‘லக்கேஜ்’ கொண்டுபோக வசதி

மக்கள் போக்குவரத்தில் ரெயில்வே மிக இன்றியமையாத பணிகளை ஆற்றி வருகிறது. மக்கள் ரெயில் பயணங்களை நாடிச்செல்வதற்கு முக்கியகாரணம் குறைவான கட்டணத்தில் நிறைவான பயணம். தூங்கும்வசதி, கழிப்பறைவசதி இருப்பதுதான்.

Update: 2018-07-10 21:30 GMT
க்கள் போக்குவரத்தில் ரெயில்வே மிக இன்றியமையாத பணிகளை ஆற்றி வருகிறது. மக்கள் ரெயில் பயணங்களை நாடிச்செல்வதற்கு முக்கியகாரணம் குறைவான கட்டணத்தில் நிறைவான பயணம். தூங்கும்வசதி, கழிப்பறைவசதி இருப்பதுதான். பல ரெயில்களில் ‘குறைவான லக்கேஜ்’, அதிகமான வசதி; பயணத்தை இனிதாக்குங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் சில பயணிகள் ஏராளமான ‘லக்கேஜ்’களை கொண்டுவந்து சீட்டுக்கு அடியில் மட்டுமல்லாமல், நடுவிலும், வழியிலும், கதவுகள் பக்கத்திலும் போட்டுவைத்து மற்ற பயணிகள் கை–கால்களை நீட்டவோ, எளிதாக ஏறி, இறங்குவதற்கு முடியாமலோ பயணத்தை மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடுகிறார்கள். சிலநேரங்களில் குறைந்ததூரத்தில் செல்லும் வியாபாரிகளும் மூட்டைகளை கொண்டுவந்து பயணிகள் பெட்டியில் போட்டுவிடுகிறார்கள். இவ்வளவுக்கும் ஒரு பயணி ரெயிலில் எவ்வளவு லக்கேஜை கொண்டுபோகவேண்டும் என்ற விதி இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இருக்கும் இந்த விதியை யாருமே பின்பற்றுவதில்லை. 

இந்த விதிகளை இப்போது கடுமையாக நடைமுறைப்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. அதன்படி, 2–வது வகுப்பில் பயணம் செய்யும் பயணி தன்னுடன் 35 கிலோ லக்கேஜையும், மேலும் 35 கிலோ வரை லக்கேஜை பணம் கட்டி அதேரெயிலில் லக்கேஜ் வேனில் எடுத்துச்செல்லலாம். 2–வது வகுப்பு படுக்கை வசதி பெட்டி பயணி தன்னுடன் 40 கிலோவும், லக்கேஜ் வேனில் 40 கிலோவும், 3–வது வகுப்பு ஏ.சி. பெட்டி பயணி 40 கிலோவும், மேலும் 40 கிலோ லக்கேஜ் வேனிலும், 2–வது வகுப்பு ஏ.சி. பெட்டி பயணி 50 கிலோவும், மேலும் 50 கிலோ லக்கேஜ் வேனிலும், முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி பயணி 70 கிலோவும், லக்கேஜ் வேனில் 80 கிலோவும் ஏற்றிச்செல்லலாம். இதுபோக, பயணிகள் தங்கள் பயணம்செய்யும் பெட்டியில் எடுத்துச்செல்லும் டிரங்க்பெட்டிகள், சூட்கேஸ்கள் மற்றும் இதரபெட்டிகள் 100 செ.மீ. நீளம், 60 செ.மீ. அகலம் மற்றும் 25 செ.மீ. உயரம் வரைதான் எடுத்துச்செல்லமுடியும். இதற்குமேல் உள்ள பெட்டிகள் பணம் கட்டி ‘லக்கேஜ்’ வேனில்தான் கொண்டுசெல்லமுடியும். இந்த விதிகளைமீறி ரெயில் பயணிகள் தங்களுடன் ‘லக்கேஜ்’களை கொண்டுசெல்வதை கண்டுபிடித்தால் 6 மடங்குவரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிச்சயமாக இது நல்லமுறைதான். வரவேற்கத்தகுந்ததுதான். எல்லோருடைய பயணமும் இனிமையாகும் என்பதில் சந்தேகமில்லைதான். அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் நுழையும்போதே ‘லக்கேஜ்’களை எடைபார்க்கும் வசதிகள் இருக்கவேண்டும். யாரும் காத்திருக்கவேண்டிய நிலை இருக்கக்கூடாது. இதுபோல, ‘லக்கேஜ்’ வேன்களில் கொண்டுசெல்லும் லக்கேஜ்களை, அந்தந்த ரெயில் நிலையங்களில் ரெயில் புறப்படுவதற்குள் ஏற்றிவைப்பது யார்?, இறக்கிவைப்பது யார்?. சில ரெயில் நிலையங்களில் ரெயில் ஓரிரு நிமிடங்கள்தான் நிற்கும். அப்படியிருக்கும்போது பயணிகள் பயணம்செய்யும் பெட்டியில் இருந்து இறங்கி ‘லக்கேஜ்’ வேனுக்கு வருவதற்குள் ரெயில் புறப்பட்டுவிடும். ஆக, அவர்களுடைய ‘லக்கேஜ்’கள் பத்திரமாக இறக்கிவைத்து உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான வசதிகளையும் ரெயில்வே நிர்வாகம் உறுதிசெய்யவேண்டும். எனவே, பயணிகளிடம் கடுமையான விதிகளை நிறைவேற்றும்போது, அதற்குரிய வசதிகளை செய்துகொடுக்கும் பொறுப்பும் ரெயில்வே நிர்வாகத்துக்கு இருக்கிறது.

மேலும் செய்திகள்