பாவங்களை நீக்கியருளும் மாசி மகம்

ஒருமுறை கயிலையில் பார்வதியும், பரமனும் வீற்றிருந்தனர். அப்போது சிவபெருமான், “சக்தியால்தான் அனைத்து உயிர்களும் இயங்குகின்றன” என்று கூறினார்.

Update: 2021-02-23 12:40 GMT
ஒருமுறை கயிலையில் பார்வதியும், பரமனும் வீற்றிருந்தனர். அப்போது சிவபெருமான், “சக்தியால்தான் அனைத்து உயிர்களும் இயங்குகின்றன” என்று கூறினார். இதனைக் கேட்ட பார்வதி, ‘தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது’ என்று பெருமைப்பட்டாள். இதைஅறிந்ததும் சிவபெருமான், பார்வதியை விட்டு தனித்து நின்றார். இதையடுத்து உலகம், எந்தவித இயக்கமும் இன்றி நின்றுபோனது.

தன் தவறை உணர்ந்த பார்வதி, “இறைவா.. எல்லாம் நீங்களே என்று உணர்ந்துவிட்டேன். கருணை புரிந்து உலகை காக்க வேண்டும்” என்று வேண்டினாள். உடனே சிவபெருமான் பார்வதியைப் பார்த்து, “உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும். அந்த பாவம் நீங்க நீ யமுனை நதியில் வலம்புரிச் சங்கு வடிவில் தவம் செய்து வா” என்று கூறினார்.

சிவனின் கட்டளைப்படி பார்வதி, யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவம் செய்து கொண்டிருந்தாள். அப்போது தட்சன், தன் மனைவியுடன் நதியில் நீராட வந்தான். அங்கிருந்த தாமரையில் வலம்புரி சங்கிருப்பதைக் கண்டெடுத்தான். அவன் கையில் எடுத்ததும், அது பெண் குழந்தை வடிவம் பெற்றது. அந்தக் குழந்தையை தன் பிள்ளையாக ‘தாட்சாயிணி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். இப்படி தாட்சாயிணியாக அம்பிகை அவதரித்த தினம் ‘மாசி மகம்’ ஆகும்.

ஒரு முறை இரண்யாசுரன் என்பவன், பூமியை கடலுக்கு அடியில் பாதாளத்தில் ஒளித்து வைத்தான். அதனை மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து மீட்டுக் கொண்டுவந்தார். அன்றைய தினமும், மாசி மகம்தான்.

முருகப்பெருமானுக்கு, ‘தகப்பன்சாமி’ என்ற பெயர் உண்டு. தந்தையான சிவபெருமானுக்கு, பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்ததால் முருகனுக்கு இப்பெயர் வந்தது. முருகன், தன் தந்தைக்கு உபதேசம் செய்த நாள், மாசி மகம் ஆகும்.

இப்படி பார்வதிதேவி, மகாவிஷ்ணு, முருகன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் உகந்த நாளாக மாசி மகம் திகழ்கிறது. இத்தகைய புண்ணிய நாள், தோஷம் நீக்கும் சிறப்பு மிகுந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்கிறார்கள். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும். பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.

முன்பு ஒரு காலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரம்மஹத்தி, அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவரைக் காப்பாற்றினார். அவரை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன், “மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருளும்படி சிவபெருமானை வேண்டினார். அதன்படியே இன்றளவும் நீராடல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்