ரெயிலில் 8 மணி நேரம் தூக்கம்

அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது.

Update: 2017-10-08 22:10 GMT
ன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. தொழில் நிமித்தமாகவும், படிப்பு வி‌ஷயமாகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும், விடுமுறையை கழிப்பதற்காகவும், சொந்த ஊர்களுக்கு செல்வதற்காகவும் மக்கள் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். வான்வழி, தரைவழி, ரெயில்வழி என்று 3 வகை போக்குவரத்துகள் இருந்தாலும், உடலில் உள்ள ரத்தநாளங்கள் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதுபோல, இந்தியாவில் மூலைமுடுக்கெல்லாம் செல்வது ரெயில்தான். உலகிலேயே 4–வது பெரிய ரெயில்வே என்றால் அது இந்திய ரெயில்வேதான். இந்தியா முழுவதும் 1,19,630 கி.மீ. நீளமுள்ள தண்டவாளங்கள் இருக்கிறது. 7,216 ரெயில் நிலையங்களில் 12,617 ரெயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 கோடியே 20 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள். இதில் குறைந்ததூரத்திற்கு பயணம் செய்பவர்களும் உண்டு. தொலை தூரங்களுக்கு பயணம் செய்பவர்களும் உண்டு. ஒரு இரவு பயணம் என்று தொடங்கி, 2 நாட்கள், 3 நாட்கள்வரை ரெயிலிலேயே பயணம் செய்யும் தூரமும் உண்டு. இத்தகைய பயணிகளுக்காக தூங்கும் வசதிகொண்ட ரெயில் பெட்டிகளில் கூடுதலாக கட்டணம் செலுத்தி பயணம் செய்யலாம். 3 அடுக்குகள் கொண்ட 2–ம் வகுப்பு பெட்டி, 3 அடுக்குகள் மற்றும் 2 அடுக்குகள் கொண்ட குளிர்சாதனபெட்டி, முதல்வகுப்பு ஏசி பெட்டி என்று பல்வேறு கட்டணங்களில் ரெயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

இந்திய ரெயில்வே வர்த்தக குறிப்பேட்டில் 652–வது பாராவில், இவ்வாறு தூங்கும்வசதி கொண்ட ரெயில் பெட்டிக்காக ரிசர்வ் செய்பவர்கள், இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை அந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று இருக்கிறது. பொதுவாக, பயணிகள் ரெயிலில் ஏறியவுடன் தூங்க செல்ல வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதில் மேல்படுக்கையை ரிசர்வ் செய்தவர்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லை. நடுபடுக்கையிலும், கீழ்படுக்கையிலும் ரிசர்வ் செய்தவர்கள் தூங்கவேண்டும் என்றால், மற்ற பயணிகளும் அதற்கு ஒத்துழைத்தால்தான் முடியும். ஏனெனில், நடுபடுக்கையை போட்டு தூங்கச்சென்றால், கீழ்படுக்கையில் உட்கார்ந்து செல்லும்போது தலைதட்டி அசவுகரியமாக இருக்கும். அதுபோல, கீழ்படுக்கையை ரிசர்வ் செய்தவர்கள் தூங்கவேண்டும் என்று நினைத்தால் மற்றவர்கள் உட்கார்ந்து செல்லமுடியாது. அவர்களும் கட்டாயமாக தூங்கசெல்லவேண்டிய நிலை ஏற்படும். இதனால் பலநேரங்களில், பயணிகளுக்குள் வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம். இந்தநிலையை தடுக்க இப்போது ரெயில்வேதுறை, தூங்கும் நேரத்தை இரவு 9 மணியிலிருந்து காலை 6 மணிவரை என்று இருந்தநிலையை மாற்றி, இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிவரை என்று மாற்றியமைத்துள்ளது. என்றாலும், உடல்நலக்குறைவு உள்ளவர்கள், உடல் ஊனமுற்றோர், கர்ப்பிணி பெண்கள் பயணம் செய்யும் போது, அவர்கள் சற்று கூடுதலான நேரம் தூங்கநினைத்தால் அவர்களுக்கு பயணிகள் சற்று விட்டுக்கொடுக்கவேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறது.

இதையெல்லாம் இதுபோல விதிகளைச் சொல்லி நிறைவேற்ற முடியாது. பயணிகள் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகி பயணம் செய்தால் பயணம் இனிமையாக இருக்கும். உடன்வரும் பயணிகளோடு இதுபோன்ற விதிகளை சுட்டிக்காட்டி, தகராறு செய்தால் நிச்சயமாக பயணம் இனிமையாக இருக்காது. எனவே, இதுபோன்ற சின்னசின்ன வி‌ஷயங்களிலெல்லாம் விதிகளை கொண்டுவந்து, பயணிகளுக்கிடையே ஒரு கசப்பான உணர்வை உருவாக்காமல், பயணிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்துகொடுத்து குறிப்பிட்ட நேரத்தில் ரெயில் போய்ச்சேருவது, நல்ல தரமான உணவு வசதிகள் அளிப்பது, ரெயில் பெட்டிகளை சுத்தமாக வைத்திருப்பது, நல்ல தண்ணீர் வசதி செய்துகொடுப்பது போன்ற வி‌ஷயங்களில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். நிறைவான வசதி, மகிழ்வான பயணம் என்பதை நடைமுறைக்கு கொண்டுவந்தால், இதையெல்லாம் பயணிகள் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்பதுதான் பொதுவான கருத்து.

மேலும் செய்திகள்