விவசாயிகளுக்கு கடன் ரத்தா?, வருமான உயர்வா?

கிராமப்புறங்களின் ஒரேதொழிலான விவசாயம், இப்போது பருவமழை தொடர்ந்து பொய்த்ததாலும், உரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் இல்லாததாலும், இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போனதாலும் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Update: 2017-06-27 20:30 GMT
கிராமப்புறங்களின் ஒரேதொழிலான விவசாயம், இப்போது பருவமழை தொடர்ந்து பொய்த்ததாலும், உரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் இல்லாததாலும், இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போனதாலும் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தொடர்ந்து இத்தகைய நிலை ஏற்பட்டதால், விவசாயி தன் வாழ்க்கைக்காகவும், தொடர்ச்சியாக விவசாய பணிகளை மேற்கொள்வதற்காகவும் வாங்கிய கடன்களால் எழும்பவே முடியாமல் ஏராளமானவர்கள் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான், முதலில் தமிழ்நாட்டில் தொடங்கி, இப்போது வடமாநிலங்கள் அனைத்திலும் விவசாயிகள் தங்கள் கடன்களை ரத்துசெய்யவேண்டும் என்று குரல் எழுப்பி தீவிரமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோல, விவசாயக்கடன்களை ரத்துசெய்யும் நடவடிக்கையை 1990–ம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு தொடங்கி வைத்தது. தொடர்ந்து 2008–ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தது.

தமிழ்நாட்டிலும் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் இந்த கடன் ரத்து நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டன. ஆனால், சிறந்த தொலைநோக்கு பார்வைகொண்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மட்டும் 2004–ம் ஆண்டு அரியானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பேரணியில், ‘‘நான் 2–ம் பசுமை புரட்சியை கொண்டுவருவேன். ஆனால், விவசாயிகளின் கடன் ரத்து போன்ற விளம்பர வாக்குறுதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், கடன் ரத்து என்பது கடனை திருப்பிச்செலுத்தாத உணர்வுக்கு வாசலை திறந்துவைத்தது போலாகிவிடும். விவசாயிகளின் துயரங்களுக்கு தீர்வு என்பது விவசாயம் லாபகரமாக வேண்டும்’’ என்று தெளிவாக தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு கடன் ரத்து நடவடிக்கையை உத்தரபிரதேசம், மராட்டியம், பஞ்சாப், கர்நாடக மாநிலங்கள் அறிவித்து விட்டன. விவசாயிகளின் கடனை ரத்துசெய்ய மாநில அரசுகள் முடிவு எடுத்தால், அதற்கான நிதி ஆதாரத்தை அவர்கள்தான் திரட்டிக்கொள்ளவேண்டும், மத்திய அரசாங்கம் நிதி உதவி செய்யாது என்று மத்திய அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. கடன் ரத்து என்பது ஒரு பெரிய காயத்துக்கு பிளாஸ்திரி போடுவது போலானதுதான். ஒருமுறை கடன் ரத்து செய்தாலும், தொடர்ந்து விவசாயம் செய்ய விவசாயி மீண்டும் கடனை பெறவேண்டிய துர்பாக்கிய நிலைதான் உள்ளது. மத்திய நிதி மந்திரியும், இப்போது விவசாயிகள் கடனுக்காக வட்டிகுறைப்பை அறிவித்துள்ளார். இது மீண்டும் கடன் என்ற நிலையைத்தான் உருவாக்கும். ஆனால், பல அறிவியல் ஆர்வலர்கள் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கு பதிலாக, இப்போது பருவமழை பெய்தவுடன் கையில் பணமே இல்லாமல் தவிக்கும் விவசாயிகள், விவசாயத்தை தொடங்குவதற்கு இலவசமாக விதை, உழுவதற்கு வேளாண்மைத்துறை மூலம் இலவச உபகரணங்கள், இலவச உரம், நீர்ப்பாசனவசதிகள், மானியம் கொடுத்து அவர்களை வேளாண்மை பணிகளை தொடங்குவதற்கு உதவி செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்கள்.

இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் வேண்டுகோளான, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமி‌ஷனின் முக்கிய பரிந்துரையான விவசாய உற்பத்தி செலவுக்கு 50 சதவீதம் அதிகமாக குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து, அரசே முழுமையாக கொள்முதல் செய்யவேண்டும். விவசாயத்துக்கு தேவையான நீர்ப்பாசனத் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி, நிலத்தடிநீரை பெருக்கும் திட்டங்களை அமல்படுத்தி விவசாயம் மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், பயிர் காப்பீட்டு திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில், பிரீமியத் தொகையில் விவசாயிகள் கண்டிப்பாக குறைந்த தொகை கட்டவேண்டும். மீதியை மத்திய–மாநில அரசுகள் கட்டும் என்பதை அவர்களுக்கு விளக்கி, இழப்பீட்டு தொகைகளை இன்சூரன்சு நிறுவனங்கள் தாமதமில்லாமல் வழங்கினால், விவசாயிகளுக்கு பருவமழை பொய்த்தாலோ, விளைச்சல் போதிய அளவு இல்லாமல் போனாலோ பாதிப்பு ஏற்படாது.

மேலும் செய்திகள்