மக்களை தேடிச் செல்லும் அதிகாரிகள்

மறைந்த பிரதமர் நேருவும், தமிழக முதல்–அமைச்சர் பேரறிஞர் அண்ணாவும் எப்போதும் 5–ம் நூற்றாண்டு சீன அறிஞர் லாவோ சூ கூறிய ஒரு பழமொழியை சொல்வது வழக்கம்.

Update: 2018-04-05 20:55 GMT
உலகம் முழுவதும் இன்றளவும் பேசப்படும் அந்த பழமொழி என்னவென்றால், ‘‘மக்களிடம் செல், அவர்களோடு வாழ்க்கை நடத்து, அவர்களிடம் இருந்து கற்றுக்கொள். அவர்களுக்கு தெரிந்தவற்றில் இருந்து தொடங்கு, அவர்களிடம் இருப்பதில் இருந்து கட்டுமானத்தை மேற்கொள்’’ என்பதாகும். இதைத்தான் எல்லோரும் பின்பற்றவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தனது மனிதாபிமான நடவடிக்கையாக எல்லோரும் பாராட்டத்தக்க ஒரு செயலை செய்திருக்கிறார். கடந்த மார்ச் 2–ந்தேதி கரூர் மாவட்ட கலெக்டராக பதவியேற்ற அன்பழகன் பல மனிதாப செயல்களை செய்துவருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்த விவசாயிகளை, அவரே தேடிச்சென்று அன்போடு தனது அறைக்கு அழைத்துவந்து அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கடந்தமாதம் 28–ந்தேதி அந்த மாவட்டத்தில் உள்ள மூக்கானாங்குறிச்சி என்ற ஊரில் மனுநீதி முகாம் நடத்தினார். அப்போது, அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரியிடம் இந்தப்பகுதியில் ஆதரவற்ற முதியவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டார். உடனே, அந்த கிராம நிர்வாக அதிகாரி இங்கு சின்னமநாயக்கன்பட்டி என்ற ஊரில் 80 வயதான ராக்கம்மாள் என்ற  பெண் இருக்கிறார். வயது முதிர்ந்து மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் அவரால் எந்தவேலையும் செய்யமுடியாமல், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வறுமையால் வாடிவருகிறார். இன்னும் அவருக்கு முதியோர் பென்சன் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.

ஒரு சிறிய ஓலைக்குடிசையில் வசித்துவரும் அந்த வயதான பெண்ணைத்தேடி, தன்வீட்டில் சமைத்த உணவை எடுத்துக்கொண்டு கலெக்டர் அவருடைய வீட்டிற்கே சென்றார். வாழை இலை விரித்து அந்தக்குடிசையிலே தானும் உட்கார்ந்து அந்தப்பெண்ணுக்கு உணவு பரிமாறி அவரோடு அமர்ந்து சாப்பிட்ட செயலைபார்த்தவுடன், அந்த வயதான பெண்ணுக்கு கண்ணீர் ததும்பிநின்றது. தன் வீட்டிலிருந்து கொண்டு வந்த சாதம், பொறியல், வடை, சாம்பார், கோழிக்குழம்பு, ரசம், மோர் போன்றவற்றை வழங்கியதோடு மட்டுமல்லாமல், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்வகையில் முதியோர் பென்சனுக்கான உத்தரவையும் அந்தப்பெண்ணின் கையில் கொடுத்தார்.

மாவட்ட கலெக்டரின் இந்தசெயல், அந்த மாவட்ட அலுவலர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்தது. மக்கள் தங்கள் குறைகளுக்காக அதிகாரிகளை தேடிவருவதற்கு பதிலாக, அதிகாரிகளே, ஏழை–எளிய, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களை தேடிச்சென்று அவர்கள் குறைகளை ஒரு காலக்கெடு வைத்து தீர்த்தால் மக்களுக்கும் நம்மை கவனிக்க அரசாங்கம் இருக்கிறது. அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள் என்ற மனமகிழ்ச்சி இருக்கும். அதிகாரிகள் காரியத்திலும் கண்ணாக இருந்து பணிவோடும் இருக்கும்வகையில் தங்கள் கடமையை ஆற்றினால்தான் ஏழை–எளிய மக்கள், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், வறுமையால் தவிப்பவர்கள், ஆதரவற்றோர் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படும். அரசு அலுவலகங்களை தேடிச்செல்லும் மக்களிடம், அரசு ஊழியர்கள் அன்பாக நடந்துகொண்டு அவர்கள் குறையை தீர்ப்பதுதான் தங்கள் கடமை என்றவகையில் செயல்பட்டால் அரசு நிர்வாகம் தழைக்கும்.

மேலும் செய்திகள்