந்த எலி ஒன்றின் மூக்கு பட்டு, விளக்கு திரி தூண்டப்பட்டது. இதனால் விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. விளக்கு அணையாமல் இருக்கச் செய்த எலியை, அடுத்தப் பிறவியில் அரசனாகப் பிறக்க, ஈசன் அருள்புரிந்தார்.

சிவபெருமானின் அருளைப் பெற்ற எலி, மறு பிறவியில் அசுர குலத்தில் ‘பலி’ என்ற பெயரில் மன்னராகி, கேரளாவை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். தனது ஆற்றலால், தேவர்களைக்கூட பலி மன்னர் தோற்கடித்தார். இதனால் அவர் மகாபலி சக்கரவர்த்தி என்று பெயர்பெற்றார். அவர் அஸ்வமேத யாகம் செய்ய முயன்றபோது, தேவர்களின் நலன் கருதி வாமனராக வந்த திருமால், மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவரை ஆட்கொண்டார்.

மகாபலியை, வாமனர் ஆட்கொண்ட தினம் ஆவணி மாதம் திருவோணம் ஆகும். அன்றைய தினம் மகாபலி மன்னன், தன்மக்கள் சந்தோ‌ஷமாக இருக்கிறார்களா? என்பதை பார்ப்பதற்காக பாதாள லோகத்தில் இருந்து கேரளாவுக்கு வருவதாக ஐதீகம். இதை நினைவு கூறும் வகையிலும், மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாபலி மன்னனின் வருகைக்காக இந்த திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 10–வது நாளாக திருவோணம் தினம் கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மக்கள் வீடுகளை அலங்கரித்து திருவிளக்கேற்றி வழிபடுவார்கள். கும்மியடித்து மகிழ்வர். எல்லா கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

பக்தி பாடல்களை பாடி, பிரார்த்தனை செய்வர். குடும்ப பெரியவர்கள் புத்தாடைகளை வழங்க, அதை குடும்பத்தில் உள்ளவர்கள் பெரியவர்             களின் காலில் விழுந்து வணங்கி பெற்று அணிந்து மகிழ்வர். ஓணம் அன்று சிறப்பான உணவு வகைகளை சமைத்து உறவினர்களுடன் உண்டு மகிழ்வார்கள். அன்றைய விருந்தில் அடப்பிரசாதம் என்னும் ஸ்பெ‌ஷல் பாயசம் இடம் பெறும். இளைஞர்கள் வாண வேடிக்கை செய்து மகிழ்வர். அன்று மாலை கேரளாவில் ‘செண்டை’ என்று அழைக்கப்படும் கேரள பாரம்பரிய மேள தாளத்துடன் புலி ஆட்டம், சிங்காரி மேளம், கதகளி நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பாம்பு போன்ற நீண்ட படகுப்போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெறும்.

கேரள மக்கள் எங்கிருந்தாலும் கொண்டாடி மகிழும் பண்டிகை ஓணம் பண்டிகை ஆகும். திருவோணத்தன்று பெருமாள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க வேண்டும். ஓணம் பண்டிகையின் போது மகா விஷ்ணுவை வணங்கி துதிப்பாடல்கள் பாட வேண்டும். விஷ்ணு புராணங்களை படிக்கலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட் களை ஒரு பொழுது சாப்பிடலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அன்று வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு பலன்களை தரும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருவோணத்தன்று தீபம் ஏற்றப்படும். இதை சாஸ்ரதீப அலங்கார சேவை என்பர். அன்று ஏழுமாலையானின் உற்சவரான மலையப்பசாமி ஊர்வலமாக 4 மாடங்கள் வழியாக ஊஞ்சல் மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு ஆயிரத்தெட்டு திரிகளை கொண்ட நெய் விளக்கு ஏற்றப்படும். அப்போது திருமலையே ஜோதி மயமாக காட்சி தரும்.

திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோ‌ஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும்.

வெண்ணிற ஆடை

பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும், செழுமையும் நிறைந்து காணப்படும் சிங்கம் மாதத்தை கேரள மக்கள் ‘அறுவடைத் திருநாள்’ என்றும் போற்றி வழிபட்டு சிறப்பிக்கின்றனர். முன் காலத்தில் ஓணம் பண்டிகை தினம் அறுவடைத் திருநாளாகவே கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். ‘கசவு’ என்று சொல்லப்படும் தூய்மை யான வெண்மை நிற ஆடைகளை மட்டுமே அன்றைய தினத்தில் உடுத்துவார்கள். மேலும் பெண்கள் அனைவரும் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பல வகை பூக்களினால் அழகு கோலங்கள் இட்டு ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

குரு தோ‌ஷம் போக்கும் வாமனர் வழிபாடு

குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் எந்த கிரகத்தைப் பார்த்தாலும், அந்த கிரகம் சுப பலன்களைத் தந்து விடும். நவக்கிரகங் களில் பூரண சுபகிரகமாக குரு திகழ்கிறார். அந்த குருவின் அம்சமாகத் திகழ்பவர் வாமனர். வியாழ திசை, வியாழ புத்தி நடப்பில் உள்ளவர்கள், குரு தோ‌ஷத்தால் திருமணம், புத்திரப்பேறு தடைபடுபவர்கள் வியாழக்கிழமைகளில் வாமனமூர்த்தியை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெறலாம். வாமனமூர்த்திக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு. வாமனரை மனதில் எண்ணி பெருமாள் கோவில்களிலும், திருவிளக்கின் முன்னும் கூட தீபம் ஏற்றி வழிபடலாம். அதன் மூலம் அனைத்து சிறப்புகளும் வந்து சேரும்.

மேலும் செய்திகள்