ஆனி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், தங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திதி, தர்ப்பண சங்கல்ப பூஜை செய்தனர்.;

Update:2025-06-25 17:56 IST
ஆனி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்காக நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வருகை தருகிறார்கள். அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பாக கருதப்படுவதால்,  அன்றைய தினம் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

அவ்வகையில், ஆனி மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்கு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், தங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திதி, தர்ப்பண சங்கல்ப பூஜை செய்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடி, அதன்பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 100, 200 கட்டண தரிசன பாதை மற்றும் இலவச தரிசன பாதை என அனைத்து இடங்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல் திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடலிலும், தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக கடலிலும் புனித நீராடுவதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்