வராக்கடன்கள் வசூலிக்கப்படுவதில் என்ன சிக்கல்?

பொதுமக்கள் வங்கிகளில் போடும் டெபாசிட்டுகள், வங்கிச்சேவைகள், வங்கி பணப்பரிமாற்றம் ஆகியவற்றை வைத்துதான் வங்கிகள் இயங்குகின்றன.

Update: 2018-02-02 21:30 GMT
பொதுமக்கள் வங்கிகளில் போடும் டெபாசிட்டுகள், வங்கிச்சேவைகள், வங்கி பணப்பரிமாற்றம் ஆகியவற்றை வைத்துதான் வங்கிகள் இயங்குகின்றன. பொதுமக்களின் டெபாசிட்களை வைத்துதான், வங்கிகள் மற்றவர்களுக்கு கடன்கொடுத்து, அந்த வட்டியையும் வாங்கி வருமானத்தை ஈட்டுகிறது. பொதுமக்கள் முதலீடு செய்யும் டெபாசிட்களுக்கு குறைந்த வட்டிக்கொடுக்கும் வங்கிகள், தான் வழங்கும் கடன்களுக்கு கூடுதல்வட்டி வசூலிக்கிறது. நிச்சயமாக இதை யாரும் குறைசொல்ல முடியாது. ஆனால், வங்கிகள் கொடுக்கும் கடன்களில் ஏராளமான கடன்கள் வராக்கடன்களாக போய் விடுகின்றன. சிறிய அளவில் நகைக்கடனோ, கடனோ வாங்குபவர்கள் உரியகாலத்தில் கடனை திருப்பிச் செலுத்தவில்லையென்றால், பத்திரிகைகளில் அவர்கள் முகவரியோடு சேர்த்து விளம்பரம் பிரசுரிக்கும் வங்கிகள், அதே அளவுகோலை பெரியஅளவில் கடன்கள் வாங்கி திருப்பித்தராதவர்கள் பற்றிய வி‌ஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை.

இந்த நிதி ஆண்டில் முதல் அரையாண்டு அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் மட்டும் வங்கிகளின் மொத்த வராக்கடன் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது என்று பாராளுமன்றத்திலேயே மத்திய அரசாங்கம் தெரிவித்துவிட்டது. இதில் பொதுத்துறை வங்கிகளுக்கு மட்டும் வரவேண்டிய கடன்பாக்கி ரூ.6 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. வராக்கடன்களால் இந்திய வங்கித்துறை குறிப்பாக பொதுத்துறையைச் சேர்ந்த பல வங்கிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. வராக்கடன்களால் பாதிக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடி அளவுக்கு மத்திய அரசாங்கம் மறுமூலதனம் அளிக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, கடந்த 2015–16–ம் ஆண்டில் ரூ.57 ஆயிரத்து 586 கோடி வராக்கடனை தள்ளுபடி செய்த பொதுத்துறை வங்கிகள், 2016–17–ல் ரூ.81 ஆயிரத்து 683 கோடியை தள்ளுபடி செய்தது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ்’ நாடுகளில் இந்தியாவில்தான் வங்கிகளில் வராக்கடன் மிக அதிகமாகும். வராக்கடன்களை வசூலிக்க கடந்த நவம்பர் மாதம் பிறப்பித்த அவசர சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசாங்கம் ‘திவால் மசோதா’வை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா கடன் வசூலுக்கு 2 வகையான நடவடிக்கைகளை கோடிட்டு காட்டியுள்ளது. ஒன்று, கடன்பெற்ற நிறுவனங்கள் உண்மையிலேயே பொருளாதார சூழ்நிலை காரணமாக நலிவடைந்துள்ளதா? என்று பார்க்க வேண்டும். மற்றொன்று அதை சீரமைக்க ஏதாவது நடவடிக்கைகள் எடுக்க முடியுமா?, அதன் காரணமாக சீரமைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்று ஆராய வேண்டும். இல்லையென்றால், அந்த நிறுவனத்தை மூடிவிட்டு, அதன் சொத்துக்களை ஏலம் விட்டு கடனை வசூலிக்க வேண்டும். இதுதான் இந்த மசோதாவின் முக்கிய அம்சமாகும். இதில் எவ்வளவு பலன் கிடைக்கும் என்பது இந்த சட்டத்தை நிறைவேற்றும்போதுதான் தெரியும். விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படுவது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கருத்து தெரிவிக்கும்போது, வங்கிகளில் கடன் பெற்றபிறகு வாங்கிய கடனை ரத்து செய்வது தவறான முன்உதாரணமாகிவிடும் என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்து வராக்கடனை ரத்து செய்வதற்கு பொருந்தாதா? என்பதுதான் மக்கள் கேட்கும் கேள்வியாகும்.

மேலும் செய்திகள்