களம் இறங்கட்டும் இளைஞர் பட்டாளம்

‘‘தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’’ என்று பாடினார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. பண்டைய காலத்திலிருந்தே தமிழர்கள் பண்பாடு, தமிழர்கள் கலாசாரம் மிகவித்தியாசமாக இருந்திருக்கிறது.

Update: 2017-02-12 21:30 GMT
‘‘தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’’ என்று பாடினார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. பண்டைய காலத்திலிருந்தே தமிழர்கள் பண்பாடு, தமிழர்கள் கலாசாரம் மிகவித்தியாசமாக இருந்திருக்கிறது. இன்றைய காலத்தில், தமிழக இளைஞர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் உயரிய குணமுண்டு என்று பாடவேண்டும்போல் இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் நடத்திய அறப்போராட்டம் இந்த அருங்குணத்தை எடுத்துக்காட்டியது. 7 நாட்களாக சென்னை மெரினா கடற்கரையில் பகலிலும், இரவிலும் கடும் வெயிலையும், பனியையும், மழையையும் சந்தித்து, தூக்கமில்லாமல் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியே தீருவோம் என்று உட்கார்ந்திருந்தனர். சென்னையில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் 400–க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த அறப்போராட்டம், இந்தியாவையே வியக்க வைத்தது. ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவர்’ எங்கள் இளைஞர்கள் பட்டாளம் என்பதுபோல், இந்த போராட்டத்தின் விளைவாக இன்று அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்பட எல்லா இடங்களிலும் வேளாண்குடி மக்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழகமும் வியக்கும்வண்ணம் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது. இதுபோல, ஆக்கப்பூர்வமான அனைத்து முயற்சிகளிலும் இளைஞர்கள் பட்டாளம் இறங்கினால்தான், வெற்றியை காணமுடியும் என்பதுதான் தமிழக மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

இப்போது தமிழகத்தில் நீர் ஆதாரத்தையே வற்றிப்போக வைத்துவிட்ட சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பதற்கு எல்லோரும் கைகோர்க்க வேண்டும் என்ற வகையிலான, கருத்தை மதுரை ஐகோர்ட்டு கிளையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த ஒரு வழக்கில், நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். தொடக்கத்தில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி, வைகோ தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இப்போது மீதமுள்ள 19 மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே வறட்சி பாதித்த நிலங்களுக்குரிய இழப்பீட்டை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது வாயில் எலியை கடித்தபடி விவசாயிகள் போராட்டம் நடத்தியதை நீதிபதிகளிடம் குறிப்பிட்ட நேரத்தில், ஏன் அவர்கள் சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பு போன்ற பொதுபிரச்சினைகளிலும் ஈடுபடக்கூடாது? என்று கேட்டிருக்கிறார்கள்.

இந்த வழக்கின்போது வைகோ, ‘‘சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும், பின்பு கோடைவிடுமுறையிலும் மாணவர்களும், இளைஞர்களும் அவரவர் ஊர்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். நான், எனது ஊரான கலிங்கப்பட்டியில் மாணவர்கள், இளைஞர்களின் துணையோடுதான் இந்த பணியை மேற்கொண்டு வருகிறேன்’’ என்று கூறியவுடன், நீதிபதிகள் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஆணை பிறப்பிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிகரமாக ஆக்கிய இளைஞர்கள் பட்டாளம் அதேப் போன்ற ஒரு முயற்சியை சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பதற்கு காட்டினால், குறுகிய காலத்தில் தமிழ்நாடு முழுவதும் எங்கும் சீமைக்கருவேல மரம் இல்லை என்ற ஒருநிலையை உருவாக்கி விடலாம். இதற்கான முயற்சிகளை அவர்கள் விடுமுறை நாட்களிலும், அடுத்து வரப்போகும் கோடைவிடுமுறை நாட்களிலும் மேற்கொள்ளும்வகையில் அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் தமிழகஅரசும், அரசியல்கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மிகத் தீவிரமாக ஈடுபட வேண்டும். அரசு மட்டும் நிச்சயமாக சீமைக்கருவேல மரங்களை ஒழிப்பது என்பது கடினமானசெயல். அனைவரும் ஒன்றாக கைகோர்த்து நின்றால்தான், இந்த உயரியநோக்கத்தை நிறைவேற்றும் வகையில், தண்ணீர் பற்றாக்குறையுள்ள தமிழ்நாட்டில், இனி தண்ணீர் பஞ்சம் இல்லை என்று நிலையை ஏற்படுத்தமுடியும். ‘களம் இறங்கட்டும் இளைஞர்கள் பட்டாளம், சீமைக்கருவேல மரத்தை முற்றிலுமாக ஒழிக்கட்டும். வேளாண் பெருங்குடி மக்களும், இந்த உயர்பணியில் துணை நிற்கட்டும்’!

மேலும் செய்திகள்