வலையில் சிக்கிய மீன்

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்தியாவின் முதல் நிதி மந்திரியாக இருந்த சர் ஜேம்ஸ் வில்சன் 1860–ம் ஆண்டு ஜூலை 24–ந்தேதி வருமானவரி விதிக்கும் முறையை தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-12 21:30 GMT
ங்கிலேயர்கள் ஆட்சியில் இந்தியாவின் முதல் நிதி மந்திரியாக இருந்த சர் ஜேம்ஸ் வில்சன் 1860–ம் ஆண்டு ஜூலை 24–ந்தேதி வருமானவரி விதிக்கும் முறையை தொடங்கி வைத்தார். ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய செல்வந்தர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் மட்டுமே இந்த வரி விதிக்கப்பட்டது. இப்படி படிப்படியாக வருமானவரி விதிக்கும்முறை திருத்தி அமைக்கப்பட்டு, தற்போது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குமேல் இருப்பவர்களுக்கு வருமானவரி வசூலிக்கப்படுகிறது.

2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி இரவில் பிரதமர் நரேந்திரமோடி டெலிவி‌ஷனில் திடீரென உரையாற்றினார். அந்த உரையில், அன்று நள்ளிரவு முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது தங்களிடம் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் எந்தவித வரம்பும் இல்லாமல் வங்கிகளிலோ, தபால் அலுவலக கணக்குகளிலோ டெபாசிட் செய்யலாம். உங்கள் பணம், உங்கள் பணமாகவே இருக்கும். எதற்கும் கவலைப்படவேண்டாம். உங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் அந்த பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார். பிரதமரின் அறிவிப்பை நம்பி, பொதுமக்கள் தாங்கள் வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டி அவசர தேவைகளுக்காக எறும்புபோல, நீண்டகாலமாக அந்த குடும்பத்தில் உள்ள பலரும் சேர்ந்து சிறுக சிறுக சேர்த்துவைத்த பணத்தையெல்லாம் வங்கிகளில் போய் கட்டினர். 15.44 லட்சம் கோடி ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 15.28 லட்சம் கோடி ரூபாய் 2017–ம் ஆண்டு ஜூன் மாதம் 30–ந்தேதி கணக்குப்படி திரும்ப வந்துவிட்டது. ஆக, அரசாங்கத்தின் கணக்குப்படி, 98.96 சதவீதம் பணம் திரும்ப வந்துவிட்டது. 1.04 சதவீத பணம்தான் கருப்புபணமாக இருந்திருக்கக்கூடும். 

பிரதமரின் உறுதிமொழியை நம்பி தங்கள் கையில் இருந்த பணத்தையெல்லாம் முதலீடு செய்தவர்கள் இப்போது வலையில் சிக்கிய மீன்போல வருமானவரியில் சிக்கித்தவிக்கிறார்கள். ரூபாய்நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியிட்டவுடன், யார்–யார் ரூ.10 லட்சத்துக்குமேல் டெபாசிட் செய்திருக்கிறார்கள்? என்று பார்த்து, அதில் யார்–யார் வருமானவரி கட்டவில்லை? என்று வருமானவரித்துறை கணக்கு எடுத்தது. ஏறத்தாழ 3 லட்சம் பேர் வருமானவரி கட்டாதவர்கள் இவ்வாறு டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதில் கடந்த மார்ச் 31–ந்தேதிக்குள் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் வருமானவரி கணக்கை தாக்கல் செய்துவிட்டனர். மீதமுள்ள 90 ஆயிரம் பேருக்கு இப்போது நோட்டீஸ் அனுப்பும்பணியில் வருமானவரித்துறை ஈடுபட்டுள்ளது. இவர்களுக்கு அவர்கள் கட்டவேண்டிய வருமானவரியில் 50 சதவீதம் முதல் 200 சதவீதம்வரை அபராதமும், தாமதமாக கட்டியதற்கு வட்டியும் சேர்த்து வசூலிக்கவும், அவர்கள்மீது வழக்குத்தொடரவும் வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது. இது நிச்சயமாக மிகவும் கடுமையான ஒரு நடவடிக்கையாகும். கருப்பு பண சட்டம், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் போன்ற பல சட்டங்களில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்ய வழியிருப்பதுபோல், வருமானவரி துறையும் இதுபோன்ற வழிகளை காணவேண்டும். பிரதமரின் உறுதிமொழியை நம்பி பணத்தை முதலீடு செய்த இந்த மக்கள் மீதும், மென்மையான வழிகளில் வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்