உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்

பொய்மையை விடுத்து உண்மையான, நம்பிக்கைக்குரிய வாழ்வு வாழ்வதையே இறைவன் விரும்புகிறார்.

Update: 2022-11-24 09:40 GMT

உண்மையை துச்சமாக கருதி பொய்மையின் வாழ்வை நாம் வாழ்ந்து வருகிறோம். நம் வாழ்வில் பொய்மை நிழலாடுகின்றதை நம்மால் தவிர்க்க இயலவில்லை. பல வேளைகளில் சூழ்நிலைகளைச் சமாளிக்க, பிறரை மகிழ்விக்க, பிறரை சமாதானம் செய்ய, நம்மைப் பிறர் பெருமையாய் நினைக்க, எதிர்வரும் பிரச்சினைகளிலிருந்து தப்பித்திட, பிறரைக் காயப்படுத்த என நாம் பொய் சொல்லும் விதங்கள் பல.

பொய்மை தீமையின் பண்பு. ஆண்டவர் இயேசு இதுகுறித்து கூறும்போது, 'தொடக்கம் முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும் போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில் அவன் பொய்யன், பொய்மையின் பிறப்பிடம்' (யோவான் 8:44) என்கிறார்.

இறைவன் உண்மையுள்ளவர்

நம் வாழ்க்கை நெடுகிலும் உண்மைக்கும் பொய்மைக்குமான போராட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது. உண்மைக்காக வாழ்வதும், போராடுவதும், நிலைத்திருப்பதும் கடினமானது தான். போலி வாழ்வு வாழ்வது எந்த அளவிற்கு இலகுவானதோ, உண்மையில் வாழ்வதும் அந்த அளவிற்குக் கடினமானது தான். என்றாலும், நாம் உண்மையில் வாழவே அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

'உண்மையாயிருத்தல்' என்பதின் மறுபெயர் 'நம்பிக்கைக் குரியவராயிருத்தல்' என்பதாகும். 'உள்ளத்தில் உண்மையுள்ள வனாய் இரு, உறுதியாக இரு, பதற்றமுடன் செயலாற்றாதே' (சீஞா 2:2).

நாம் ஏன் உண்மை பேச வேண்டும்? ஏனெனில், 'நம் கடவுள் உண்மையுள்ளவர். அவர் நம்பத்தகுந்தவர்' (2 திமொ 2:13). ஆண்டவர் இயேசுவும், 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே' (யோவான் 14:6) என்கிறார்.

வாக்கில் உண்மையுள்ளவர்: 'நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர்' (எபிரேயர் 10:23).

அழைப்பில் உண்மையுள்ளவர்: 'உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர்' (2 தெச 5:24).

சோதிப்பதில் உண்மையுள்ளவர்: 'கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார். சோதனை வரும் போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார், அதிலிருந்து விடுபட வழி செய்வார்' (1 கொரி 10:12).

உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்.

மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார் (லூக்கா 16:10).

'மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்' என்றாலும் திருமறையில் மோசே 'என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன்' (எண்ணிக்கை 12:7) என்று இறைவனே மோசேயைக் குறித்து சாட்சி பகர்கின்றார்.

பொய்மையை விடுத்து உண்மையான, நம்பிக்கைக்குரிய வாழ்வு வாழ்வதையே இறைவன் விரும்புகிறார். போராட்டங் களையும், பாடுகளையும், வலிகளையும் பொறுத்து உண்மையில் வாழ்வோர் இறைவாக்கின்படி நலன்கள் பல பெறுவார்' (நீதி மொழிகள் 28:20).

Tags:    

மேலும் செய்திகள்