எண்ணிக்கை

விவிலியத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது நூல் ‘எண்ணிக்கை’. எபிரேய மொழியில் இந்த நூலின் பெயர் ‘பெமிபார்’ என்பதாகும். இதற்கு ‘பாலை நிலத்தில்’ என்பது பொருள்.

Update: 2019-01-29 15:52 GMT
இஸ்ரயேல் மக்களின் பாலை நில வாழ்க்கையைச் சொல்வதால் இந்த பெயர் இடப்பட்டது. ஆனால் கிரேக்க மொழிபெயர்ப்பு செய்தபோது அதன் தலைப்பை ‘அரித்மோய்’ என்று மொழிபெயர்த்தனர். இதற்கு ‘எண்ணிக்கை’ என்பது பொருள்.

இந்த நூலில் இரண்டு முறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுகிறது. தொடக்கத்தில் ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. பின்னர் ஒரு தலைமுறை கடந்தபின் மீண்டும் ஒரு முறை கணக்கெடுக்கப்படுகிறது.

இந்த நூலின் ஆசிரியரும் மோசே தான். விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களும் ‘தோரா’ என அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்து நூல்களையும் மோசே தான் எழுதியுள்ளார்.

எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள், கடவுள் வாக்களித்த கானான் நாட்டிற்கு நுழையச் சென்றார்கள். ஒவ்வொரு குலத்தில் இருந்தும் ஒருவராக பன்னிரண்டு பேர் முதலில் ஒற்றர்களாக நாட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் சென்று நாட்டை ‘வேவு’ பார்த்துத் திரும்பினர். நாடு வளத்தின் உச்சமாக இருந்தது. ஆனால் அங்குள்ள மக்கள் வலிமையாய் இருந்தனர்.

காலேபு, யோசுவா என்பவர்களைத் தவிர மற்ற எல்லாருமே உள்ளே செல்வது ஆபத்து, நமக்கு அழிவு நிச்சயம் என அஞ்சினர். கடவுள் தங்களோடு இருப்பதை மறந்தனர். இஸ்ரயேல் மக்களும் அந்த நாட்டுக்குள் செல்ல பயந்து கடவுளுக்கு எதிராகவும், மோசேக்கு எதிராகவும் முணு முணுத்தனர். கடவுள் அவர்கள் மீது கடும் கோபம் கொண்டார்.

‘இந்தத் தலைமுறையில் இருக்கும் எவனுமே இந்த நாட்டுக்குள் நுழைய மாட்டான்’ என கடவுள் சாபமிட்டார். மக்கள் அதிர்ந்து போய் நாட்டுக்குள் நுழைய முயன்றார்கள்.

மோசே அவர்களைத் தடுத்தார். ‘இதுவும் கடவுளின் கட்டளையை மீறிய செயலாகி விடும்’ எனச்சொல்லி, மக்களைத் தடுத்தார்.

இஸ்ரயேல் மக்கள் தங்கள் தவறினால் பாலை நிலத்தில் அலைந்து திரியத் தொடங்கினார்கள். இந்த நூல் மக்கள் சீனாய் மலையிலிருந்து மோவாபின் சமவெளிகளில் வந்து சேர்வது வரையான நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

இந்த நூலிலும் குருக்கள் ஆற்றவேண்டிய பணிகள், லேவியரின் பணிகள், லேவியருக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஊதியம், தூய்மையாக்கும் சட்டங்கள் என பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.

‘கடவுளின் கோபம் இஸ்ரயேல் மக்கள் மேல் இருந்தாலும் அவர்களை கடவுள் பாலை நிலத்தில் பாதுகாத்தார். அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றினார்’ என இறைவனின் கரிசனையை இந்த நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.

இந்த நூலில் தான் பிரபலமான பிலயாம் தீர்க்கதரிசியின் கதை இடம்பெறுகிறது. இஸ்ரயேல் மக்களைச் சபிக்க வேண்டுமென பாலாக் மன்னன் பிலயாமை அழைக்கிறார். கழுதையில் பிலயாம் வருகையில் கடவுளின் தூதர் வழிமறிக்கிறார். பிலயாமின் கழுதை பேசுகிறது. மக்களைச் சபிப்பதற்காக வந்தவர் இறைவனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு இஸ்ரயேல் மக்களை மூன்று முறை வாழ்த்துகிறார்.

இந்த நூலிலும் இறைமகன் இயேசுவை மையப்படுத்தும் நிகழ்வுகளின் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பாலை நிலத்தில் பாம்பு கடிபட்டு மக்கள் இறந்து போகின்றனர்.

‘பாம்பு கடிபட்டவர்கள் பிழைக்க வேண்டுமெனில் வெண்கலத்தில் ஒரு பாம்பைச் செய்து அதை மோசே உயர்த்திப் பிடிக்கவேண்டும்’ என்கிறார் கடவுள்.

உயர்த்திப் பிடிக்கப்பட்ட வெண்கலப் பாம்பைப் பார்த்தவர்கள் பிழைத்துக் கொள்கின்றனர்.

புதிய ஏற்பாட்டில் ‘பாம்பு’ என்பது ‘பாவம்’ அல்லது ‘சாத்தான்’ என்பதன் குறியீடு.

‘பாவத்தில் வீழ்ந்தவர்கள் கண்களை ஏறெடுத்து சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கிப்பார்த்தால் மீட்பைப் பெற்றுக்கொள்வார்கள்’ என்பது இது சொல்கின்ற ஆன்மிகப் பாடம்.

‘பாலை நிலத்தில் மோசே பாம்பை உயர்த்தியது போல மனு மகனும் உயர்த்தப்பட வேண்டும்’ எனும் இயேசுவின் வார்த்தை இதை விளக்குகிறது.

லேவியர் நூலில் காணப்படும் பல சிந்தனைகள் இந்த நூலிலும் காணப்படுகின்றன. இரண்டு நூல்களையும் ஒரே நபர் எழுதினார் என்பதும், அவர் கடவுளிடமிருந்து கட்டளைகளை நேரடியாகப் பெற்றார் என்பதும், இது ஒரே ஒரு நீள் பயணத்தின் பதிவுகள் என்பதும் அதன் காரணமாக இருக்கலாம்.

விடுதலைப் பயண நூலில் கம்பீரமாகக் காட்டப்பட்ட மோசே இந்த நூலில் ஒரு பக்குவப்படுத்தப்பட்ட மக்கள் தலைவராக மாறுகிறார். இரக்கம், மன உருக்கம், தாழ்மை, பணிவு, எளிமை கொண்ட ஒரு அற்புதமான தலைவராக அவர் சித்தரிக்கப்படுகிறார்.

‘பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார்’ என்கிறது (எண் 12:3) இந்த நூல்.

கடவுளின் கோபம் வெளிப்படும் என்பதை இந்த நூல் ஊர்ஜிதப்படுத்துகிறது. ஒரு தந்தையாக வழிநடத்தும் அவர், தவறுகளைக் கண்டால் தண்டிப்பவராக மாறுகிறார். அவருடைய தண்டனைக்கு முன்னால் சிறியோர் பெரியோர் என்று இல்லை. தன் பிரியத்துக்குரியவர் மற்றவர் என்றில்லை. தலைவர் தொண்டர் என்றில்லை. கீழ்ப்படியாமை உடைய மக்களையும், பாவம் செய்யும் மக்களையும் கடவுள் பாகுபாடின்றி தண்டிக்கிறார். இந்த சிந்தனை இந்த நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

(தொடரும்)

மேலும் செய்திகள்