சபரிமலையில் தரிசன நேரம் நாளை முதல் நீட்டிப்பு

சபரிமலையில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 10 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Update: 2023-12-10 14:24 GMT

சபரிமலை,

மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி நடைபெறும். அன்றைய தினம் சாமிக்கு பந்தளத்தில் இருந்து எடுத்து வரப்படும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் தோன்றும் மகர ஜோதியை பக்தர்கள் பார்த்து வழிபடுவார்கள்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நடப்பாண்டில் தற்போது வரை 14 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இருப்பினும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 10 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் சாமி தரிசன நேரம் நாளை (11.12.2023) முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு பதில் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்