கட்டுமான தொழிலுக்கு பெரும் பாதிப்பு

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபிறகு கட்டுமான தொழில் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், கடுமையான மணல் தட்டுப்பாடும் இந்த தொழிலை நசிவடையும் அளவிற்கு கொண்டுவந்து விட்டது

Update: 2017-11-13 21:30 GMT
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபிறகு கட்டுமான தொழில் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், கடுமையான மணல் தட்டுப்பாடும் இந்த தொழிலை நசிவடையும் அளவிற்கு கொண்டுவந்து விட்டது. எந்தவொரு கட்டுமானத்திற்கும் மணல் மிகவும் முக்கியமானதாகும். ஆற்று மணலைத்தான் கட்டுமானத்தொழிலுக்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் கட்டுமானப்பணிக்காக மணல் எடுக்கிறோம் என்ற பெயரில் ஏராளமான ஆற்றுமணலை எடுத்து அண்டை மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டுபோய் விற்கும் மணல்கொள்ளை பெருமளவில் நடந்தது. ஆற்றில் மணல் வளம் குறைந்தால், நிச்சயமாக நீர்வளம் பெரிதும் குறைந்து விடும். தமிழ்நாட்டில் உள்ள 36 ஆறுகளும் மணல் கொள்ளையால் கட்டாந்தரையாகி விடும் என்றநிலையில், சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் உள்ள மணல்குவாரிகள் அனைத்தையும் இனி, அரசே முழுமையாக எடுத்து செயல்படுத்தும், எல்லோருமே ஆற்றுமணலுக்கு பதிலாக ‘எம் சான்ட்’ என்று அழைக்கப்படும் மாற்று மணலை பயன்படுத்த வேண்டும். இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் ஆற்று மணல் அள்ளுவது முழுமையாக தடைசெய்யப்படும் என்ற மகிழ்ச்சிகரமான  அறிவிப்பை அறிவித்தார்’’.

கருங்கல் ஜல்லி குவாரிகளில் உள்ள கற்களை பொடியாக்கித்தான் மாற்று மணல் தயாரிக்கப்படுகிறது. கேரளாவில் ஆற்று மணல் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. அங்கு கட்டுமான பணிகளுக்காக ‘எம் சான்ட்’ என்று கூறப்படும் மாற்று மணலை பயன்படுத்துகிறார்கள். மாற்று மணலின் தரம் ஆற்று மணலின் தரத்துக்கு சற்றும் குறைந்தது அல்ல என்ற வகையில் இருக்கிறது. எனவே, முதல்–அமைச்சர் கூறியபடி, மாற்று மணலை இன்னும் தரமாக்கவும், தீவிரப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இதுமட்டுமல்லாமல், மணல் விலையை கட்டுப்படுத்த ஆன்–லைன் மூலம் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்ற ஒரு அருமையான அறிவிப்பையும் முதல்–அமைச்சர் வெளியிட்டார். ஆனால், இப்போது கடுமையான மணல் தட்டுப்பாடு தமிழ்நாடு முழுவதும் நிலவுகிறது. வெளிமார்க்கெட்டில் மணல் வாங்கினால் சட்டவிரோத மணல் 3 யூனிட் ரூ.65 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. ஆன்–லைன் மூலம் பதிவுசெய்தாலும் கிடைப்பதற்கு ரொம்ப தாமதமாகிறது. எல்லா செலவுகளையும் சேர்த்தால் வெளிமார்க்கெட் விலையை நெருங்கி விடுகிறது. மாநிலம் முழுவதும் 65 மணல் குவாரிகள் இருந்த நிலையில் இப்போது மழைபெய்வதால் ஆறுகளில் தண்ணீர் ஓடும் நிலையில், 4 குவாரிகள் மட்டுமே இயங்குகிறது, அதுவும் மணல் தட்டுப்பாட்டுக்கு காரணமாக கூறப்படுகிறது.

புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலைச்சேர்ந்த ஒரு நிறுவனம் மலேசியாவிலிருந்து 55 ஆயிரத்து 334 டன் மணலை இறக்குமதி செய்து, அந்த மணலை ஏற்றிக்கொண்டு வந்த கப்பலும் கடந்த மாதம் 21–ந்தேதி அன்று தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்தது. ஆனால், இந்த மணலை வெளியே கொண்டு செல்ல, அதாவது லாரியில் எடுத்துச் செல்ல கனிமவளத்துறை சட்டப்படி முறையான அனுமதியை பெறவில்லை என்ற அடிப்படையில் மணலை எடுத்துச்செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இந்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பாணையின்படி தான் மணலை இறக்குமதி செய்துள்ளோம். அதற்கான லைசென்சும் பெற்றுள்ளோம். இது திருட்டுத்தனமான மணல் அல்ல. இதை எடுத்துச்செல்ல தனியாக அனுமதி தேவையில்லை என்பது அந்த நிறுவனத்தின் கருத்து. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்தால் தமிழ்நாட்டில் உள்ள விலையைவிட 3 மடங்கு குறைவாக இருக்கும் என்கிறார்கள். எனவே, குறைந்த விலையிலான வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்வதிலும், அந்த மணலை வினியோகிப்பதிலும் எவ்வித தடையும் இல்லாத எளிதான நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசாங்கமும் எடுக்கவேண்டும். ஆற்றுமணல் அள்ளுவது தடை செய்யப்பட வேண்டும் என்றால், மாற்று மணலும், வெளிநாட்டு மணலும்தான் கைகொடுக்க வேண்டும். எனவே, இந்த இருதிட்டங்களிலும் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்