திருஞானசம்பந்தரை பதிகம் பாட வைத்த ஈசன்

திருவள்ளூர் அருகே எலுமியன்கோட்டூர் எனும் சிற்றூர் உள்ளது. இங்கு கனககுசாம்பிகை சமேத தெய்வநாயகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மகா பிரளய காலத்தில் உலகத்தைக் காப்பாற்ற, தாம் தங்குவதற்கு அமைதியான இடம் என்று சிவபெருமான் தேர்வு செய்த தலம் என்பதால், இது மன அமைதி தரும் திருத்தலமாக திகழ்கிறது.

Update: 2019-11-21 11:42 GMT
புராண காலத்தில் தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் விண்ணில், பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை கட்டி ஆண்டுவந்தனர். அவர்கள் தேவர்களுக்குப் பெருந்துன்பம் விளைவித்து வந்தனர். இதுபற்றி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். உடனே அசுரர்களை அழிக்க ஆயத்தமானார் ஈசன்.

பூமியே- தேராக, சூரிய சந்திரர்கள் - சக்கரங்களாக, பிரம்மன் -தேரோட்டியாக, மேருமலை - வில்லாக, வாசுகி - நாணாக, நாராயணப் பெருமாளை அம்பாகக்கொண்டு, அசுரர்களின் பறக்கும் நகரங்களை ஒரே அம்பில் வீழ்த்தப் புறப்பட்டார். தேவர் படைக்குத் தலைமையேற்று, திரிபுர அசுரர்களை அழிக்க மரமல்லிகை வனம் வழியே சென்றார். அப்போது சிவனுடன் சென்ற தேவர்கள், விநாயகரை வழிபட மறந்துவிட்டனர்.

இதனால் தேர் அச்சு முறிந்து, தேர் நிலை குலைந்தது. தேர் கீழே கவிழாமல் மகாவிஷ்ணு தாங்கிப் பிடித்தார். தேரில் இருந்த பரமன், தம் கரத்திலிருந்த வில்லை தரையில் ஊன்றி நின்றார். அப்போது சிவன் கழுத்திலிருந்த கொன்றை மலர் மாலை தரையில் விழுந்தது. பின்னர் அந்த மாலை சுயம்பு லிங்கமாக மாறியது.

நீர்ப்பரப்பின் அருகிலுள்ள பசுமையான சோலை போன்று விளங்கிய அந்த இடம் ‘இலம்பை’ என்றழைக்கப்பட்டது. இங்கு சுயம்புவாகத் தோன்றி, தீண்டாத் திருமேனியுடன் விளங்கும் சிவபெருமான், தேவர் படைக்குத் தலைமை ஏற்று சம்காரத்திற்குச் சென்றதால் ‘தெய்வ நாயகேஸ்வரர்’ என்று அழைக்கப்படலானார்.

ஒரு சமயம் திருஞானசம்பந்தர் சிவத்தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடிவிட்டு, இத்தலம் வழியே திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் முன்பாக சிறுவன், முதியவர் தோற்றத்தில் வந்த இறைவன், ‘இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அவரைக் குறித்துப் பதிகம் பாடு’ என்றார். அதன்படி இங்குவந்த சம்பந்தர், சிவன் இருக்கும் இடத்தைக் காணமுடியாமல் திரும்பிச் சென்றார். மீண்டும் வெள்ளைப் பசு வடிவில் அவரை மறித்த சிவன், கோவிலை நோக்கிச் சென்று மறைந்தார். இறைவனின் இருப்பிடத்தை உணர்ந்து கொண்ட சம்பந்தர் தெய்வநாயகேஸ்வரர் குறித்துப் பதிகம் பாடி இறைவனை தரிசித்து மகிழ்ந்தார்.

பல்வேறு புராணப் பெருமைகள் கொண்ட இத்தல இறைவனை வழிபாடு செய்தால், முன்ஜென்ம பாவம் விலகும். பேரின்ப நிலை கிடைக்கும். உடல் பொலிவு உண்டாகும் என்கிறார்கள். இத்தலத்தில் யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். தலைசாய்த்து, கண்களை மூடி, வலது கரத்தை தன் இதயத்தில் வைத்து சின்முத்திரைக் காண்பித்தவாறு அபூர்வக் கோலத்தில் இவர் வீற்றிருக்கிறார். 16 வகை செல்வங்களையும் வாரிவழங்கும் இந்த யோக தட்சிணாமூர்த்தியை, குரு தோஷம் உள்ளவர்கள் அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடலாம்.

மன இறுக்கம் உள்ளவர்கள், திங்கட்கிழமை தெய்வ நாயகேஸ்வரரையும், சக்கர பீடத்தில் எழுந்தருளியுள்ள கனக குசாம்பிகையை வழிபடுவதோடு, குரு தோஷம் அகலவும், குரு பலம் பெறவும் வியாழக்கிழமை யோக தட்சிணாமூர்த்தியையும் நெய் தீபமேற்றி 11 முறை வலம்வந்து வழிபட வேண்டும். சருமத் தொடர்பான நோய் நீங்கவும், இழந்த செல்வம், செல்வாக்கு, பதவி போன்றவற்றைத் திரும்பப் பெறவும் இவ்விதம் வழிபட்டுப் பலன் பெறலாம்.

இந்த ஆலயத்தில் குருப்பெயர்ச்சி, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு ஆகியன இவ்வாலய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

சென்னை - அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் கடம்பத்தூரில் இறங்கி பேரம்பாக்கம் வந்து ஆட்டோ மூலம் இக்கோவிலை அடையலாம். சென்னை - பூந்தமல்லி - வளர்புறம் - மப்பேடு - பேரம்பாக்கம் வழியாக நரசிங்கபுரம் வரை பேருந்து வசதியுள்ளது. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் சொந்த வாகனம் அல்லது ஆட்டோ மூலம் பயணித்து எலுமியன்கோட்டூர் தலத்தை அடையலாம். ஸ்ரீபெரும்புதூர் - சுங்குவார்சத்திரம் வழியாக மதுரமங்கலம் வந்து, 6 கி.மீ. பயணித்தாலும் ஆலயத்தை அடைய முடியும்.

- கீழப்பாவூர் கி.ஸ்ரீமுருகன்

மேலும் செய்திகள்