கள்ளக்கடத்தலில் டீசல்

விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும், சுங்க இலாகா அதிகாரிகளும், வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளும் தங்கம் கடத்திவரப்படுகிறதா?, வைரம் கடத்திவரப்படுகிறதா?, போதைப்பொருட்கள் கடத்திவரப்படுகிறதா? என்று கண்கொத்தி பாம்புபோல கண்காணிப்பார்கள்.

Update: 2018-04-22 21:30 GMT
விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும், சுங்க இலாகா அதிகாரிகளும், வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளும் தங்கம் கடத்திவரப்படுகிறதா?, வைரம் கடத்திவரப்படுகிறதா?, போதைப்பொருட்கள் கடத்திவரப்படுகிறதா? என்று கண்கொத்தி பாம்புபோல கண்காணிப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் இதுவரை யாரும் கேள்விப்படாத ஒரு கள்ளக்கடத்தலாக சென்னை துறைமுகத்திற்கு துபாயில் இருந்து கன்டெய்னர்களில் டீசல் கடத்தி கொண்டுவந்த ஒரு சம்பவத்தை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆந்திர மாநில உளவுப்பிரிவு போலீசார் கொடுத்த தகவலின்பேரில், ஐதராபாத் மற்றும் சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு அதிகாரிகள் துபாயில் இருந்து ‘தாது எண்ணெய்’ என்றபெயரில் கொண்டுவரப்பட்ட கன்டெய்னரை சோதனை செய்தபோது, அதில் டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடத்தல்காரர்கள் 

14 கன்டெய்னர்களில் 3 லட்சம் லிட்டர் டீசலை கடத்திவந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக ஹவாலா பரிமாற்றத்துக்காக செயல்பட்டவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் இதுவரை 285 கன்டெய்னர்களில் 63 லட்சம் லிட்டர் டீசல் இந்த கோஷ்டியினால் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்தி கொண்டுவரப்படும் டீசலை வைப்பதற்கு ஒரு சேமிப்புகிடங்கு சென்னை அருகே உள்ள மறைமலைநகரில் இயங்கி இருக்கிறது. கடத்தலையும், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் டீசலை வினியோகம் செய்யும் பணிகளை கவனிக்கவும் கிண்டியில் ஒரு அலுவலகமே இயங்கி இருக்கிறது. ஆக, சென்னையிலும், ஆந்திராவிலும் விற்கப்படும் டீசலின் விலையைவிட, குறைவான விலைக்கு வாங்கி விற்பதற்கு ஒரு கும்பலே இயங்கி வந்திருக்கிறது. இதற்கு காரணம், பெட்ரோல்–டீசல் விலை ஒவ்வொரு நாளும் அபரிமிதமாக உயர்ந்துகொண்டே இருப்பதுதான். கடந்த 55 மாதங்களில் இல்லாதவகையில் தற்போது விலை உயர்வு ஏற்பட்டு இருக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கத்தை கருத்தில்கொண்டே இந்தியாவிலும், விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை. 

2013–ல் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலருக்குமேல் இருந்தநேரத்தில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.85 காசாகத்தான் இருந்தது. ஆனால் நேற்று கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 74.06 டாலர்தான். இவ்வாறு கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்நேரத்திலும், நேற்று சென்னையில் பெட்ரோல்–டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.23–ம், ரூ.69.30–ம் இருந்தது. இதற்கு காரணம் மத்திய அரசாங்கத்தின் சுங்கவரியும், மாநில அரசுகளின் மதிப்புக்கூட்டு வரியும்தான், எல்லா வரிகளுக்கும் மாற்றாக சரக்கு சேவைவரி வந்துவிட்டது. ஆனால், பெட்ரோல்–டீசல் வரி மட்டும் சரக்கு சேவைவரி வரம்புக்குள் இல்லாததுதான் இவ்வளவு விலை உயர்வுக்கும் காரணம். இதுபோன்ற கள்ளக்கடத்தலுக்கும் வழிவகுக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்றுகூட பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இவ்வாறு பெட்ரோல்–டீசல் விலையை சரக்கு சேவைவரிக்குள் கொண்டுவருவது குறித்து மத்திய–மாநில அரசுகள் சிந்தித்துக்கொண்டிருக்கின்றன என்று கூறினார். ஆகவே, இனியும் தாமதம் வேண்டாம். பெட்ரோல்–டீசல் விலையை சரக்கு சேவைவரி வரம்புக்குள் கொண்டுவருவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுத்தால்தான், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியதுபோல, சாதாரண மனிதனுக்கு நிவாரணம் கிடைக்கும்.

மேலும் செய்திகள்