பக்த குணவதிபாய்

நம் பாரத தேசம் பழம்பெரும் பூமி மட்டும் அல்ல.. எண்ணற்ற சித்தர்களும், மகான்களும் வாழ்ந்து, மறைந்து, இன்னும் கூட பல அருளாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான பூமி.

Update: 2019-11-05 11:49 GMT
புதிய தொடர்

ம் பாரத தேசம் பழம்பெரும் பூமி மட்டும் அல்ல.. எண்ணற்ற சித்தர்களும், மகான்களும் வாழ்ந்து, மறைந்து, இன்னும் கூட பல அருளாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புதமான பூமி.. ஆண் சித்தர்கள் மட்டும் அல்ல, பெண் சித்தர்களும் பல சேவைகளையும் அருள் அனுபவங்களையும் பக்தர்களுக்குக் கொடுத்துள்ளனர். அப்படிப்பட்ட பெண் சித்தர்களைப் பற்றித்தான் இந்தப் பகுதியில் பார்க்கப் போகிறோம்..

மலைக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்த அந்திச் சூரியன், தன் பொற்கரங்களால் அந்த ராஜபுதனத்து பாலைவனம் முழுவதையும் பொன்னிறமாக மாற்றிக் கொண்டிருந்தான்.

அந்த அழகிய காட்சியில் மனதைப் பறிகொடுத்த ராணி குணவதி, உப்பரிகையில் இருந்து சூரியனையும், அதன் கீழ் இருந்த சிவந்த வானத்தையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாளோ.. திடீரென மனம் சலிக்கத் தொடங்கியது.

‘இயற்கையின் இணையில்லா அழகு கூட சலிக்கத் தொடங்குமா..?’ அவள் மனம் அவளைக் கேள்வி கேட்டது.

குணவதியின் அழகில் மயங்கி, அவளையே தன் மனதுக்கும், தன் அரண்மனைக்கும் சொந்தகாரியாக்கினார், மாவீரர் ராஜா மாதவ் சிங். அவர்களின் அன்புக்கு பாத்திரமாக இரண்டு புதல்வர்கள் பிறந்தனர்.

சொன்ன வேலையை மறுநொடியே செய்ய வேலையாட்கள் இருந்தாலும், தானும் கணவர் - குழந்தைகளுக்கான கடமைகளைச் செய்தாலும், குணவதியின் மனதில் சொல்ல முடியாத, சொல்லத் தெரியாத ஒரு வெறுமை படர்ந்து இருந்தது.

வெறுமையுடன் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த குணவதியின் அறைக்குள், அந்த தாதி நுைழந்தாள். அவள் பெயர் கமலாபாய்.

அவளது வாய் இடையறாது எதையோ முணுமுணுத்துக் கொண்டு இருந்தது. அதைப் பார்த்த குணவதி, ‘இவள் எதையோ உளறிக்கொண்டே இருக்கிறாளே.. மனநிலை சரியில்லாதவளோ.. சரியாக விசாரிக்காமல் வேலைக்கு அமர்த்தி விட்டார்களோ..’ என்று நினைத்தாள்.

சந்தேகத்துடனேயே கமலாபாயை அழைத்தாள்.

“நீ என்ன முணுமுணுத்துக் கொண்டு இருக்கிறாய்?. எப்போதாவது என்றால் பரவாயில்லை. எந்த நேரம் உன்னை உற்று நோக்கினாளும் உன் வாய் எதையோ பிதற்றிக் கொண்டே இருக்கிறதே..”

கடுமையான குரலில் கேட்ட ராணியை, நிமிர்ந்து கூடப் பார்க்காமல் நடுங்கினாள், கமலாபாய்.

எதுவும் பேசாமல் நின்றவளைப் பார்த்து மீண்டும் எரிச்சலுடன் வினவினாள் குணவதி.

“ம் ..சொல்லு.. என்ன முணுமுணுக்கிறாய்? ஏதாவது மந்திரமா? இல்லை தனக்குத்தானே பேசிக் கொள்ளும் வியாதி உனக்கு இருக்கிறதா?”

“இல்லை அரசியாரே.. நான் இடையறாது கிருஷ்ணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அனைத்து ஜீவராசிகளும் நன்றாய் இருக்கும் பொருட்டும், மழை பொழிந்து பூமி குளிரவும் நான் கார்மேகவண்ணன் நாமத்தைச் சொல்கிறேன்”

ஆச்சரியத்தில் உறைந்து போனாள், ராணி குணவதி.

“நாராயண மந்திரத்தை பூஜையறையில் மட்டும் தானே, அதுவும் பூஜை வேளையில் மட்டும்தானே சொல்ல வேண்டும்?”

“இல்லை அரசியாரே! நாம் பசிக்கும்போது சாப்பிடுகிறோம். தூக்கம் வரும் நேரத்தில் தூங்குகிறோம். அன்றாடக் கடமைகளையும் அவ்வாறே செய்கிறோம். ஆனால் மூச்சு விடுவதை நாம் குறிப்பிட்ட நேரத்தில் கடமையாகச் செய்வதில்லை. செய்யவும் முடியாது.

அந்த மூச்சுதான் உடல் இயக்கத்திற்கு காரணம். அது இருந்தால்தான் உயிர். அதே போல உலக இயக்கத்திற்கு காரணமானவர் நாராயணர். அந்த பரம்பொருளுக்கு நாம் எப்படி நன்றி செலுத்துவது? அதனால்தான் அவன் தாழ் பணிந்து, அவன் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருக்கிறேன். ”

அந்த தாதியின் வார்த்தைகள், ராணி குணவதியின் மனதில் ஒரு தெளிவை உண்டாக்கியது. அவளது சிந்தையில் ஒளி பிறக்க காரணமான அந்த தாதியே, அவளுக்கு குருவானாள். அவளின் வார்த்தைகளே, குணவதிக்கு தீட்சை கொடுத்தன. குணவதி உள்ளுக்குள் ஒடுங்கி, கண்ணீர் மல்க தாதியை நோக்கி கைகூப்பினாள்.

பதறிப்போனாள், கமலாபாய். “ஐய்யோ.. என்ன இது..? நீங்கள் என்னை வணங்குவதை யாரும் பார்த்து மகாராஜாவிடம் சொன்னால், என் குழந்தைகள் தாயற்றுப் போவார்களே..”

குணவதி தொடர்ந்தாள். “குருவே! நீங்கள்தான் என்னுடைய அகக்கண்ணைத் திறந்தவர். வாழும் வாழ்க்கையின் அர்த்தம் புரியாமல் திணறிக் கொண்டிருந்த என்னைத் தெளிவுபடுத்தியவர். என்னுடைய குரு, எனக்குக் கீழ் வேலை செய்வது தகாது. இனிமேல் நீங்கள் பணிக்கு வர வேண்டாம்.”

“மகாராணி! இந்த வேலைதான் எனக்கும் என் குழந்தைகளுக்கும் வாழ்வதாரமே” சொல்லும்போதே, அழுகையால் கமலாபாயின் வார்த்தைகள் வலுவிழந்தன.

உடனே குணவதி, “யாரங்கே! ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் கொண்டு வா” என்று மற்றொரு பணிப் பெண்ணுக்கு உத்தரவிட்டாள்.

அந்த பொற்காசுகள் வந்ததும், அதை கமலாபாயிடம் கொடுத்து, “இது போலவே ஒவ்வொரு மாதமும் உங்கள் வீடு தேடிப் பொற்காசுகள் வரும். என் வாழ்க்கை மாறப் போகிறது. அது உங்களால் தான். அதை மாற்றி அமைத்த தாங்கள் எனக்கு சேவகம் செய்யக்கூடாது. போய் வாருங்கள்” என்று கைகூப்பினாள்.

பதிலுக்குக் கை கூப்பிய கமலாபாயை, “சிஷ்யையை குரு வணங்கக் கூடாது” என்று விடை கொடுத்து அனுப்பியவள் அன்றிலிருந்து முற்றிலும் மாறிப்போனாள்.

தாதியை குருவாக ஏற்றுக் கொண்ட குணவதி, இடையறாது கிருஷ்ண நாமத்தை ஜெபிக்கத் தொடங்கினாள். அவள் எண்ணங்களில், செயல்களில், உடைகளில் பெரும் மாற்றம் வந்தது. வாய் இடையறாது கிருஷ்ண நாமத்தையே உச்சரித்தது.

அந்தப்புரத்தின் நடுவில் மணிமண்டபம் அமைத்து, கிருஷ்ணனைப் பிரதிஷ்டை செய்தாள். இடையறாது பஜனைகளும், நாம சங்கீர்த்தனங்களும், சாது போஜனமும் நடந்து கொண்டே இருந்தது. அந்தப்புரம் ஆசிரமமாக மாறிற்று.

யாராவது நல்லது செய்தால் பொறுக்காதவர்கள், எந்தக் காலத்திலும் உண்டுதானே. அரசர் மாதவ்சிங்கின் உறவினர்கள் அவரிடம் “ஒரு ராஜபுதனத்துப் பெண்ணின் அந்தப்புரத்தில் அன்னிய ஆடவர்களா? இதுவா நம் கவுரவம்?” என்று தூண்டி விட்டனர்.

மன்னன் தன் மனைவியிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு குணவதி, “எனக்கு ஆடம்பர வாழ்க்கையில் விருப்பம் அற்றுப் போய் விட்டது மகாராஜா.”

“குணவதி! உன் மேல் இருந்த அன்பின் காரணமாகவே நான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வந்தேன். நீ இப்படி இருப்பது தவறு. ஒரு ராஜபுத்ர மகாராணி எப்போதும் அதற்குரிய கவுரவத்தோடும் மரியாதையோடும் இல்லாமல், எந்நேரமும் சாதுக்களோடு பஜனை பாடிக்கொண்டு இருப்பது முறையாகாது. நீ இப்படி இருந்தால் என்னையும், நம் குழந்தைகளையும் யார் கவனித்துக் கொள்வார்கள்?” மாதவ்சிங்கின் குரலில் கோபம் தெரிந்தது.

அந்த கோபம் அவளை சிறிதும் பாதிக்கவில்லை. “என் கிருஷ்ணன் பார்த்துக் கொள்வான் அரசே”

“உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.”

“ஆம் மன்னா.. கிருஷ்ணபைத்தியம். அவனே நம்மை காக்கிறான். அவன் அறியாமல் எதுவும் நடக்க இயலாது.” குணவதி பேசியதைக் கேட்கக் கேட்க மன்னனுக்குக் கடும் கோபம் உண்டானது.

குணவதிக்கு நிச்சயமாக பைத்தியம் பிடித்து விட்டது. இது உறவினர்களுக்குத் தெரிந்தால் எள்ளி நகையாடுவார்கள். நாட்டு மக்களுக்கும், அமைச்சர்கள் மந்திரிகளுக்கும் தெரிந்தால் விஷயம் எளிதாகப் பரவி பக்கத்து நாடுகளுக்கும் சென்று விடும். ராஜபுதனத்து கவுரவம் காற்றில் பறக்கும். பலவாறு குழம்பியவன் மனைவியை கொல்ல முடிவு செய்தான்.

மனதைக் கல்லாக்கிக் கொண்டு அரண்மனையில் தண்டனைகளை நிறைவேற்ற அமர்த்தப்பட்டிருந்தவர்களை அழைத்து, ராணியைக் கொன்று விட கட்டளையிட்டான்.

பதறிப்போனாலும், அரசனின் கட்டளையை நிறைவேற்ற அவர்கள் சித்தமாயிருந்தனர்.

அந்தப்புரத்தில் குணவதி, கிருஷ்ணனுக்கு விளக்கேற்றி, பத்மாசனத்தில் அமர்ந்து கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தாள்.

அவள் தியானத்தில் அமரும் முன்பே, அவளைக் கொலை செய்ய காவலர்கள் மறைந்து இருந்தனர். இப்போது வெளிப்பட்ட அவர்கள், அவளைக் கொல்ல நெருங்கினர்.

அப்போது மிகப்பெரிய உறுமல் கேட்டது. அந்த சத்தத்தைக் கேட்டு காவலர்கள் நடுங்கினர். அப்போது கிருஷ்ண விக்கிரகத்தில் இருந்து ஒரு பெரிய வேங்கைப் புலி வெளிப்பட்டு, காவலர்களை துவம்சம் செய்தது. பின்னர் மீண்டும் விக்கிரகத்திற்குள் சென்று ஐக்கியமானது.

சத்தம் கேட்டு அங்கே ஓடி வந்தவர்கள் விஷயத்தைப் புரிந்து கொண்டனர். தன் பக்தையைக் காக்க பரந்தாமன் புலி ரூபத்தில் வந்த விஷயம் நொடிப் பொழுதில் அரண்மனை முழுவதும் பரவியது.

தன் மனைவியைக் கொல்லச் சொல்லி விட்டு, காட்டுக்கு வேட்டையாடப் போயிருந்த மன்னனுக்கும் தகவல் போயிற்று. அவன் திரும்பும் வழியில் காட்டாற்றை கடந்த போது, தண்ணீர் அதிகரித்து வெள்ளத்தில் தத்தளித்தான்.

மன்னன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பி, கிருஷ்ணனிடமும், குணவதியிடமும் மன்னிப்புக் கேட்கத் தொடங்கினான். உடனே காட்டாற்று வெள்ளம் குறைந்து அவர்களுக்கு வழி விட்டது.

அரசி குணவதியை மக்கள் அனைவரும், ‘பக்த குணவதிபாய்’ என்று அழைக்கத் தொடங்கினர்.

இன்றும் ராஜபுதனத்து மக்கள், பக்த குணவதிபாய் கதையை வழிவழியாக தன் குழந்தைகளுக்கு பக்தியோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கெல்லாம் முரளிதர கீர்த்தனம் பாடப்படுகிறதோ, அங்கெல்லாம் சிரம் மேல் கரம் குவித்து, கண்ணில் நீர் பெருக நின்று, பக்த குணவதி பாய் தன்னுடைய பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டே இருக்கிறார்.

- தொடரும்.

மேலும் செய்திகள்