நலம் பல அருளும் ‘நவ பிருந்தாவனம்’

இறைபக்தியில் வாழ்ந்து மறைந்த மகான்களின் சமாதியை ‘பிருந்தாவனம்’ என்றும் அழைப்பார்கள்.

Update: 2021-03-01 22:24 GMT
கர்நாடக மாநிலத்தில் உள்ளது ஆனேகுந்தி என்ற இடம். இங்கு ‘நவ பிருந்தாவனம்’ அமைந்துள்ளது. இறைபக்தியில் வாழ்ந்து மறைந்த மகான்களின் சமாதியை ‘பிருந்தாவனம்’ என்றும் அழைப்பார்கள். அப்படி மகான்களின் சமாதிகள் ஒரே இடத்தில் அமைந்த இந்த இடம் ‘நவ பிருந்தாவனம்’ என்று அழைக்கப்படுகிறது.

ராமாயணத்தோடு நெருங்கியத் தொடர்பு கொண்ட ஊராக, கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி அறியப்படுகிறது. ஏனெனில் ராமபிரான் வனவாசம் வந்தபோது, வாலி என்னும் வானர அரசன் ஆட்சி செய்த பகுதியே கிஷ்கிந்தை. சுக்ரீவனும், அனுமனும், மற்ற பிற வானர வீரர்களும் இங்குதான் வசித்தனர். அந்த கிஷ்கிந்தையே, இன்றைய ஹம்பி என்று சொல்லப்படுகிறது.

இங்கு சமாதியாகி உள்ள ஒன்பது பேரும், ராகவேந்திர சுவாமிகளின் ஆசார்ய குருமார்கள் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த இடம் புனிதமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் நம்பப்படுகிறது. நவ பிருந்தாவனம் அமைந்த இடம் ஒரு தீவு போன்ற பகுதியாகும். ஒரு புறம் துங்கா என்ற நதியும், மறுபுறம் பத்ரா என்ற நதியும் ஓடுகிறது. இந்த இரண்டு நதியும் இணையும் பகுதியில் ‘துங்கபத்ரா’ நதியாக மாறுகிறது.

அப்படி துங்கபத்ரா நதியாக மாறும் இடத்தில் ஒரு பாறையில்தான் இந்த நவ பிருந்தாவனம் அமைந்திருக்கிறது. ராமாயணத்தில், சீதையைத் தேடி வனத்திற்குள் அலைந்து திரிந்த ராமரும், லட்சுமணரும், இந்த பாறையின் மேல் அமர்ந்திருந்ததாக தல வரலாறு சொல்கிறது. இந்த இடத்தில்தான் ராமபிரானை, ஆஞ்சநேயர் முதன் முறையாக சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது.

நதியின் நடுவில் தீவு போல் அமைந்த இந்த நவ பிருந்தாவனத்தை அடைய, மோட்டார் படகு மூலம்தான் செல்ல முடியும். இங்குள்ள ஒன்பது மகான்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்க்கலாம்.

பத்மநாப தீர்த்தர்:- நவ பிருந்தாவனத்தில் முதல் பிருந்தாவனம், பத்மநாப தீர்த்தருக்கு உரியது. இவரது இயற்பெயர் சோபன பட்டர் என்பதாகும். இவர் காகதீய அரசனின் அமைச்சரவையில் முதன்மை அமைச்சராக இருந்திருக்கிறார். வியாகரணம் மற்றும் தர்க்கத்தில் சிறந்து விளங்கிய இவர், பின்காலத்தில் இறை மார்க்கமாக சென்று முக்தியை அடைந்துள்ளார். இவர் மத்வாச்சாரியார் என்றும் அழைக்கப்பட்டுள்ளார்.

ஜய தீர்த்தர்:- இரண்டாவது பிருந்தாவனம் இவருடையது. இவர் மத்வாச்சாரியாரின் நான்கு சீடர்களில் ஒருவராக இருந்த அக்சோப்ய தீர்த்தரின் சீடராக இருந்திருக்கிறார். இந்த பிருந்தாவனம் ரகுவர்ய தீர்த்தர் என்பவருக்குரியது என்ற இன்னொரு கருத்தும் இங்கு நிலவுகிறது.

கவீந்திர தீர்த்தர்:- ஜய தீர்த்தரிடம் சீடராக இருந்தவர், வித்யாதிராஜர். இவரின் சீடராக இருந்தவரே, இந்த கவீந்திர தீர்த்தர் ஆவார். இவரது சமாதியே, நவ பிருந்தாவனத்தில் மூன்றாவதாக அமைந்திருக்கிறது.

வாகீச தீர்த்தர்:- கவீந்திர தீர்த்தரின் சீடராக இருந்தவர் இவர். வாகீச தீர்த்தர், தன்னுடைய குருவைப் போலவே, அருள் பெற்றவராக இருந்தார். இவருக்கு தன்னுடைய குருவின் சமாதி அருகிலேயே, சமாதி அமைந்தது, இவர் செய்த புண்ணியத்திலும் புண்ணியம். அதை வழிபடும் பாக்கியம் கிடைத்தவர்கள் அதிலும் புண்ணியம் பெற்றவர்கள் ஆவர்.

வியாசராஜர்:- நவ பிருந்தாவனத்தில் நடுநாயகமாக அமைந்திருக்கிறது, வியாசராஜரின் சமாதி. இவரது சமாதி அமைந்த இடமானது, பிரகலாதர் தவம் செய்த இடம் என்று சொல்லப்படுகிறது. முன் அவதாரத்தில் இவரே, பிரகலாதனாக இருந்தார் என்றும், பின் அவதாரத்தில் இவரே அனைவரும் வழிபடக்கூடிய ராகவேந்திரராக மாறினார் என்றும் நம்பப்படுகிறது.

ஸ்ரீநிவாச தீர்த்தர்:- இவர் வியாசராஜ சுவாமிகளின் சீடராக இருந்தவர். அதோடு வியாசராஜரின் அக்கா மகன்தான் இந்த ஸ்ரீநிவாச தீர்த்தர். இவருக்கும் தன்னுடைய குருவின் அருகிலேயே பிருந்தாவனம் அமைந்திருக்கிறது.

ராம தீர்த்தர்:- ஸ்ரீநிவாச தீர்த்தருக்குப்பின் பட்டத்திற்கு வந்தவர், இந்த ராம தீர்த்தர். வியாசராஜர் அருளிய கிரகந்தங்களை போதிப்பதிலும், பிரவசனம் செய்வதிலும் இவருடைய பங்கு பெரும்பான்மையாக இருந்தது.

சுதீந்திர தீர்த்தர்:- ராகவேந்திர சுவாமிகளைக் கொண்டாடாதவர்களே இருக்க முடியாது. கலியுகத்தில், பூலோகத்தில் வசிக்கும் அனைவருக்கும் அற்புத வரங்களை அள்ளித் தரும் அந்த ராகவேந்திரரை, இந்த பூமிக்கு தந்தருளியவர், இந்த சுதீந்திர தீர்த்தர்.

கோவிந்த ஓடயர்:- இவர் வியாசராஜ சுவாமிகளின் காலத்தில் வாழ்ந்தவர். அதிலும் வியாசராஜருக்கு முன்பாகவே, இந்த இடத்தில் பிருந்தாவனஸ்தம் பெற்றவர் என்பது சிறப்புக்குரியது.

இந்த நவ பிருந்தாவனத்தில் மேற்கண்ட ஒன்பது மகான்களின் சமாதிகளைத் தவிர்த்து, ஆஞ்சநேயர் மற்றும் ரங்கநாதர் ஆகியோருக்கு சன்னிதிகள் அமைந்திருக்கிறது. இங்கு வந்து வழிபாடு செய்வதன் மூலமாக நவ நிதிகள் எனப்படும் பொன், பொருள் சேர்க்கையைப் பெறலாம் என்கிறார்கள்.

மேலும் செய்திகள்