எல்லோர் மீதும் சந்தேகம் வேண்டாம்

பிரதமர் நரேந்திரமோடி கடந்த நவம்பர் 8–ந் தேதி இரவில், புழக்கத்திலிருக்கும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் உடனடியாக செல்லாது என்று அறிவித்தார்.

Update: 2017-02-03 20:30 GMT
பிரதமர் நரேந்திரமோடி கடந்த நவம்பர் 8–ந் தேதி இரவில், புழக்கத்திலிருக்கும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் உடனடியாக செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிடும் போதே, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் எந்தவித வரம்புமின்றி, டிசம்பர் 30–ந் தேதிவரை வங்கிகளில் செலுத்தலாம் என்று கூறினார். அந்தநேரத்தில் மொத்தம் ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி, 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. இதில், ஏறத்தாழ ரூ.15 லட்சம் கோடி இப்போது வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. இவ்வாறு டெபாசிட் செய்தவர்களின் விவரத்தை மத்திய நேர்முகவரிகள் வாரியம் கழுகு கண்கள்போல பார்த்துக் கொண்டிருக்கிறது. சந்தேகத்திற்கு இடமான வகையில், கருப்பு பணத்தை யாராவது டெபாசிட் செய்திருக்கிறார்களா? என்றவகையில், ரூ.5 லட்சத்துக்குமேல் டெபாசிட் செய்தவர்கள் யார்?, ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம்வரை டெபாசிட் செய்தவர்கள் யார்?, ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சம் வரை டெபாசிட் செய்தவர்கள் யார்? என்று கணக்குகளை பார்த்தது.

ஏறத்தாழ 1 கோடி கணக்குகள் அவர்களின் இந்த வலையில் இப்போது சிக்கியுள்ளது. இதில், 70 லட்சம் பேர் ‘பான்கார்டு’ என்று கூறப்படும் நிரந்தர கணக்கு எண்ணை தாக்கல் செய்துள்ளனர். இதில், 18 லட்சம் பேர்களுக்கு வருமானவரித்துறை செல்போனில் எஸ்.எம்.எஸ். மற்றும் இ–மெயில் செய்தி அனுப்பியுள்ளது. இந்த 18 லட்சம் பேர் கணக்கில் ரூ.4 லட்சத்து 17 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சம் பேர் கணக்கு களையும் நடவடிக்கை எடுப்பதற்காக தயாராக வைத்திருக் கிறார்கள். இந்த பணத்துக்கான கணக்கை 10 நாட்களுக்குள் இ–மெயில் மூலம் வருமானவரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. பதில் திருப்தியாக இருக்கிறதா? என்று பார்த்து விட்டு, நோட்டீசு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்று வங்கி கணக்குளை பயன்படுத்தி, வருமானவரி செலுத்தாதவர்கள் இவ்வாறு நிறைய டெபாசிட் செய்திருந்தால், அவர்களையும் வருமானவரி வளையத்துக்குள் கொண்டுவருவதற்கு இந்த நடவடிக்கை பயன்படுத்தப்பட இருக்கிறது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்திருந்தவர்கள் செய்த டெபாசிட் தொகையை அவர்கள் வருமானவரி கணக்கு விவரங்களோடு ஒப்பிடப்போகிறார்கள்.

ஏற்கனவே பட்ஜெட்டில் நிதிமந்திரியின் உரையில், நாட்டில் 3 கோடியே 70 லட்சம் பேர்தான் வருமானவரி கணக்கு தாக்கல் செய்கிறார்கள். இதில், 99 லட்சம் பேர் தங்களின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். 1 கோடியே 95 லட்சம் பேர் தங்கள் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் என்று தெரிவித்திருக்கிறார்கள். 76 லட்சம் பேர்தான் ரூ.5 லட்சத்துக்குமேல் ஆண்டு வருமானம் என்று வரி செலுத்தியிருக்கிறார்கள். இதில், 56 லட்சம் பேர் மாத வருமானம் பெறுபவர்கள் என்று தெரிவித்தார். ஆக, மாதசம்பளம் பெறாதவர்கள் என்ற கணக்கில் 20 லட்சம் பேர்தான் நாடு முழுவதும் தங்கள் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குமேல் என கணக்கு தெரிவிக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில், 1 கோடியே 25 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ள நிலையில், 2015–ம் ஆண்டில் மட்டும் 2 கோடி பேர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளனர். வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கையை கூட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது தவறல்ல. ஆனால், இது பொத்தாம் பொதுவான நடவடிக்கையாக இருக்கக் கூடாது. நேர்மையாக வரிகட்டுபவர்கள், சிக்கனமாக பணத்தை சேமிப்பவர்கள் ஆகியோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது. அந்தவகையில், வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்