28 ஆண்டுகளுக்கு பிறகு பிரியும் நண்பர்கள்!

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடனும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடனும் என்று பல மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது.

Update: 2024-04-12 00:40 GMT

சென்னை,

அடுத்த சில நாட்களில் தொடங்கப்போகும் 18-வது மக்களவை தேர்தலில், முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டு பிரசார களத்தில் இறங்கிவிட்டனர். பல கட்சிகளில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் கூடி, "நேற்று வரை நீ யாரோ, நான் யாரோ, இன்றுமுதல் நீ வேறோ, நான் வேறோ" என்ற நிலையில் புது கூட்டணி அமைத்தனர். நேற்று வரை நண்பர்களாக இருந்தவர்கள், இப்போது கூட்டணி முறிந்து தனியாக போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

பா.ஜனதாவை பொறுத்தவரை மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், தனியாக 370 இடங்கள், கூட்டணியாக 400 இடங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அதற்கு ஏற்றபடி காய்களை லாவகமாக நகர்த்தி வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா வலுவுள்ள மாநிலங்களில், தனியாக நின்று வாக்குகளை அள்ளவும், வலுவில்லாத மாநிலங்களில், தனக்கு பலம் சேர்க்கும் வகையில் மாநில கட்சியுடன் கூட்டணி சேர்ந்து வாக்குகளை பெறவும் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில், பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடனும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடனும் என்று பல மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது. ஒரு பக்கம் இத்தகைய முயற்சிகள் நடக்க, பஞ்சாப்பில் 28 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியுடன் இருந்த கூட்டணியை முறித்து தனியாக போட்டியிடுகிறது. பஞ்சாப்பில் உள்ள 13 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனியாக போட்டியிடுவதாக பா.ஜனதா அறிவித்துவிட்டது. 1996-ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த அனைத்து மக்களவை தேர்தல்களிலும் சட்டமன்ற தேர்தல்களிலும் பா.ஜனதாவும், சிரோன்மணி அகாலி தளம் கட்சியும் கூட்டணி அமைத்தே போட்டியிட்டிருக்கிறது. இந்த கூட்டணியில் 2020-ல் விரிசல் ஏற்பட்டது. அப்போது மத்தியில் பா.ஜனதா அரசாங்கம் 3 வேளாண்மை சட்டங்களை நிறைவேற்றிய நேரத்தில், அதை எதிர்த்து சிரோன்மணி அகாலி தளம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது.

மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்த ஹர்சிம்ராத் கவுர் பாதல் உடனடியாக ராஜினாமா செய்துவிட்டார். இப்போது மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தும் வேளாண் சட்டங்கள், தொகுதி எண்ணிக்கை போன்ற பல பிரச்சினைகளால் வெற்றி பெறாமல் போனது. இவ்வளவுக்கும் கடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 13 இடங்களில் 8 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதா, சிரோன்மணி அகாலி தள கட்சிகள் தலா 2 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்திலும்தான் வெற்றி பெற்றது. இப்போது அனைத்து கட்சிகளும் தனியாக நிற்பதால் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள உண்மையான பலம் என்னவென்பது தெரிந்துவிடும்.

பஞ்சாப் போல ஒடிசாவில் 21 மக்களவை தொகுதிகள், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் பிஜூ ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைக்க நடந்த பேச்சுவார்த்தையும் கடைசியில் தோல்வியில் முடிந்தது. இந்த இரு கட்சிகளின் கூட்டணி 2009-ம் ஆண்டுக்கு முன்பு முறிந்து, அதற்கு பிறகு பல நேரங்களில் பிஜூ ஜனதா தளம் பா.ஜனதாவுக்கு பல நேரங்களில் உதவியிருந்தாலும் கூட்டணி உருவாகவில்லை. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜனதா எத்தனை இடங்களை பெறும்? என்பதை தேர்தல் முடிவில்தான் தெரியும்.

Tags:    

மேலும் செய்திகள்