வளமான வாழ்வருளும் வசந்த நவராத்திரி; 25-3-2020 முதல் 3-4-2020 வரை

அன்னை பராசக்திக்கு விருப்பமான வருடாந்திர விசேஷங்களில் ஒன்று நவராத்திரி. ஒவ்வொரு மாதமும் அமாவாசை பிரதமையில் இருந்து தசமி வரை உள்ள பத்து நாட்களும் நவராத்திரியாகவே கருதப்பெறுகிறது. ஆனால் நான்கு நவராத்திரிகள் மட்டுமே முக்கியமானதாக கருதப்படுகிறது. அவை:-

Update: 2020-03-24 07:36 GMT
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்பெறும் நவராத்திரி ‘சாரதா நவராத்திரி’, மாசி மாதத்தில் கொண்டாடப்படும் ‘சியாமளா நவராத்திரி’, ஆடி மாதத்தில் கொண்டாடப்பெறும் ‘ஆஷாட நவராத்திரி’, வசந்த காலத்தில் கொண்டாடப்படும் ‘வசந்த நவராத்திரி’ ஆகியவையாகும்.

இவற்றில் புரட்டாசி நவராத்திரியும், பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரியுமே பழக்கத்தில் இருக்கின்றன. அதிலும் அதிகமான மக்களால் கடைப்பிடிக்கப்படும் நவராத்திரி விரதமாக புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியே முக்கியமானதாக இருக்கிறது. அதே நேரம் வசந்த நவராத்திரியும் தவிர்க்க முடியாத நவராத்திரி விரதத்தில் ஒன்றாக இருக்கிறது. வசந்த காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருப்பதால், வசந்த நவராத்திரி பூஜைகள் பகலிலேயே நடைபெறுகின்றன. வசந்த நவராத்திரியை ‘லலிதா நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள்.

வசந்த நவராத்திரி என்பது கானகத்தில், கந்த மூலிகைகளைக் கொண்டு செய்யக் கூடியதாகும். இதை ராமபிரான் கானகத்தில் இருந்தபோது, நாரத முனிவர் நடத்தி வைத்ததாக, ராம சரிதம் சொல்கிறது. புராணத்தில் பங்குனியும், புரட்டாசியும் எமதர்ம ராஜனின் கோரைப்பற்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத காலங்களும் நோய்க் கிருமிகள் பரவும் காலமாக இருப்பதாகவும், தெய்வத்தின் அருள் மனிதருக்குக் கிடைப்பதில் தடை ஏற்படும் காலம் என்றும் சொல்லப்படுகிறது. எனவேதான் இந்த கால கட்டத்தில் அம்பாளை வழிபடும் நவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வசந்த நவராத்திரி கொண்டாடுவதற்கான ஒரு குட்டிக்கதை சொல்லப்படுகிறது. அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.

முன்னொரு காலத்தில் அயோத்தி தேசத்தை துருவசிந்து என்ற மன்னன் ஆட்சி செய்தான். அந்த மன்னனுக்கு மனோரமா, லீலாவதி என்று இரண்டு மனைவிகள். ஒருமுறை வேட்டைக்காக காட்டிற்கு சென்ற மன்னன், சிங்கத்தால் மரணம் அடைந்தான். இதையடுத்து மன்னனின் மனைவியர்களில் யாருடைய மகனுக்கு முடிசூட்டுவது என்ற பிரச்சினை எழுந்தது. முறைப்படி மனோரமாவின் மகன் சுதர்சனனுக்கு முடிசூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் லீலாவதியின் தந்தை சத்ருஜித் தன்னுடைய பேரனும், லீலாவதியின் மகனுமான யுதஜித்தை அரசனாக்க விரும்பினான். அதற்கான முயற்சியிலும் இறங்கினான்.

இதையறிந்த மனோரமாவின் தந்தை வீரசேனன், சத்ருஜித்தை எதிர்த்தான். இதனால் இருவருக்கும் போர் மூண்டது. இதில் வீரசேனன் கொல்லப்பட்டான். இதையடுத்து மனோரமாவும், சுதர்சனனும் உயிர்தப்பி காட்டிற்குள் சென்றனர். அவர்கள் இருவரும் காட்டிற்குள் இருந்த பரத்வாஜ் முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்தனர்.

இந்த நிலையில் அயோத்தியின் ஆட்சிப்பொறுப்பை அடைந்த யுதஜித், தன்னுடைய படையினரை அனுப்பி சுதர்சனனை கண்டுபிடிக்க உத்தரவிட்டான். அந்தப் படையினர், சுதர்சனனும் அவனது தாயும் பரத்வாஜ் முனிவரின் ஆசிரமத்தில் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து சுதர்சனனை தன்னுடைய கைதியாக அனுப்பிவைக்கும்படி, பரத்வாஜ் முனிவருக்கு யுதஜித் தூது அனுப்பினான். ஆனால் தன்னை நாடி வந்தவர்களை காப்பது தன்னுடைய கடமை என்று கூறி, அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார், முனிவர். இதனால் கோபம் அடைந்த யுதஜித், போர் தொடுக்க முடிவு செய்தான். ஆனால் அவனோடு இருந்த அமைச்சர்கள், ‘முனிவர்களை எதிர்ப்பது நமக்கு நல்லதல்ல’ என்று அறிவுரை கூறியதைத் தொடர்ந்து, யுதஜித் அந்த முடிவை கைவிட்டான்.

இந்த நிலையில் ஆசிரமத்தில் இருந்த சுதர்சனுக்கு ‘க்லீம்’ என்ற அம்பாளின் பீஜ மந்திரத்தை பரத்ராஜ் முனிவர் உபதேசித்தார். அதை இடைவிடாது சொல்லி வந்த சுதர்சனன் ஒரு கட்டத்தில் தவ நிலைக்கு சென்றான். அவன் உச்சரித்த மந்திரத்தில் வீரியம், அன்னை பராசக்தியை அவன் முன்பாகத் தோன்றும்படி செய்தது. சுதர்சனன் முன்பாக தோன்றிய தேவி, அவனுக்கு சக்தி வாய்ந்த, அழிவில்லாத ஆயுதங்களை பரிசாக வழங்கினாள்.

சில காலங்களுக்குப் பிறகு, பனாரஸ் நாட்டு அரசனின் ஒற்றர்கள், பரத்வாஜ் முனிவரின் ஆசிரமம் வழியாக சென்றபோது, ஆயுதங்களை லாவகமாக கையாண்ட சுதர்சனனைக் கண்டனர். அவர்கள் பனாரஸ் அரசனின் மகளான சசிகலாவிற்கு, சுதர்சனன் ஏற்ற துணையாக இருப்பான் என்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பனாரஸ் மன்னன், சுதர்சனனை முறைப்படி அழைத்து தன் மகளை மணம் முடித்துக் கொடுப்பது பற்றி பேசினான். சுதர்சனனும் சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையறிந்த யுதஜித், பனாரஸ் நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அப்போது சுதர்சனன் தன்னிடம் இருந்த சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு, யுதஜித்தை தோற்கடித்து, தன் மாமனாரை காப்பாற்றினான். சுதர்சனனிடம் இருந்த ஆயுதங்கள், யுதஜித்தின் படைகளை துவம்சம் செய்து அழித்தொழித்தது. போர் முடிந்ததும், சுதர்சனன் - சசிகலா திருமணம் விமரிசையாக நடைபெற்றது. அனைவரும் தேவியின் மந்திரத்தை உச்சரித்து அவளை வணங்கினர்.

இதனால் மனம் மகிழ்ந்த அன்னை பராசக்தி, அவர்களின் முன்பாக தோன்றி ‘என்னை வருடந்தோறும் இதே வசந்த காலத்தில் வழிபாடு செய்யுங்கள். உங்கள் துன்பங்கள் யாவும் மறைந்து நன்மைகள் விளையும்’ என்று கூறி மறைந்தாள்.

திருமணத்திற்கு பிறகு சுதர்சனன் தன் மனைவியுடன் பரத்வாஜ் முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான். அவனை வாழ்த்திய முனிவர், அவனை அயோத்தியின் அரச னாக முடிசூட்டிக் கொள்ளும்படி அனுப்பிவைத்தார். மன்னனாக பொறுப்பேற்ற சுதர்சனன், நாட்டு மக்களுடன் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் வசந்த நவராத்திரியை கொண்டாடி மகிழ்ந்தான்.

இந்த புண்ணிய தினங்களில் அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று, அம்பாளுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். வசந்த நவராத்திரி நாட்களில் அனுதினமும் அம்பாளுக்கு நிகழும் ஆராதனைகளைத் தரிசிப்பதால், விசேஷ பலன்கள் கைகூடும். வீட்டிலும் அனுதினமும் சித்ரான்னங்கள் படைத்து, லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலான தேவி துதிப் பாடல்களைப் பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால், அனைத்து நோய்களும் விலகி, சகல நன்மைகளும் அந்த இல்லத்தில் பொங்கிப் பெருகும்.

நவராத்திரிகளும்.. வழிபாடும்..

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்பெறும் நவராத்திரியின் போது அம்பிகையை, மூன்று அம்சங்களாகக் கருதி வழிபடுகிறோம். கல்வியை தரும் அன்னை சரஸ்வதி தேவிக்கு மூன்று நாட்களும், செல்வத்தினை வழங்கும் மகாலட்சுமிக்கு மூன்று நாட்களும், தொடர்ந்து ஆற்றலையும், நம்பிக்கையும் வழங்கும் துர்க்கைக்கு மூன்று நாட்களும் ஆக ஒன்பது நாட்களும் நவராத்திரி கொண்டாடப்படும். ஆடி மாதப் பிரதமை தொடங்கும் ஆஷாட நவராத்திரியில் வராஹி அம்பிகையை முன்னிறுத்தி வழிபாடு செய்வார்கள். மாசி மாத பிரதமையிலிருந்து தொடங்கும் சியாமளா நவராத்திரியில் ராஜ மாதங்கி என்னும் சியாமளா தேவியை முன்னிறுத்தி வழிபாடு செய்வார்கள். அதே போல் வசந்த நவராத்திரியில் உலகை ஆளும் பராசக்தி அன்னையை முன்னிறுத்தி வழிபடுவார்கள்.

ஒரே பராசக்திதான். ஆனால் பல ரூபங்களாக நின்று பக்தர்களுக்கு அன்னை அருள்கிறாள். ஐந்து அடிப்படைத் தொழில்களைச் செய்வதற்காக ஐந்து அம்சங்களாகப் பிரிந்து அருளாட்சி செய்கின்றாள். படைக்கும் சக்தி ப்ரம்மரூபிணியான சரஸ்வதியாகவும், காக்கும் சக்தி விஷ்ணு ரூபிணியான லட்சுமியாகவும், அழிக்கும் சக்தி ருத்ர ரூபிணியான துர்க்கையாகவும், மறைக்கும் சக்தி ஈஸ்வரனின் ரூபிணியான ஈஸ்வரியாகவும், அருளும் சக்தி சதா சிவனின் ரூபிணியான பராசக்தியுமாகவும் அருள்பாலிக்கின்றார்கள்.

மேலும் செய்திகள்