பல்கலைக்கழக நியமனங்களில் வெளிப்படைத்தன்மை

பழைய காலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் கல்வியில் சிறந்து விளங்கியது.

Update: 2018-03-14 02:08 GMT
பழைய காலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் கல்வியில் சிறந்து விளங்கியது. அதிலும் குறிப்பாக, உயர்கல்வியில் தமிழ்நாட்டுக்கு ஈடு இணையே இல்லாதநிலை இருந்தது. அப்போது ‘மெட்ராஸ் யுனிவர்சிட்டி’ என்று அழைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகம் மட்டுமே இருந்தது. சென்னை முதல் நாகர்கோவில் வரையில் அனைத்துக் கல்லூரிகளும் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ்தான் இயங்கி வந்தன. அப்போதிருந்த கல்வித்தரத்தை கண்டு, இந்தியா மட்டுமல்ல உலகமே வியந்தது. சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் என்றால் ஒரு தனி மவுசு இருந்தது. மேல்படிப்புக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உடனடியாக இடம்கிடைத்தது. காலப்போக்கில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஆங்காங்கு உருவாகி, தற்போது தமிழ்நாட்டில் 22 பல்கலைக்கழகங்கள் அரசு பல்கலைக்கழகங்களாகவும், இதுதவிர தனியாருக்கு சொந்தமான ஏராளமான நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன.

முன்பெல்லாம் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்காக ‘தேடல் குழு’ அமைக்கப்பட்டால், அந்த தேடல்குழுவிற்கு யாரும் விண்ணப்பம் செய்வது இல்லை. சிறந்த கல்வியாளர்களை தேடல்குழுவினர் தேடிப்பிடித்து நீங்கள்தான் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து நிர்ப்பந்தப்படுத்தி நியமனம் நடக்கும். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு, பலர் விண்ணப்பித்து அதில் 3 பேரை தேர்ந்தெடுத்து கவர்னருக்கு அனுப்புகிறார்கள். அதில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கடந்தசில ஆண்டுகளாக பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திலும், அதைத்தொடர்ந்து பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் நியமனங்களிலும் நிறைய முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்தநிலையில், கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றவுடன், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் யாரும் குறைசொல்ல முடியாத அளவிற்கு நேர்முகத்தேர்வு வைத்து நியமனங்களை செய்தார்.

சமீபத்தில் கவர்னர் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டி, “பல்கலைக்கழக நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும். முறைகேடுகளையும், தகுதியற்றவர்கள் நியமிக்கப்படும் நிலையையும் முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். பல்கலைக்கழகங்களில் என்ன நடக்கிறது? என்று எனக்குத்தெரியும். யாருக்கும் பயப்படவேண்டாம். ஏதாவது பிரச்சினை இருந்தால், என்னை எப்போதும் வந்து சந்திக்கலாம். பல்கலைக்கழகங்களில் தகுதியுள்ளவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பை பெறுகிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படவேண்டும். அந்தந்த பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் கல்வித்தரத்தை தேசியஅளவில் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் துணைவேந்தர்கள் செயல்படவேண்டும். துணைவேந்தர்கள் நேர்மையாகவும், கல்வித்தரத்தை உயர்த்தும் வகையிலான செயல்பாடுகளிலும் ஈடுபடவேண்டும். மாணவர்களுக்கு உடனடியாக வேலைகிடைக்கும் வகையில், பாடத்திட்டங்களின் தரத்தை உயர்த்தவேண்டும், டெண்டர் விடுவதிலும் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும்” என்பது போன்று நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்த துணைவேந்தர்களிடம் பல கருத்துகளை வெளியிட்டுள்ளார். நிச்சயமாக கவர்னர் கூறிய ஆலோசனைகள் மிகவும் வரவேற்கத்தக்கது. இனி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் முதல் கடைநிலை ஊழியர் வரை நியமனங்கள் தகுதி, திறமையின் அடிப்படையில் தான் இருக்கவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மீண்டும் ஒரு உத்வேகம் ஏற்பட்டு, இழந்த பெருமையை பெறுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். வேந்தர் என்ற முறையில் கவர்னர் வழியைக்காட்டிவிட்டார். இனி அந்தப்பாதையில் செல்ல வேண்டியது பல்கலைக்கழகங்களின் கடமை.

மேலும் செய்திகள்