இந்த நேரத்தில் குற்றச்சாட்டு தேவையா?

சகோதர மாநிலமான கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 372 பேர் உயிரிழப்பு உள்பட பெரும்சேதம் ஏற்பட்டுள்ளது.

Update: 2018-08-31 22:00 GMT
கோதர மாநிலமான கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 372 பேர் உயிரிழப்பு உள்பட பெரும்சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு ஒதுக்கும் பட்ஜெட் நிதிக்கு இணையாக இப்போது வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சேதத்தால் தமிழக மக்கள் துடிதுடித்து போய்விட்டனர். எல்லா மாநிலங்களுக்கும் முன்பாக தமிழகஅரசு நிவாரணத்தொகை அறிவித்தது. அனைத்து கட்சியினரும் உதவிக்கரம் நீட்டினர். தமிழக மக்கள் சகோதர பாசத்துடன் போட்டி போட்டுக்கொண்டு நிவாரண பொருட்களை அளிப்பது தினந்தோறும் நடந்து வருகிறது. இந்த துயரில் தமிழகம் பெருமளவில் பங்கேற்றுக்கொள்கிறது. 

இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒருவழக்கில் கேரளா அரசாங்கம், இவ்வளவு பெருவெள்ளத்துக்கும் தமிழ்நாடுதான் காரணம் என்பதுபோல குற்றஞ்சாட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டது இந்த பேரழிவுக்கு ஒரு காரணம் என்று கூறியுள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 139 அடிக்கு வந்தநேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை திறந்துவிடவேண்டும் என்று தமிழகஅரசை கேட்டோம். ஆனால் அவர்கள் சாதகமாக எந்தவித உத்தரவையும் கொடுக்கவில்லை. பெரியார் பாசன பிரதேசத்தில் 3–வது பெரிய அணையாக இருக்கும் முல்லை பெரியாறு அணையிலிருந்து திடீரென தண்ணீர் திறந்துவிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டியது. தமிழ்நாடு இதற்கு சரியாக பதில் அளித்தது. கேரளாவில் உள்ள இடுக்கி மற்றும் எடமலையார் அணைகளிலிருந்து 36 டி.எம்.சி. தண்ணீர் கடந்த 16–ந்தேதியிலிருந்து 19–ந் தேதிவரை திறந்துவிடப்பட்டதுதான் இந்த வெள்ளச்சேதத்திற்கு காரணம். முல்லை பெரியாறு அணையிலிருந்து கடந்த 15–ந்தேதி 1.24 டி.எம்.சி. தண்ணீரும், 16–ந்தேதி 2.02 டி.எம்.சி. தண்ணீரும்தான் திறந்துவிடப்பட்டது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோதும், 138 அடி, 140 அடி, 141 அடி, 142 அடியாக உயர்ந்துகொண்டிருந்த நேரத்தில் எல்லாம் கேரளா அரசாங்கத்துக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டு, தண்ணீர் திறந்துவிடப்படும் அளவும் அவர்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டது என்று தமிழகஅரசு மிகத்தெளிவாக தெரிவித்துவிட்டது. ஆக, இதில் தமிழகஅரசை குறைசொல்வதற்கு எதுவுமே இல்லை. 

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கவேண்டும், அதற்குமேல் தண்ணீர் தேக்கி வைக்கக்கூடாது என்று கேரளா அரசு நீண்ட நெடுநாட்களாக கேட்டுவருகிறது. ஆனால் தமிழகஅரசு சார்பில் அணையை பலப்படுத்துவதற்காக அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்பட்டநிலையில், 152 அடிவரை நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்றநிலையில் உறுதியாக இருந்தாலும், உச்சநீதிமன்றம் 142 அடி வரைதான் நீரை தேக்கிக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இவ்வளவுக்கும் முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,230 கனஅடி நீர்தான் எடுக்கமுடியும். அதற்குமேல் எடுக்க முடியாது. அதற்குமேல் உள்ள தண்ணீரை இடுக்கி அணைக்குத்தான் அனுப்பவேண்டிய கட்டாயம் உள்ளது. இது கேரளா அரசாங்கத்துக்கும் நன்றாகத் தெரியும். எனவே, இந்த துயரநேரத்தில் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற ஒரு அடித்தளம் அமைப்பதற்காக தமிழகத்தின் மீது வீண்பழியை சுமத்தாமல், தமிழக மக்களோடு கைகோர்த்து கேரள அரசு நிவாரண பணிகளில் ஈடுபடவேண்டும் என்பதே சமூகஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் செய்திகள்