பா.ஜ.க.வின் அடுத்த குறி ‘தமிழ்நாடு’ தான்

பண்டைய காலங்களில் எந்தவொரு மன்னருக்கும் போரில் கிடைத்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர், அவர்களுடைய தளபதி தான்.

Update: 2017-08-25 21:30 GMT
ண்டைய காலங்களில் எந்தவொரு மன்னருக்கும் போரில் கிடைத்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர், அவர்களுடைய தளபதி தான். வீரமிக்க, திறமைமிக்க தளபதிதான் மன்னருக்கு வலதுகரமாக திகழ்ந்து இருக்கிறார். அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கட்சி பணியில் வலதுகரமாக இருப்பவர் தேசிய தலைவர் அமித்ஷா. அவர் இந்த மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் சென்னையிலும், 24–ந் தேதி கோவையிலும் சுற்றுப்பயணம் செய்வதாக பயணத்திட்டம் வகுக்கப் பட்டிருந்தது. இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமே, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை பலப்படுத்த வேண்டிய முயற்சி களை, திட்டங்களை வகுக்கவேண்டும் என்பதுதான். ஆனால், திடீரென அமித்ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதற்கான காரணங்கள் கூறப்படவில்லை என்றாலும், தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையினால் வரவேண்டாம் என்று முடிவெடுத்ததாக பொதுவாக அரசியல் உலகில் பேசப் பட்டது. ஏற்கனவே ஒருமுறை அமித்ஷாவின் சுற்றுப் பயணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. விரைவில் மீண்டும் தமிழ்நாடு வர இருக்கிறார்.

கடந்த திங்கட்கிழமை வெகுநேரம் வரையில் பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷாவும், பா.ஜ.க. ஆளும் மற்றும் கூட்டணியாக ஆண்டு கொண்டி ருக்கும் மாநிலங்களின் முதல்–மந்திரிகளை டெல்லிக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினர். இந்தக்கூட்டத்தில், உத்தரபிரதேசம், அசாம், ராஜஸ்தான், அரியானா, குஜராத், உத்தரகாண்ட், மராட்டியம், சத்தீஷ்கார், மணிப்பூர், கோவா, மத்தியபிரதேசம் ஆகிய பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்–மந்திரிகளும், பீகார், ஜம்மு– காஷ்மீர் போன்ற பா.ஜ.க. கூட்டணியோடு ஆளும் மாநிலங்களின் துணை முதல்–மந்திரிகளும் கலந்து கொண்டனர். 11 மாநிலங்களில் பா.ஜ.க.வின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், ஆந்திரா போன்ற சில மாநிலங்களில் பா.ஜ.க.வின் நட்பு கட்சிகள் ஆட்சி அமைத்திருக்கின்றன. கடந்த 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 இடங்களில், பா.ஜ.க. 282 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளையும் சேர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. 2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 350 இடங்களுக்கு குறையாமல் பா.ஜ.க. மட்டும் வெற்றி பெறவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான வகையில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

எல்லா மாநிலங்களிலும் மத்திய அரசாங்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ‘சு‌ஷசன் யாத்ரா’ என்ற பெயரில், ‘‘சிறந்த நிர்வாக பேரணி’’ ஒன்றை நடத்தவும், அந்த பேரணியில் மத்திய அரசாங்கம் நிறைவேற்றிவரும் 17 நல மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் பறைசாற்றப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏழை மற்றும் கிராமப்புற குடும்பங் களுக்கு பயன் அளிக்கும் இந்த திட்டங்கள் மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கப்பட்டால், நிச்சயமாக 350 இடங்கள் என்ற இலக்கை அடைய முடியும் என்று உறுதியாக பா.ஜ.க. தரப்பில் நம்பப்படுகிறது. இந்தவகையில்,

பா.ஜ.க.வின் அடுத்த குறி ‘தமிழ்நாடு’ தான். 2019–ம் ஆண்டில் நிச்சயம் தமிழ்நாட்டிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க அளவில் இடங்கள் வெற்றி பெறவேண்டும். அதற்கேற்ற வகையில், கூட்டணி அமைக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் நோக்கமாக இருக்கிறது. இந்தியா முழுவதும் 350 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி என்றாலும், அதில் தமிழகத்தின் பங்கும் ஓரளவுக்கு இருக்கவேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் இலக்கு. அதற்கேற்ற வகையில், அடுத்த சில மாதங்களில் நிறைய மாற்றங்களை, முயற்சி களை பார்க்க முடியும். 2019–ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வலுவுள்ள கூட்டணியாக அமையும். எதிர்பாராத கூட்டணியாக அமையும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மேலும் செய்திகள்