திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது ஸ்ரீவாரிபுஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான நேற்று காலை

Update: 2017-10-01 23:45 GMT
திருமலை,

ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தினமும் காலை, மாலை, இரவு வேளைகளில் பல்வேறு வாகன வீதிஉலாக்கள் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் நிறைவுநாளையொட்டி நேற்று அதிகாலை 1 மணியில் இருந்து 1.30 மணிவரை சுப்ரபாதம், 1.30 மணியில் இருந்து அதிகாலை 3 மணிவரை தோமால சேவை, அர்ச்சனை சேவை ஆகியவை நடந்தது. அதிகாலை 3 மணியில் இருந்து காலை 9 மணிவரை இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்குவதும், சடாரி வைப்பதும் ரத்து செய்யப்பட்டது.

அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிவரை பல்லக்கு உற்சவம் நடந்தது. கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, விஸ்வசேனர், சக்கரத்தாழ்வார் ஆகியோரை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வராகசாமி கோவிலுக்கு அருகில் கொண்டு சென்று முக மண்டபத்தில் வைத்தனர். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு ஆராதனை, புண்ணியாவதனம், முகப்பிரசாரனை, தீப, தூப நைவேத்தியம் நடந்தது.

காலை 6 மணியில் இருந்து 9 மணிவரை சங்கநிதி, பத்மநிதி, சகஸ்ரதாரா, கும்பதாரா, வைகானச ஆகம முறைப்படி மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அப்போது வேத பண்டிதர்கள் பாராயணம் செய்தனர். உற்சவ மூர்த்திகளுக்கு பல வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது புஷ்கரணியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரில் மூன்று முறை மூழ்கி புனிதநீராடினர். பின்னர் உற்சவ மூர்த்திகள் புஷ்கரணியில் இருந்து கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டனர். காலை 9.30 மணியில் இருந்து மாலை 4 மணிவரை இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் மூலவருக்கு கைங்கர்யமும், யாக சாலையில் சிறப்பு ஹோமமும் நடந்தது.

பின்னர் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தங்க திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதையடுத்து இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. அத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

மேலும் செய்திகள்