கிராமப்புறங்களில் மருத்துவர்கள்

‘நூறாண்டு காலம் வாழ்க’ என்று பொதுவாக ஒருவரையொருவர் வாழ்த்துவது வழக்கம். அப்படி நூறாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்தும்போதே, ‘நோய் நொடி இல்லாமல் வளர்க’ என்றுதான் வாழ்த்துவார்கள். அந்தவகையில், நோய் நொடி இல்லாத வாழ்க்கையே மிகச்சிறந்தது.

Update: 2017-01-10 21:30 GMT
‘நூறாண்டு காலம் வாழ்க’ என்று பொதுவாக ஒருவரையொருவர் வாழ்த்துவது வழக்கம். அப்படி நூறாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்தும்போதே, ‘நோய் நொடி இல்லாமல் வளர்க’ என்றுதான் வாழ்த்துவார்கள். அந்தவகையில், நோய் நொடி இல்லாத வாழ்க்கையே மிகச்சிறந்தது. அதையும் மீறி நோயோ, உடல்நலக்குறைவோ, பிரசவமோ, குழந்தைகளுக்கான சிகிச்சையோ, முதியோருக்கான சிகிச்சையோ, வழங்க வேண்டுமென்றால், அதற்கு நிச்சயமாக மருத்துவர்களின் உதவிதான் தேவை. நாட்டின் நகர்ப்புறங்களில் தற்போது எவ்வளவோ நவீன வசதிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருக்கிறது. வசதி படைத்தோர் தனியார் மருத்துவமனைகளிலும், வசதியில்லாதோர் அரசு மருத்துவமனைகளையும்தான் நாடுகிறார்கள். பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனைகளைத்தான் தங்கள் சிகிச்சைக்காக நம்பியிருக்கிறார்கள். இப்போது பெருகிவரும் மருத்துவசெலவில் எல்லோராலும் நிச்சயமாக தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாது. அரசு மருத்துவமனையைப் பொறுத்தமட்டில், தனியார் மருத்துவமனைக்கு ஈடாக, நகர்ப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது. ஆனால், கிராமங்களிலும், மலைப்பிரதேசங்களிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர்சிகிச்சை இல்லாவிட்டாலும், உடனடியாக அடிப்படை மருத்துவ உதவியாவது கிடைத்தால் போதும் என்றவகையில், ஏராளமான மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களைத்தான் நாடிச்செல்கிறார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 20 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், 302 மாவட்டம், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் இருந்தாலும், கிராமப்புறங்கள், மலைப்பகுதிகளில் உள்ள 1,765 ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான், அந்தப்பகுதிகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் பெரும் மருத்துவ சேவையை செய்து வருகின்றன. தமிழக அரசுப்பணியில் 17 ஆயிரம் டாக்டர்கள் இருக்கிறார்கள். இதில் கிராமப்புறங்கள், மலைப்பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 800 டாக்டர் பதவி காலியாக இருக்கின்றன. இவ்வளவு காலியிடங்கள் இருக்கிறதென்றால் இந்தப்பகுதியில் உள்ள மக்கள் அடிப்படை மருத்துவ உதவிக்காக எவ்வளவு பாதிப்பை சந்திப்பார்கள் என்பதை புரிய முடியும். ஆனால், இந்த மருத்துவமனைகளுக்கு சென்று வேலைப்பார்க்க கிராமப்புறங்களில் போதிய வசதிகள் இல்லை என்று டாக்டர்கள் தயங்குகிறார்கள். இதுபோன்ற நிலையை தவிர்க்க, தற்போது மத்திய அரசாங்கம் ஒரு நல்லமுடிவை எடுத்துள்ளது. எல்லா டாக்டர்களையும் கிராமப்புறங்களுக்கு சென்று பணியாற்றுவதை ஊக்குவிக்க இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தை திருத்தும் வகையில், ஒரு மசோதாவை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது. இதன்படி, எம்.பி.பி.எஸ். படித்து முடித்து அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் எங்கோ மூலைமுடுக்கிலும், வசதியற்ற குக்கிராமங்களிலும் பணியாற்றினால் அவர்கள் முதுநிலைபட்டப்படிப்பில் சேர 50 சதவீதம் இடஒதுக்கீடு செய்யும் ஒருதிட்டத்தை வகுத்துள்ளது.

உலகசுகாதார ஆராய்ச்சிநிலைய ஆய்வின்படி, 70 சதவீத கிராம மக்களுக்கு மிகக்குறைவான மருத்துவ வசதியே கிடைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசை பொறுத்தமட்டில், மருத்துவகல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். போன்ற பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, அரசு பணியில் உள்ள டாக்டர்களுக்கு ஒரு ஆண்டு பணிக்கு ஒரு சதவீத மார்க் வழங்கப்படுகிறது. ஆனாலும் மத்திய அரசு கொண்டுவரும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தால், எம்.பி.பி.எஸ். படித்து முடித்து அரசு பணியில் சேரும் டாக்டர்கள் உயர்படிப்பு படிக்க உதவும் என்ற வேட்கையால் கிராமப்புறங்கள், மலைபிரதேசங்களில் வேலைபார்க்க முன்வருவார்கள். இந்த திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தினால், இதுபோல் 800 டாக்டர் பதவிகள் ஒருபோதும் காலியாக இருக்காது. மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே போகும்போது, அதற்கேற்ற வகையில் கிராமப்புறங்களில் பணியாற்றும் டாக்டர்களின் எண்ணிக்கையையும் உயர்த்தவேண்டும். நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்துவவசதி, சாதாரண ஏழை–எளிய மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பதுதான் சமூக நியதியாகும். அதை நோக்கி அரசு வேகமாக பயணிக்கவேண்டும்.

மேலும் செய்திகள்