தாராளமான கல்விக்கடன்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வு எழுதி தேர்வுபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8,93,261 ஆகும்.

Update: 2017-07-25 21:30 GMT
மிழ்நாட்டில் இந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வு எழுதி தேர்வுபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8,93,261 ஆகும். இவர்களில் பெரும்பாலானோர் வங்கிகளிலிருந்து கல்விக்கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் கலைக்கல்லூரிகளிலும், தொழில்கல்லூரிகளிலும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏராளமான ஏழை–நடுத்தர மாணவர்கள் பெற்றோர்களின் வருமானம் கல்லூரி கல்விக்கு ஏணி வைத்தும் எட்டாது என்ற நிலையில், தாங்கள் படித்து முடித்து வேலையில் சேர்ந்து திரும்பக்கட்டிவிடலாம் என்ற உறுதிப்பாட்டுடன் கல்விக்கடனைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். வங்கிகளால் கல்விக்கடன் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், 2004–க்கு முன்புவரை எல்லோருக்கும் கல்விக்கடன் கிடைப்பதற்கான சூழ்நிலை இல்லாமல் இருந்தது. 2004–ல் நிதிமந்திரியாக இருந்த ப.சிதம்பரம், வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில் துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், எல்லோருக்கும் கல்விக்கடன் கிடைக்கவேண்டும் என்ற உத்வேகத்தில் இதை தாராளமயமாக்கி வேகப்படுத்தினார்.

கடன்வேண்டுமென்றால் ஏதாவது ஒரு சொத்து அல்லது வீடு பிணையமாக வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. ஏழைகளை பொறுத்தமட்டில், பிணையம் வைப்பதற்கு ஒன்றும் இல்லாத நிலையில், கடன் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. இந்தநிலையில், ப.சிதம்பரம் ரூ.7½ லட்சம் வரை வழங்கப்படும் கடன்களுக்கு பிணையம் எதுவும் கேட்கக்கூடாது என்று உத்தரவிட்டதை தொடர்ந்து, வங்கிக்கடன் பெறுவது எளிதாக இருந்தது. ஆனால், சமீபகாலங்களாக மீண்டும் பல நிபந்தனைகள் விதிக்கப்படுவதால் வங்கிக்கடன் கிடைப்பது எட்டாக்கனியாகிவிட்டது. 31.3.2014 அன்று கணக்குப்படி, 7,66,314 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் தரவேண்டிய தொகை ரூ.58,551 கோடியாகும். தற்போது 31.3.2016 அன்று நிலவரப்படி, கல்விக்கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை 5,98,187 பேர். இவர்களிடமிருந்து வரவேண்டிய தொகை ரூ.68,616 கோடியாகும். ஆக, கல்விக்கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது. இதற்கு முக்கியக்காரணம், தேவையற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதும், வங்கிகளால் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதும்தான்.

கல்விக்கடன் வாங்க வங்கிக்குசென்றால் கடன்கேட்கும் தொகையில், 10 முதல் 15 சதவீதம் விளிம்பு தொகை கட்டவேண்டியதிருக்கிறது. பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் அந்த கல்லூரி தேசிய அங்கீகார சான்றிதழ் (நாக்) பெற்றிருக்கிறதா?, கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பேர் ‘கேம்பஸ் இன்டர்வியூ’வில் தேர்வு பெற்றிருக்கிறார்கள் என்று கல்லூரியைப்பற்றி தேவையில்லாத கேள்விகளை கேட்கிறார்கள். படிக்கப்போவது மாணவன்தானே! தன் வீட்டுக்கு அருகிலுள்ள கல்லூரியில் படித்தால் செலவு குறையுமே என்ற நிலையிலுள்ள ஏழை மாணவர்கள் அத்தகைய கல்லூரிகளில் சேர்ந்துதான் படிக்க விரும்புவார்கள். அவர்களுக்கு இதுபோன்ற நிபந்தனைகளால் தொடக்கத்திலேயே கல்விக்கடன் மறுக்கப்படுவது தேவையற்றது. இதுமட்டுமல்லாமல், 4 பக்கங்கள் கொண்ட விண்ணப்பப்பாரத்தில் கேட்கப்பட்டுள்ள மேலும் பல தகவல்களை பார்த்தால் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. அதிலுள்ள வினாக்களை எல்லாம் பார்த்தால் அவ்வளவு வைத்திருப்பவர்கள், நிச்சயமாக கடன் வாங்கவேண்டிய தேவையே இல்லை. ஏழை மாணவர்களால் அந்தபகுதியை நிரப்பவே முடியாது. மேலும், படித்து முடித்து ஒரு ஆண்டில் வாங்கிய பணத்தை தவணைகளில் 11.35 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்தவேண்டும். இப்போதெல்லாம் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, கடனை திரும்ப செலுத்த ஒரு ஆண்டு என்பதை, ‘வேலை கிடைத்தவுடன்’ என்று மாற்றவேண்டும். அதுவரை வட்டி விதித்துக்கொள்ளலாம். பெரும்பாலான மாணவர்களின் கல்விக்கடன் விண்ணப்பங்கள் வங்கிகளால் மறுக்கப்படும் நிலை இருக்கிறது. கடன் கேட்பது கல்விக்காகத்தானே!. எனவே, கல்விக்கடன்களை கேட்கும் விண்ணப்பங்களை மறுக்காமல் தாராளமாக கல்விக்கடன்கள் வழங்கப்படவேண்டும். விண்ணப்பங்கள் எளிதாக்கப்படவேண்டும். மாணவர்கள் எப்படியும் கல்விக்கடனை திரும்ப கட்டிவிடுவார்கள் என்ற நம்பிக்கையை வங்கிகள் வளர்க்கவேண்டும். எனவே, இதையெல்லாம் கருத்தில்கொண்டு வங்கிகள் கல்விக்கடன்களை எல்லோருக்கும் வழங்கவேண்டும். தேவையற்ற நிபந்தனைகளை விதித்து விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது.

மேலும் செய்திகள்