மீனவர்களுக்கு பிரதமரின் பரிசு

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவன் பணியாற்றுவது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாகும்.

Update: 2018-04-30 19:11 GMT
நம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அதுவும் குக்கிராமத்தைச் சேர்ந்தவர் இந்தளவுக்கு ஒரு முக்கிய பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்து தமிழர்கள் அனைவரும் பூரிப்படைகிறார்கள். கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் வசதிக்காக ஒரு புதிய கருவியை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் கடந்த 4 ஆண்டுகளாக இஸ்ரோ ஈடுபட்டு வந்தது. இந்த ஆராய்ச்சி இப்போது வெற்றி பெற்றுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குள் பிரதமர் நரேந்திரமோடி மீனவர்களின் பயன்பாட்டுக்காக இந்த புதிய கருவியை அறிமுகப்படுத்த இருக்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி ‘ஒகி’ புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. இந்த புயல் பற்றிய அபாய எச்சரிக்கையை மீன்பிடிக்கச் சென்றிருக்கும் மீனவர்களுக்கு சரியாக தெரிவிக்க முடியாததால், ஏராளமான மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். 200-க்கும் மேற்பட்ட மீனவர்களை இன்னமும் காணவில்லை. இதுபோன்ற நிலைமை இனிமேலும் ஏற்படக்கூடாது என்பதுதான் எல்லோருடைய எண்ணமும் ஆகும். இஸ்ரோ கண்டுபிடித்த ‘நாவிக்’ என்று கூறப்படும் இந்த கருவி பரீட்சார்ந்தமாக கன்னியாகுமரி மீனவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்தக்கருவி இந்தியாவின் ஜி.பி.எஸ். என்று அழைக்கப்படுகிறது. கடலில் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களுக்கு இந்தக்கருவி மூலம் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலை இது தெரிவிக்கும். அதற்கு மேலாக வானிலை எச்சரிக்கைகள், வானிலை முன்அறிவிப்புகள், புயல், சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படப்போகிறது என்றால், அதை முன்கூட்டியே மீனவர்களுக்கு ஒலிபரப்பவும், தமிழில் தகவல் கூறவும் முடியும். இந்த எச்சரிக்கை கரையிலிருந்து கட்டுப்பாட்டு அறை மூலம் அவர்களுக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் செல்லும் படகில் பொருத்தப்பட்டுள்ள கருவி இந்த எச்சரிக்கையைப் பெற்று ‘புளு டூத்’ இணைப்பு மூலம் மீனவர்கள் கையில் வைத்திருக்கும் மொபைல் போன்களுக்கு தெரிவிக்கும். படகில் பொருத்தப்படாமல் இந்த ரிசீவரை செல்போனில் நேரடியாக இணைத்துக்கொள்ளும் அளவுக்கு அதன் அளவு இல்லாமல் இருப்பதால், அதன் அளவையும் குறைப்பதற்கான ஆராய்ச்சியை இஸ்ரோ நிறுவனம் மேற்கொண்டது.

மேலும் இந்தக்கருவி மூலம் எந்த இடத்தில் மீன்வளம் அதிகமாக இருக்கிறது என்பதையும், அவர்கள் எவ்வளவு தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். நிச்சயமாக இந்த ‘நாவிக்’ கருவி மீனவர்களின் ஆபத்பாந்தவனாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும். ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு மிகவிரைவில் ‘நாவிக்’ வழங்கப்பட இருக்கிறது. இந்தக்கருவி பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்கச்செல்லும் ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு நிச்சயமாக பெரும் பலன் அளிக்கும். அடுத்தகட்டமாக, அந்தப்பகுதி மீனவர்களுக்கு இந்த கருவிகளை வழங்கி தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் செல்லும் அனைத்து மீனவர்களுக்கும் இந்த ‘நாவிக்’ கருவியை வழங்க தமிழக அரசு இஸ்ரோவின் இந்த புதிய திட்டத்தில் பங்குபெற வேண்டும். இதற்கான நிதியுதவியை மத்திய அரசிடமிருந்தும் வலியுறுத்தி பெறவேண்டும். ‘பிரதமர் தரப்போகும் இந்த பரிசு’ நிச்சயமாக தமிழக மீனவர்களுக்கு சிறந்த பரிசாகும்.

மேலும் செய்திகள்