தண்ணீரில் மீனவர்கள்; கண்ணீரில் குடும்பங்கள்

‘ஒகி’ புயல் கன்னியாகுமரி மாவட்டத்தையே சூறையாடிவிட்டது.

Update: 2017-12-04 21:30 GMT
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று பெரும் புயல் சின்னமாக ‘ஒகி’ என்ற பெயரில் வீசி கன்னியாகுமரி மாவட்டத்தையே சூறையாடிவிட்டது. இப்படியொரு புயல் வரும், பெருமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் 2 நாட்களுக்கு முன்பே சொல்லியிருந்தால், நிச்சயமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருக்கமுடியும். ஆனால், 29–ந் தேதி பகல் 12 மணிக்குத்தான் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும், கடலில் சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என்று பொதுவாக கூறியது. ஆனால், 29–ந் தேதி இரவில் கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டிப்போடும் அளவுக்கு பெரும் புயல் அடித்தது. பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பயிர்கள் அழிந்தன. மின்சார கம்பங்கள் வெறுமனே கீழே விழவில்லை, வளைந்து நெளிந்து விழுந்தன. சாலைகள் எல்லாம் பழுதானது. கடல் அலை சீற்றத்தோடு காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கியது. 30–ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலும், தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களிலும் பெரும் மழையுடன், காற்றும் வீசியது. கடலோரப்பகுதிகளில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவக்குடும்பங்கள் முழுவதும் சோகத்தில் மூழ்கியது. ஏறத்தாழ கடலுக்குள் ஆயிரக்கணக்கான படகுகளில் மீன்பிடிக்க சென்ற பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் கதி என்னவானது? என்று தெரியவில்லை. தத்தளிக்கும் கடல் தண்ணீரில் மீனவர்கள்; கண்ணீரில் அவர்கள் குடும்பங்கள் கதறி அழுதுகொண்டு இருக்கின்றன. மீனவர்களை மீட்கும் பணிகளில் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய விமானப்படை முழுமையாக இறங்கியுள்ளது. 

71 தமிழக மீனவர்கள் உள்பட கேரள, லட்சத்தீவை சேர்ந்த 357 மீனவர்களை மீட்டுவிட்டோம் என்று அவர்கள் அறிவித்தாலும், இன்னும் கடலில் காணாமல் போனவர்கள் எத்தனை பேர்? என்ற முழுமையான விவரம் தெரியவில்லை. இதற்கிடையே, மராட்டிய மாநிலத்தில் உள்ள சிந்துதுர்க் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தமிழக அரசுக்கு ஒரு தகவல் அனுப்பினார். அதில், தேவகர் துறைமுகத்தில் 68 மீன்பிடி படகுகள் மீட்கப்பட்டுள்ளன. அதில், 962 மீனவர்கள் இருந்தனர் என்று தெரிவித்திருந்தார். இவர்களில் எத்தனை பேர் தமிழக மீனவர்கள்?, எத்தனை பேர் கேரள மீனவர்கள்? என்ற கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 40 படகுகளில் சென்ற 600 மீனவர்கள் நேற்று குஜராத்தில் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது. கரைக்கு திரும்பாத மீனவர்கள் என்ற கணக்கில் அரசு தரப்பில் 74 பேர் என்றும், மீனவர்கள் குடும்பங்கள் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் என்றும் சொல்கிறார்கள். 234 படகுகளையும் காணவில்லை என்கிறார்கள்.

எனவே, எத்தனை மீனவர்களை இன்னும் காணவில்லை? என்ற கணக்கை அரசு முறையாக எடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், கடலில் மீன்பிடிக்கச்சென்ற ஒரு மீனவர் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டு, அதற்குரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றால், 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் முடியும் என்றநிலை உள்ளது. எனவே, இந்திய சாட்சி சட்டத்தில் உள்ள இந்த பிரிவில் உள்ள கட்டுப்பாட்டை தளர்த்தி, காணவில்லை என்பதற்கு ஒருசில மாதங்கள் மட்டும் காலக்கெடுவாக நிர்ணயிக்கவேண்டும். 5 நாட்களுக்குமேல் ஆகியும், கன்னியாகுமரி மாவட்டம் இன்னும் சேதம், பாதிப்பு, துயரக்கடலிலிருந்து மீண்டேறவில்லை. போர்க்கால அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலைமைகளை சீர்செய்து இயல்புநிலைக்கு கொண்டுவரவேண்டும். எல்லா சேதங்களாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவேண்டும். ஏற்கனவே, இந்தப்பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, மத்திய அரசாங்கம் நிதியுதவிகள் மற்றும் தேவையான உதவிகள் அனைத்தும் வழங்க வேண்டும் என்று கேரள அரசாங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. தேவைப்பட்டால், தமிழக அரசும் உடனடியாக தமிழக பாதிப்புகளை பட்டியலிட்டு தேசிய பேரிடராக அறிவிக்க கோரவேண்டும்.

மேலும் செய்திகள்