சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பஞ்சாங்கம் வைத்து பூஜை

காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் தமிழ்பஞ்சாங்கம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

Update: 2021-07-11 01:51 GMT
காங்கேயம், 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு உத்தரவு கேட்கப்படும். அதன்பின்னர் பக்தரின் கனவில் வந்த பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து தினமும் பூஜை நடத்துவார்கள்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த லதாசம்பத்குமார் என்ற பக்தரின் கனவில் உத்தரவான தமிழ் பஞ்சாங்கம், ஆதார் அட்டை, மணி, 10 ரூபாய் நாணயங்கள் (60 நாணயங்கள்) ஆகிய பொருட்கள் நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கொடுவாய் பகுதியை அடுத்த நாட்டான்வலசை சேர்ந்த முருக பக்தர் அண்ணாதுரை கூறியதாவது:-

தற்போது உத்தரவாகியுள்ள பஞ்சாங்கம், குறிப்பாக பாம்பு பஞ்சாங்கம் பாரம்பரியமிக்கது. தெய்வீகமானது. அதாவது நமது பாரத பாரம்பரியம் உயிர்ப்புடன் எழுச்சி பெறும். ஆதார் அட்டையின் மூலம் இந்த தேசத்தில் சட்டவிரோதமாக குடியேறி தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

மணி என்பதே மங்களகரமானது. கோவில்களில் பூஜைகள் சிறப்பாக நடந்து பக்தர்களும், நாட்டு மக்களும் சுபிட்சம் பெறுவார்கள். 10 ரூபாய் நாணயங்கள் பொருளாதாரத்தை குறிக்க உத்தரவாகியுள்ளது. பாரத நாட்டின் பொருளாதாரம் சிறப்புற்று விவசாயம், தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் வளர்ச்சி பெறும். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் பாரதம் வல்லரசாகும் என்பதையே முருகப் பெருமான் குறிப்பில் காட்டியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்