ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவுகள்

பரபரப்பாய் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவு எம்.ஜி.ஆர். நினைவு நாளான நேற்று வெளிவந்துள்ளது. இந்த தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

Update: 2017-12-24 21:30 GMT
ரபரப்பாய் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவு எம்.ஜி.ஆர். நினைவு நாளான நேற்று வெளிவந்துள்ளது. இந்த தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த இடத்தில் அ.தி.மு.க.வும், 3-வது இடத்தில் தி.மு.க.வும் தள்ளப்பட்டுள்ளது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி, பாரதீய ஜனதா கட்சிகள் உள்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்துள்ளனர். பா.ஜ.க.வை விட நாம் தமிழர் கட்சியும், எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாத நோட்டாவும் அதிக ஓட்டுகள் வாங்கியுள்ளன. முதல்சுற்றில் இருந்தே டி.டி.வி.தினகரனின் ‘குக்கர்’ சின்னம்தான் முதல் இடத்தில் இருந்தது. நிச்சயமாக இந்த தேர்தல்முடிவுகள் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சின்னங்களை வைத்து மட்டும் வெற்றிபெற முடியாது என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டிவிட்டது. மதுசூதனனும், மருதுகணேசும் அவர்கள் கட்சி சின்னங்களில்தான் போட்டியிட்டனர். ஆனால் டி.டி.வி.தினகரன் கடந்தமுறை ‘தொப்பி’ சின்னத்திலும், இந்தமுறை ‘குக்கர்’ சின்னத்திலும் சுயேச்சையாகத்தான் களத்தில் இறங்கினார். எல்லா தொகுதிகளிலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் மக்கள் தேர்தலை சந்திப்பார்கள். ஆனால், ஆர்.கே.நகர் தொகுதி அடிக்கடி தேர்தலை சந்திக்கும் தொகுதியாக மாறிவிட்டது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் வெற்றி பெற்றார். 2015-ம் ஆண்டு மே மாதம் நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். மீண்டும் 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் இந்த ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக இருந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வே பிளவுபட்டு சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மருதுகணேசும் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரம் ஓய்ந்தநிலையில், ஏப்ரல் 9-ந் தேதி இரவில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு பெருமளவில் பண வினியோகம் செய்யப்பட்டு முறைகேடுகள் நடந்ததுதான் ரத்து செய்யப்பட்டதற்கு காரணமாகும். மீண்டும் கடந்த 21-ந் தேதி இந்த தொகுதியில் தேர்தல் நடந்தது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மீண்டும் மருதுகணேசும் போட்டியிட்டனர்.

அடிக்கடி தேர்தல் நடந்து வருவதால் இந்த தொகுதி மக்கள் சலிப்பு அடையவில்லை, மகிழ்வோடு ஏற்றுக்கொண்டனர். வழக்கமாக தேர்தலின்போது வன்முறைகள் நடைபெறும், வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்படும். ஆனால் இந்த தேர்தலில் அப்படி எந்த வன்முறைகளோ, தேர்தல் தகராறோ, சண்டை சச்சரவுகளோ இல்லாமல் அமைதியாகவே நடந்தது. பணமழை பொழிகிறது என்று அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் புகார் சொன்னாலும், பொதுமக்களிடம் இருந்து புகார் வரவில்லை. பெரிய அளவில் பணப்பரிமாற்றம் கண்டுபிடிக்கப்படவில்லை. 28 லட்ச ரூபாய்தான் பறிமுதல் செய்யப்பட்டது. 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தலை நிறுத்தக்கூடிய அளவில் எந்த புகார்களும் நிரூபிக்கப்படவில்லை. காரணங்கள் ஆயிரம் கூறினாலும், தேர்தல்முடிவை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயக கலாசாரம். இதற்கு பிறகு நடக்கப்போவதை அரசியல் உலகில் இனிதான் பார்க்கவேண்டும்.

மேலும் செய்திகள்