கட்டுமான தொழில் வேகம் எடுக்க வேண்டும்

தமிழ்நாட்டில் மணல் இல்லாமல் கட்டுமான தொழில் அப்படியே நசிந்துவிட்டது.

Update: 2018-01-26 22:00 GMT
மிழக ஆறுகளில் மணல் எடுப்பது என்ற போர்வையில் மணல் கொள்ளை தீவிரமாக நடைபெறுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் ஆற்றில் மணல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்துதான் சட்ட விரோதமாக மணலை கடத்திச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரளா மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா ஏன் அதையும் தாண்டி பல இடங்களுக்கு மணல் லாரிகளில் நதிநீர் வடிந்து கொண்டே ஏற்றிக்கொண்டு செல்வது, சமுதாய நலன் விரும்புவோர் கண்களிலிருந்து கண்ணீரை வடிய வைக்கிறது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் நீதிபதி ஆர்.மகாதேவன் கடந்த நவம்பர் மாதம் 29–ந் தேதி ஆற்று மணல் அள்ளுவது 6 மாதத்துக்குள் அடியோடு நிறுத்தப்பட வேண்டும். புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. ஜல்லி கற்கள் தவிர்த்து, பிற கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட வேண்டும். மணல் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்பதுபோன்ற பல உத்தரவுகளை பிறப்பித்து தீர்ப்பு வழங்கினார். இந்த உத்தரவை எதிர்த்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் செய்த அப்பீலை, நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் கொண்ட பெஞ்சு தள்ளுபடி செய்துள்ளது. வரம்பு இல்லாமல் மணல் கொள்ளையடிப்பதை தடுத்து, ஆற்றுபடுகைகளை காப்பாற்ற வேண்டிய கடமையில் இருந்து மாநில அரசு தவறி விட்டது என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த நிலையில், ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பது மத்திய அரசாங்கத்தின் வரம்பில்தான் இருக்கிறது. மத்திய அரசாங்கம் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய அனுமதி அளித்திருக்கிறது. எனவே, மாநில அரசு அதை தடை செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலை விற்பனை செய்ய, இருப்பு வைக்க பொதுப்பணித்துறைக்கு மட்டும் அதிகாரம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தனியார் மணல் இறக்குமதி செய்ய தயங்குகிறார்கள். எனவே, தமிழக அரசே வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்ய வேண்டும். அசாம் முதல்–மந்திரி சென்னைக்கு வந்த நேரத்தில், தங்கள் மாநிலத்திலிருந்து மணலை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக கூறியதைத்தொடர்ந்து, தமிழக அரசு அதிகாரிகள் அசாம் மாநிலத்துக்கு மணலை பார்வையிட சென்றிருந்தார்கள். அசாம் மாநிலத்திலும் மற்றும் எந்தெந்த மாநிலங்கள் மணலை விற்கத்தயாராக இருக்கிறதோ, அந்த மாநிலங்களிலிருந்து எல்லாம் மணல் வாங்க வேகமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மணல் இல்லாமல் கட்டுமான தொழில் அப்படியே நசிந்துவிட்டது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள், எந்தவேலையும் இல்லாமல் அப்படியே முடங்கிபோய் இருக்கிறார்கள். மணல் விலையும் விண்ணைத்தொடும் அளவுக்கு ஆகிவிட்டது. ஒரு லாரி மணல் ரூ.18 ஆயிரம் இருந்தநிலையில், இப்போது ரூ.48 ஆயிரம் கொடுத்தால்கூட மணல் கிடைப்பதில்லை என்றபுகார் பெரிய அளவில் இருக்கிறது. கட்டுமான தொழிலை காப்பாற்ற அரசு உடனடியாக மணல் இறக்குமதி செய்யும் பணிகளில், வெளிமாநிலங்களில் மணல் வாங்கும் பணிகளில் மிகவேகமாக ஈடுபடவேண்டும். ஐகோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றுவதன் மூலம் ஆற்றுவளத்தையும், சுற்றுச்சூழலையும் காப்பாற்ற முடியும்.

மேலும் செய்திகள்