‘‘இந்தியாவுக்கு பெருமை’’

உலக பொருளாதார லீக் அமைப்பு உலகநாடுகளில் அடுத்த 15 ஆண்டுகளில் பொருளாதார முன்னேற்றங்கள் எப்படி இருக்கும் என்று ஆய்வுநடத்தி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

Update: 2017-12-28 22:00 GMT
ரசாங்கம் சில முயற்சிகளை எடுக்கும்போது, அதன்காரணமாக பொருளாதார வளர்ச்சி உயர்கிறது. சில நடவடிக்கைகளால் பாதிப்பு ஏற்படுகிறது. அந்தவகையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் நரேந்திரமோடி டெலிவி‌ஷனில் உரையாற்றும்போது, ‘500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்று அறிவித்தார். எந்த நோக்கத்துக்காக ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதோ அந்தநோக்கம் நிறைவேறவில்லை. 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 15 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் ‘டெபாசிட்’டாக திரும்ப வந்துவிட்டது. 1.04 சதவீதம் நோட்டுகள்தான் திரும்பவரவில்லை. அதுமட்டுமல்லாமல், இந்த அறிவிப்பால் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி 6.1 சதவீதமாக அடுத்தகாலாண்டில் உடனடியாக குறைந்துவிட்டது. 

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 7.9 சதவீதம் வளர்ச்சி இருந்தது. இதுமட்டுமல்லாமல், இந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் அனைத்து துறைகளுக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அடுத்து, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம்வரை உள்ள காலக்கட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக்குறைவான பொருளாதார வளர்ச்சியாக 5.7 சதவீதம் என சரிந்தது. ஆனால் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள் அடங்கிய காலாண்டில் வளர்ச்சிவிகிதம் 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ள நாடுகளின் பட்டியலில் முதல்இடத்தில் அமெரிக்காவும், 2–வது இடத்தில் சீனாவும், 3–வது இடத்தில் ஜப்பானும், 4–வது இடத்தில் ஜெர்மனியும், 5–வது இடத்தில் பிரான்சும், 6–வது இடத்தில் இங்கிலாந்தும், 7–வது இடத்தில் இந்தியாவும், 8–வது இடத்தில் பிரேசிலும், 9–வது இடத்தில் இத்தாலியும், 10–வது இடத்தில் கனடாவும் இருக்கிறது. 

உலக பொருளாதார லீக் அமைப்பு உலகநாடுகளில் அடுத்த 15 ஆண்டுகளில் பொருளாதார முன்னேற்றங்கள் எப்படி இருக்கும் என்று ஆய்வுநடத்தி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், இப்போது 7–வது இடத்தில் இருக்கும் இந்தியா, பிரான்சு நாட்டையும், இங்கிலாந்து நாட்டையும் பின்னுக்குத்தள்ளிவிட்டு, 2018–ல் 5–வது இடத்துக்கு வந்துவிடும், 2027–ம் ஆண்டில் 3–வது இடத்திற்கு வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது. 2030–ல் சீனா, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்திற்கு வந்துவிடும் என்று அறிவித்துள்ளது. நிச்சயமாக ஒவ்வொரு இந்தியனுக்கும் இது பெருமை அளிக்கும் முன்னேற்றம் என்றாலும், சீனாவை பார்த்து இன்னும் நிலைமையை உயர்த்திக்கொள்ளவேண்டும் என்ற உணர்வில், இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கவேண்டும். மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால், உலக வங்கி நடத்திய ஆய்வில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.2 சதவீதமாகவும், அடுத்த நிதி ஆண்டில் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வளர்ச்சிப்பாதையில் இந்தியாவின் பயணம் வேகம்பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சி இலக்கைத்தாண்டி பாய்ந்து செல்லவேண்டும்.

மேலும் செய்திகள்