போக்குவரத்து விதிகளில் கவனம் தேவை

கடந்த மாதம் 24–ந் தேதி தமிழக அரசின் சார்பில் நடந்த ‘‘பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்’’ வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார்.

Update: 2018-03-04 21:30 GMT
டந்த மாதம் 24–ந் தேதி தமிழக அரசின் சார்பில் நடந்த ‘‘பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்’’ வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். ஹெலிகாப்டர் தளத்திலிருந்து, விழா நடந்த கலைவாணர் அரங்கத்திற்குச் செல்வதற்காக காரில் ஏறியவுடன், உடனடியாக ‘சீட்’ பெல்ட்டை அணிந்தார். அதன் பிறகுதான் கார் புறப்பட்டுச்சென்றது. இதேபோல, விழா முடிந்தவுடன் கலைவாணர் அரங்கத்திலிருந்து கவர்னர் மாளிகைக்கு அவர் காரில் புறப்பட்டுச் செல்லும்போதும் முதலில் ‘சீட்’ பெல்ட் அணிந்தார். போக்குவரத்து விதிகளில் நம்நாட்டு பிரதமர் எவ்வளவு கவனமாக இருக்கிறார், எந்த அளவு பின்பற்றுகிறார் என்பதை பார்த்தவுடன், அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பிரதமரைப்போல முன்சீட்டில் உட்காரும் அனைத்து அரசியல்வாதிகளும், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களும், பொதுமக்களிடம் அதிக நன்மதிப்பை பெற்ற தலைவர்களும் இதுபோல காரில் செல்லும்போது ‘சீட்’ பெல்ட்டை போட்டால் மற்றவர்கள் அதைப் பார்த்து பின்பற்றுவதற்கு ஏதுவாக இருக்கும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. விபத்துகளில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை, காயமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகத்தான் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதக்கணக்குப்படி, தமிழ்நாட்டில் 2 கோடியே 38 லட்சத்து 45 ஆயிரத்து 64 வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் ஏராளமானவர்கள் புதிய மோட்டார் வாகனங்களை வாங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை இப்போது வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதில் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபட் போன்ற வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. சென்னையில் உள்ள மக்கள் தொகையில் 2 பேருக்கு ஒருவரிடம் இருசக்கர வாகனம் இருக்கிறது. சென்னையில் மட்டும் 42 லட்சம் இருசக்கர வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 41 புதிய இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7–வது சம்பள கமி‌ஷன் அமல்படுத்தப்பட்ட பிறகு, அரசு ஊழியர்கள் பெற்ற சம்பள உயர்வால் நிறைய பேர் இருசக்கர வாகனம் வாங்கத்தொடங்கிவிட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கார் வைத்திருப்பவர்கள்கூட அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் கார்களை பயன்படுத்திக்கொண்டு, அன்றாட பயன்பாட்டுக்கு இருசக்கர வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். பஸ் கட்டணம் உயர்வு, சரியான நேரத்தில் பஸ், ரெயில் கிடைக்காத சூழ்நிலை காரணமாகவும் நிறையபேர் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். மோட்டார் வாகனங்களில் மொத்தம் நடக்கும் விபத்துகளில் ஏறத்தாழ 35 சதவீத விபத்துகள் இருசக்கர வாகனங்களால்தான் ஏற்படுகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஒரு தீர்ப்பில் இருசக்கர வாகனங்கள் அனைத்திலும் இருபக்கங்களிலும், சக்கரங்களில் சேலை போன்ற ஆடைகள் சிக்காமல் இருக்க இரும்பு தடுப்பு வலைகள் போடப்படவேண்டும். ஓட்டுபவர்களுக்கு பக்கவாட்டிலோ, பின்புறமோ, பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் பிடித்துக்கொள்ள கைப்பிடி இருக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுபோல, ‘ஹெல்மெட்’ கண்டிப்பாக அணியவேண்டும். போக்குவரத்து விதிகளை பின்பற்றவேண்டும் என்ற விழிப்புணர்வு மோட்டார் வாகன ஓட்டிகளுக்கும் இருக்கவேண்டும். அதை செயல்படுத்தும் போலீசாரும், போக்குவரத்து துறையினரும் மிகவும் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

மேலும் செய்திகள்