கனரக வாகனங்களின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள்

காற்றில் மாசு ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகைதான்.

Update: 2018-04-09 22:00 GMT
டல் நலத்திற்கு சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகும். கசங்காத காற்றும், களங்கப்படாத நீரும், தெளிவான மண்ணும், கண்ணுக்கு எட்டும் தூரம்வரை புகைமண்டலம் இல்லாமல் காட்சியளிக்கும் வானமும் இருந்தால், அங்கு இருக்கும் மக்களின் இதயம் இம்சையுறாமல், நுரையீரல் நசுங்காமல், கல்லீரல் காயப்படாமல் காப்பாற்றப்படும். உலகில் சில நாடுகளில் காற்றில் கார்பன்–டை–ஆக்சைடு என்று சொல்லப்படும் கரியமில வாயுவின் அளவு குறைவாக இருக்கிறது. இந்தியாவிலும், குறிப்பாக நகர்ப்புறங்களிலும் காற்று சுவாசிக்கத்தகுந்ததாக இல்லாமல், கார்பன்–டை–ஆக்சைடு அளவு அதிகரித்தவண்ணம் உள்ளது. காற்றில் 0.03 சதவீதம் மட்டும்தான் கார்பன்–டை–ஆக்சைடு இருக்க வேண்டும். அது அதிகரித்தால் மனிதனின் நுரையீரல் பாதிக்கப்படும். சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. காசநோய் ஏற்படுவதற்கும் ஒரு காரணமாகிவிடுகிறது. அந்தப்பகுதியில் பலருக்கும் வியாதிகள் வந்து வீழ்த்திவிடும். காற்றில் மாசு அதிகரித்தால் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்துவிடும். எனவே, மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு சுற்றுச்சூழலில்தான் சூட்சமம் இருக்கிறது.

காற்றில் மாசு ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகைதான். இந்தப்புகை அளவு கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது காற்றில் பரவி அந்தப்பகுதி மக்கள் பல சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமமாகிவிடும். எனவேதான் உலகம் முழுவதிலும் மோட்டார் வாகனங்களிலிருந்து வெளிவரும் மாசை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பில் வாகன புகை மிகமுக்கியப்பங்கு வகிக்கிறது. எனவேதான் மத்திய அரசு கடந்த ஆண்டு பாரத்–மிக்ஷி புகைக்கட்டுப்பாட்டுடன் கூடிய வாகனங்களை உற்பத்திச்செய்யவேண்டும் என்று கட்டளையிட்டது. 2020–ம் ஆண்டிலிருந்து பாரத்–க்ஷிமி என்ற அளவீட்டைக் கொண்டதாக வாகனங்கள் தயாரிக்கப்படவேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. தற்போது மேலும் ஒரு முக்கிய முடிவை எடுக்க இருக்கிறது. 2020–ம் ஆண்டு முதல் 20 ஆண்டுகள் பழமையான அனைத்து வணிக வாகனங்களும் கழிக்கப்பட்டுவிடவேண்டும். ரோட்டில் ஓடக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்க இருக்கிறது. 

சாலையில் பெரும்பகுதி வாகன மாசு 2001 முதல் 2011 வரை தயாரிக்கப்பட்ட 94 லட்சம் வாகனங்களால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 20 சதவீதம் வரையுள்ள வாகன மாசுக்கு காரணமாக இருக்கும். அரசின் கணக்குப்படி அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில், 3 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் கழித்து அடித்து நொறுக்கப்படும் என்று தெரிகிறது. இவ்வாறு கழிக்கப்பட்டு, அடித்து நொறுக்கப்படும் வாகன உரிமையாளர்கள் அந்த வாகனத்திற்கு பதிலாக புதியவாகனங்கள் வாங்கும்போது அதற்கு வரிச்சலுகையும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. வாகன உற்பத்தியாளர்களும் புதிய வாகனங்கள் வாங்கும்போது அவர்களுக்கு தள்ளுபடி விலை வழங்குவார்கள். இது நிச்சயமாக நல்லமுடிவு. இதுபோல, பழைய வாகனங்களை அடித்து நொறுக்கும் ‘‘ஜங்க் யார்டு’’ என்று கூறப்படும் நிலையங்கள் தொடங்கப்படுவதற்கு தனியாருக்கும் ஊக்கம் அளிக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், இப்போது ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை புகை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வாங்கவேண்டும் என்ற விதி இருக்கிறது. அந்த விதி தமிழ்நாட்டில் சரியாக அமல்படுத்தப்படவில்லை. அதையும் அரசு தீவிரமாக அமல்படுத்தவேண்டும்.

மேலும் செய்திகள்