சிறப்புகள் நிறைந்த தொழுகை

இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ள ஐந்து விஷயங்களில் இரண்டாவதாக வருவது தொழுகை. மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கமே படைத்தவனை வணங்குவதற்காகத்தான்.

Update: 2019-01-11 10:59 GMT
இது பற்றி இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்: ‘ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிபட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை’. (51:56)

கட்டாயக் கடமை என்பதாலும், தொழாதவர்களுக்கு இறைவன் தருவதாகச் சொல்லியுள்ள தண்டனைகளுக்குப் பயந்தும், தொழுவதால் ஏற்படும் நன்மைகளைப் பெறுவதற்காகவும் நம்மில் பெரும்பாலானோர் தொழக்கூடியவர்களாகவே இருக்கிறோம். தொழுகையைப் பொறுத்தவரை, எந்த ஒரு வேளையையும் விடாமல் தொழுவது, குறிப்பிட்ட நேரத்திற்குள் தொழுவது, கவனம் சிதறாமல் தொழுவது ஆகிய மூன்று விஷயங்களும் முக்கியமானவை.

அளவிட முடியாத வேகத்தில், இறக்கைகள் இல்லாமலேயே பறக்கும் மனதை கடிவாளம் கொண்டு அடக்குவதுதான் நமக்கு பெரும் பாடாக இருக்கிறது. இதனை நன்கு அறிந்து வைத்திருக்கும் சைத்தான் நம்முடைய பலவீனத்தை தனக்கு சாதகமாக்கி, நம் தொழுகையை வீணாக்குவதற்கு பெரும் முயற்சி செய்வான். ஆனால் நம் மனக் கட்டுப்பாட்டினால், சைத்தானை வெற்றி கொள்ள முடியும்.

‘தொழுகையின் போது அல்லாஹ்வின் முன் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்’ (2:238) என்ற திருக்குர்ஆன் வசனத்தை நினைவில் கொள்ள வேண்டும். பெயருக்குத் தொழுவதால் அல்லாஹ்வின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்வதுடன், அப்படிப்பட்ட தொழுகையால் நமக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதையும் நினைவில் கொண்டு கவனம் சிதறாமல் தொழ வேண்டும்.

‘கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடுதான் என்றும், அப்படிப்பட்டவர்கள் பிறருக்கு காண்பிப்பதற்காகவே தொழுகிறார்கள்’ (107:4,5,6) என்றும் இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.

பள்ளிவாசல் தவிர்த்து பிற இடங்களை தொழுகை நடத்தும் போது, சிரிப்பும், பேச்சுமாக இருக்கும் இடத்தை தொழுகைக்குத் தேர்வு செய்யக்கூடாது. இன்னும், தனிமையில் இறைவனிடம் கண்ணீர் விட்டு அழுது பிரார்த்தனை செய்வது நமக்கு ஆறுதலைத் தருகிறது. மற்றவர்கள் பார்க்கும்படியாக தொழும் பொழுது பிறர் ஏதாவது நினைப்பார்களோ என்ற தயக்கம் சிலருக்கு ஏற்படுகிறது. எனவே கூடுமான வரை சப்தம் இல்லாத, ஒதுக்குப்புறமான இடமாக இருப்பது நல்லது.

தொழுகையில் நாம் ஒரே நிலையில் இருப்பதில்லை. தொழ ஆரம்பிக்கும் முன் இறைவனைத் தவிர மற்ற சிந்தனைகளை ஒதுக்கி மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். ‘என் இறைவனுக்கு முன் நிற்கிறேன், அவன் முன் அடி பணியப்போகிறேன்’ என்ற எண்ணத்தைக் கொண்டு மனதை நிரப்ப வேண்டும்.

தலை குனிந்து, பார்வை கீழ் நோக்க வேண்டும். ஒரு திசையில் மட்டுமே பார்க்கும் படியாக கண்களைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், ‘எதையும் கேட்காதே’ என்று செவிகளைக் கட்டுப்படுத்த முடியாது. செவிகள் திறந்தே இருக்கும். இருந்தாலும், தொழுகையில் ஓத வேண்டியவற்றை மனதிற்குள் ஓதாமல் மென்மையான குரலில் நமக்கு மட்டும் கேட்கும் வகையில் ஓதும்பொழுது செவிப்புலன்களையும் நம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

நம்மைப் படைத்த இறைவன் மீது அளவு கடந்த அன்பு, பணிவு, மரியாதை, நன்றியுணர்வு, அவனின் மீதான மிகுந்த அச்சம் ஆகிய அனைத்தையும் ஒருசேர மனதில் நிரப்புவது பயிற்சியின் மூலம் சாத்தியமே. எந்த இடத்தில் நின்று தொழுதாலும், இறையில்லமான காபதுல்லாவில் நாம் நின்று தொழுவதாக நினைத்துக் கொள்வது தொழுகையில் நம்முடைய நெருக்கத்தை அதிகப்படுத்தும்.

முதல் நிலையில் இரு கைகளையும் உயர்த்துகிறோம். மனிதர்கள் ஏதும் செய்ய இயலாத நிலையில், ‘என்னிடம் ஒன்றுமில்லை, நான் நிராயுதபாணி, நான் சரணடைகிறேன்’ என்று இரு கைகளையும் தூக்கிக் கொண்டு நிற்பதை நாம் பார்த்திருப்போம். இது அந்த மாதிரியான நிலை.

‘என் இறைவா, நான் உன் அடிமை, என்னால் ஆகக்கூடியதென்று எதுவும் இல்லை, நான் உன்னிடமே சரணடைகிறேன், என்னை உன்னிடமே ஒப்படைக்கிறேன்’ என்று சொல்லக்கூடிய நிலை இதுதான்.

பின்னர் இரண்டாவது நிலை மாறுகிறது. இரு கைகளையும் நெஞ்சிற்கு கீழே கட்டுகிறோம். நம் நெஞ்சத்தை இறைவனோடு பிணைக்கும் நிலை இது. தன்னைப் படைத்து, பரிபாலிக்கும், இவ்வுலகத்தின் அதிபதி, ஆசான் முன் கை கட்டி நிற்கும் ஒரு அடியானின் நிலை இது. பின்னர் திருக்குர்ஆன் வசனங்களை முறைப்படி ஓத ஆரம்பிக்கிறோம்.

அடுத்த நிலை உடல் வளைத்து, குனிந்து, முழங்கால்களைப் பிடித்தபடி நிற்கும் நிலை. இறைவனுக்கு முன் நம் பணிவை இன்னும் அதிகமாகக் காட்டுவதுடன், ‘அவனைத் தவிர வேறு எவர் முன்னும் தலை குனிந்து நிற்க மாட்டேன்’ என்றும் கூறும் நிலை இது.

அடுத்த நிலை, எண் சாண் உடலை குறுக்கி, சிரம் பணிந்து வணங்கும் நிலை. நம்மைப் படைத்த இறைவனின் காலடியில் விழுந்து கிடைக்கும் ஒரு தூசியைப் போல் நம்மை எண்ணிக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் அடியானுக்கு இறைவனின் நெருக்கம் கிடைக்கிறது. அத்துடன் இந்நிலையில் இருக்கும் ஒரு அடியானின் படித்தரம் சுவனத்தில் உயர்த்தப்படுவதாகவும், அவரின் ஏட்டில் இருந்து ஒரு பாவம் அழிக்கப்படுவதாகவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

கண்களில் ஈரம் கசிய, நம்முடைய இறைவனுக்கு முற்றிலும் பணியும் நிலை இது. ‘உன்னைத் தவிர எனக்கு வேறு கதி இல்லை, உன்னைத் தவிர வேறு யாரிடமும் கேட்க மாட்டேன், நீயே, நீ மட்டுமே எனக்குப் போதுமானவன்’ என்று மனம் உருகி நிற்கும் இந்த நிலை மிகவும் உன்னதமானது.

பின்னர் தலை குனிந்த வண்ணம் அமரும் நிலை. ஒரு விதமான நிம்மதி மனதில் நிறைந்திருக்கும் நிலை. நம்முடைய எல்லாக் காரியங்களையும் நமக்கு பொறுப்பேற்றுக் கொண்டவனிடம் ஒப்படைத்து விட்டோம் என்பதால் ஏற்படும் நிம்மதி அது. அமர்ந்திருக்கும் நிலையில் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கிறோம். தொழுகையை முடிக்கும் முன்பாக அமர்ந்திருக்கும் நிலையில் வலது, இடது தோள்களை நோக்கி தலையைத் திருப்பி நம்முடைய நன்மை, தீமைகளை ஏட்டில் பதிவு செய்யும், வானவர்களுக்கு ஸலாம் கூறி தொழுகையை முடிக்கிறோம்.

உடனே எழுந்திருக்காமல் கைகளை உயர்த்தி நம்மைப் படைத்த இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டு நம்முடைய தேவைகளைக் கேட்டு, திக்ரு (நினைவு கூருதல்) செய்து தொழுகையை நிறைவு செய்கிறோம்.தொழுகையின் ஒவ்வொரு நிலையிலும், அரபியில் வசனங்களை ஓதினாலும், அவற்றின் பொருளை அவரவர் தாய்மொழியில் புரிந்து ஓதுவதால், ஈடுபாட்டுடனும், கவனத்துடனும் நம்மால் தொழ முடியும்.

ஆனால் நம்முடைய தொழுகை ஒப்புக்கொள்ளப்பட்ட தொழுகையா என்பதை இறைவனே மிக அறிந்தவன். நம் எல்லோருடைய தொழுகையும் ஒப்புக் கொள்ளப்பட்டவையாகவும், மறுமையில் நமக்கு நன்மைகளை அள்ளித் தரக் கூடியவையாக இருப்பதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக. இன்னும் அவனின் கட்டளைபடியும், நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழி முறைப்படியும் தொழுவதற்கு அறிவையும், வழிகாட்டுதலையும் வல்ல இறைவன் நமக்குத் தந்தருள்வானாக, ஆமின்.

ம. அஹமது நவ்ரோஸ் பேகம், புரசைவாக்கம், சென்னை-84.

மேலும் செய்திகள்