கலைநயம் மிக்க கயிலாசநாதர் கோவில்

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில், கயிலாசநாதர் கோவில் இருக்கிறது.

Update: 2021-09-14 12:17 GMT
மண், மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் எதுவும் இன்றி ஒரு ஆலயம் கட்ட நினைத்தான், மகேந்திரவர்மன். அவன் மரபில் வந்த ராஜசிம்மன் அதை சாத்தியப்படுத்தினான். அதுவே காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாசநாதர் கோவில். இது முழுவதும் கல்லால் மட்டுமே அமைந்திருக்கிறது. காஞ்சிபுரத்தில் பாயும் வேகவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம், ‘தென்திசை கயிலாயம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. கருவறை விமானம் தனிச்சிறப்பு கொண்டது. மாமல்லபுரத்தில் உள்ள தர்மராஜ ரதத்தின் உச்சிப் பகுதியை போன்று இதன் விமானம் அமைந்துள்ளது. இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்ம பல்லவனால் இந்த ஆலயத்தின் கட்டுமானம் கி.பி.700-ல் தொடங்கப்பட்டது. ஆனால் அவரது மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் காலத்தில்தான் கட்டிடப் பணிகள் முடிவுற்றன. கருவறையில் வீற்றிருக்கும் கயிலாசநாதர் என்ற பெயருடைய சிவலிங்கம், 16 பட்டைகள் கொண்டு ‘ஷோடச லிங்க’மாக விளங்குகிறது. இந்த லிங்கத்தின் பின்புறம், சிவபெருமான், பார்வதி ஆகியோரின் நடுவில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் ‘சோமாஸ்கந்தர்’ உருவம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. பிரதான ஆலயத்தைச் சுற்றி பல சிறு துணை ஆலயங்கள் உள்ளன. அவை அனைத்தும் சிறு விமானத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த துணை ஆலயங்களை அமைத்தவர், ராஜசிம்மனின் பட்டத்தரசி ரங்கபதாகை ஆவார். ஆலயத்தின் வெளிமதில்களில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர், சந்தியா தண்டவர், பிட்சாடனர் என்று சிவபெருமானின் பல்வேறு வகையான வடிவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. கருவறையை சுற்றி குறுகலான திருச்சுற்று உள்ளது. இதற்கு ‘புனர்ஜனனி’ என்று பெயர். இந்த திருச்சுற்றின் உள், வெளி வாசல்கள் தரையில் படுத்து ஊர்ந்து செல்லும் வகையில் அமைந்தவை. இதனைச் சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை என்கிறார்கள். ராஜசிம்ம பல்லவன், போரில் சிங்கம் போன்றவன் என்ற பெருமைக்குரியவன். அதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஆலயத்தில் அனைத்துப் புறங்களிலும், கோவிலைத் தாங்கி நிற்பது போல சிங்கத்தின் சிலைகளே அதிகமாக காணப்படுகின்றன. பிரதான ஆலயத்திலும், சுற்றியுள்ள துணை ஆலயங்களிலும் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. கி.பி.14-ம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்கள் இந்த ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டியதாக கருதப்படுகிறது. இதனால் இதனை ‘ஈரடுக்கு ஓவியங்கள்’ என்கிறார்கள். காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில், கயிலாசநாதர் கோவில் இருக்கிறது.

மேலும் செய்திகள்