ராமேசுவரம் கோவிலில் வற்றாத தீர்த்த கிணறுகளில் தண்ணீர் வற்றியது

ராமேசுவரம் கோவிலில் வற்றாத தீர்த்த கிணறுகளில் தண்ணீர் வற்றியது. இதனால் பக்தர்கள் மழை பெய்ய வேண்டி கோவிலில் பூஜை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-08-30 22:45 GMT
ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் காசிக்கு நிகரான பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில்இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலின் முக்கிய அம்சமாக மகாலட்சுமி, சாவித்திரி, காயத்ரி, சரசுவதி, சக்கரதீர்த்தம், சேது மாதவ, நள, நீல, கவய, கவாட்ச, கந்தமாதன, பிரம்மஹத்திவிமோசன, சூரிய, சந்திர, சாத்யாமிர்த, சிவ, சர்வ, சங்கு, கயா, கங்கா, யமுனா, கோடி தீர்த்தம் என 22 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ளன. இந்த தீர்த்த கிணறுகளில் புனித நீராடினால் தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாகும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

இந்த கிணறுகள் அனைத்தும் இயற்கை ஊற்றாக அமைந்திருப்பதால், எப்போதும் நீர் ஊறிக் கொண்டே இருப்பதோடு தண்ணீர் வற்றாமல் இருக்கும். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து குளித்தாலும் இந்த தீர்த்த கிணறுகளில் நீர் வற்றாது. பக்தர்கள் தலா ஒரு நபருக்கு ரூ.25 கட்டணம் செலுத்தி அதற்கான டிக்கெட்டை பெற்று நீராடி செல்கின்றனர்.

ராமேசுவரம் பகுதியில் ஆண்டுதோறும் வழக்கமாக அக்டோபர், டிசம்பர் மாதங்களில் மட்டுமே தொடர்ச்சியாக நல்ல மழை பெய்யும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மழை பெய்யவில்லை. இதனால் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளின் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து, கிணறுகளில் தண்ணீரே இல்லாமல் வற்றி போய்விட்டன.

இந்நிலையில் ராமேசுவரம் கோவிலில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வற்றாத பல தீர்த்த கிணறுகளில் நீரின் மட்டம் வெகுவாக குறைந்து விட்டன. அதில் கங்கா, சர்வ, சாத்யமிர்த தீர்த்த கிணறுகளில் மிக குறைந்த அளவு நீர் உள்ளது. மேலும் கிணறுகளின் அடிப்பகுதியில் உள்ள மணல், பாறைகளும், கற்களுடன் பக்தர்கள் தீர்த்த கிணற்றில் வீசி செல்லும் சில்லறை காசுகளும் தெளிவாக வெளியே தெரிகின்றன. அதிலும் 20-வது தீர்த்தமான கங்கை தீர்த்தத்தில் தண்ணீர் வற்றிவறண்டு பாறைகள் வெளியே தெரிகிறது.

பழமை வாய்ந்த ராமேசுவரம் கோவிலில் தீர்த்த கிணறுகள் வற்றியது கண்டு பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் சரவணன் கூறியதாவது:- ராமேசுவரம் கோவிலில் ஆகம விதி முறைபடி நடந்த பல பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கால பூஜைகளின் போது சரியாக அபிஷேகங்கள் நடைபெறுவதில்லை. பொதுவாக கோவிலில் வேதபாராயணம் மந்திரங்கள் காலை, மாலை என 2 நேரங்களும் பாடப்பாட வேண்டும்.

ஆனால் இந்த நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடை பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ராமேசுவரம் பகுதியில் நல்ல மழை பெய்ய வேண்டியும், தீர்த்த கிணறுகளில் நீரின் மட்டம் அதிகரிப்பதற்கும் சிறப்பு வருண ஜெப பூஜைகள் முறையாக நடத்தப்பட வேண்டும். வேதபாராயண மந்திரங்களை மீண்டும் பாடுவதற்கு தமிழக இந்து அறநிலையத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அனைத்து பக்தர்களின் சார்பாக கோரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்