போற்றப்பட வேண்டிய தலைவர்களுக்கு அவமதிப்பா?

நாடு முழுவதும் இப்போது இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படவேண்டிய ஒரு செயல் பரவிக்கொண்டுவருவது வேதனை அளிக்கிறது.

Update: 2018-03-08 21:30 GMT
நாடு முழுவதும் இப்போது இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படவேண்டிய ஒரு செயல் பரவிக்கொண்டுவருவது வேதனை அளிக்கிறது. சமீபத்தில் திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றது. அதன்பின்னர் பெலோனியா நகரில் உள்ள கம்யூனிஸ்டு தலைவர் லெனின் சிலை ஜே.சி.பி. எந்திரத்தால் இடித்து சாய்க்கப்பட்டது. போதாக்குறைக்கு தமிழ்நாட்டில் ஒரு ‘முகநூல்’ பதிவில் தேவையில்லாமல் தந்தை பெரியார் சிலை பற்றி ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பின்பு திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடே கொந்தளித்தது.

பெரியாருக்கு ஒரு அவமதிப்பு என்றால், ஒட்டுமொத்த தமிழக மக்களும் அதை தாங்கிக்கொள்ளமாட்டார்கள். தமிழ்நாட்டைப்போல, உத்தரபிரதேசத்தில் 4 இடங்களில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. கொல்கத்தாவில் பாரதீய ஜனசங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி சிலை சேதப்படுத்தப்பட்டது. எல்லோரும் வெறுக்கத்தக்க, வருந்தத்தக்க, தேவையற்ற இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் வி‌ஷக்கிருமிபோல் பரவுவது நல்லதல்ல. தந்தை பெரியார் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, தமிழ் இனத்தின் தனிப்பெரும் தலைவர், தமிழ் சமுதாயத்தை தன்மானமிக்க சமுதாயமாக, தலைநிமிரும் சமுதாயமாக மாற்றி அமைக்கும் முறையில் சமுதாய புரட்சி செய்தவர். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றநிலையை போக்கவும், பெண்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடையச்செய்யவும், மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தவும் என பல்வேறு சமுதாய சீர்திருத்தங்களுக்காக பாடுபட்டவர். அரசியலில் பதவி அடையவேண்டும் என்பதற்காக அவர் திராவிடர் கழகத்தை தொடங்கவில்லை. அவருடைய இயக்கம் ஒருபோதும் தேர்தலில் போட்டியிடவில்லை. மாற்றுக்கட்சியினரையும் மதிக்கும் பண்பாளர் என்பதால்தான், காமராஜரை பச்சை தமிழர் என்று அழைத்தார். தமிழ்ச்சமுதாயத்திற்கே தந்தை ஸ்தானத்தில் இருந்ததால்தான் அவரை தந்தை பெரியார் என்று தமிழ் சமுதாயம் அழைத்தது. 1938–ல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில்தான் பெரியார் என்ற பட்டம் சூட்டப்பட்டது.

மாபெரும் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்தப்படுவதற்கு பிரதமர் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்து, உள்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாவட்ட கலெக்டர்களும், போலீஸ் சூப்பிரண்டுகளும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. மறைந்த தலைவர்கள், அரசியல் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்தப்பட்டால், அந்த மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகள் பொறுப்பேற்கவேண்டும். கைது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். சமூகவிரோத சக்திகள், சமூக வலைதளங்கள், வதந்திகளை பரப்புவோரை போலீசார் தீவிரமாக கண்காணித்து, யாராவது வன்முறையில் ஈடுபட்டாலோ, தூண்டிவிட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி தலைவர்களும், மறைந்த அண்ணா சொன்னதைபோல, ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்று சொன்ன கருத்தை, அவரவர் கட்சியினர் அனைவருடைய நெஞ்சில் பதியவைத்து, அரசியலில் ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், மறைந்த தலைவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள், மதிக்கப்படவேண்டியவர்கள், வணங்கப்படவேண்டியவர்கள் என்பதை எப்போதும் நினைவில்கொள்ள செய்யவேண்டும். தமிழ்நாட்டில் இந்த பண்பு மறைந்துவிடக்கூடாது. தமிழக அரசும், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுபோல, இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்